30 December, 2009

ஏழு கழுதை வயசு!

”ஏழு கழுதை வயசாச்சு, இன்னும் இப்படி...” என்று துவங்கி நீண்டுசெல்லும் அர்ச்சனைகளை நீங்களும் உங்கள் தாயிடமிருந்து கேட்டிருக்கின்றீர்களா? அப்படியானால், என்னைப் போல் நீங்களும் திருப்பி “அதென்ன ஏழு கழுதை வயசு? ஒரு கழுதைக்கு எத்தனை வயசு? ஏழு கழுதைக்கு எத்தனை வயசு?” என்று கேட்டிருப்பீர்களே!

“யாருக்குத் தெரியும்! எதோ, எங்க அம்மா என்னை அப்படி திட்டுவா, நானும் அதையே சொல்றேன்; நாங்களாம் உன்னை மாதிரி எங்க அம்மாவை எதிர்த்து கேள்வி கேட்டதில்ல” என்ற விடை எனக்கு கிடைத்ததைப் போல் உங்களுக்கும் கிடைத்திருக்குமே!

ஒரு கட்டத்தில் இதைப்பற்றி (எங்களின் இம்சை தாங்காமல்) நிறைய சிந்தித்து, “கடவுள் உயிரிணங்களைப் படைத்து ஒவ்வொன்றிற்கும் ஒரு கால அளவை ஆயுளாக தர, மனிதனைத் தவிர மற்றவை எங்களுக்கு இத்தனை ஆண்டுகள் தேவையில்லை குறைத்துக் கொடுங்கள் எனக் கேட்க, கடவுளும் அவ்வாறே அருள, அவைகள் வேண்டாமென ஒதுக்கிய வாழ்நாட்களை மனிதன் தனக்கு பெற்றுக்கொண்டான், அந்த வகையில் ஏழு வயதுக்கு மேற்பட்ட வாழ்நாள் கழுதையினுடையது, அதனால் ஏழு கழுதை வயசு என்று சொல்லியிருப்பார்கள்” என்ற ஒரு விளக்கத்தை (இதன் அடிப்படையில்தான் “நாற்பது வயதில் நாய்க்குணம்” என்ற பழமொழி வழங்குவதாய் உபரி தகவலோடு) ஒருநாள் தந்தார் எங்கள் பாட்டி!

அவ்வளவில் அந்த விளக்கத்தோடு நின்றுவிட்டிருந்த என் “ஏழு கழுதை வயசு” விளக்கம், அண்மையில் நான் “புறப்பொருள் வெண்பாமாலை” நூலை வாங்கிப் படித்தபொழுது சற்று மாறிவிட்டது, அதை பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை (கருத்து சரியோ தவறோ, ஏற்புடையதோ அன்றோ, கருத்துக்களை இடுங்கள், விவாதிப்போம்)...

வெட்சி, கரந்தை என்று பொதுவாக சிலத்திணைகளை அறிந்திருந்த எனக்கு “பொதுவியல் திணை”-யில் ஒரு துறை “ஏழு கழுதை வயசை” நினைவூட்டியது, அது பின்வருமாறு,

பொதுவியற் படலம் - ஐந்தாவது துறை - ஏழகநிலை:

ஏழகம் ஊரினும் இன்னன் என்றவன்
தாழ்வில் ஊக்கமொடு தகைபுகழ்ந் தன்று.
(பு.பொ.வெ.மா - கொளு-10-5)


ஏழகம்” என்பது ஆட்டுக்கிடாய் - மன்னவன் (குதிரைக்கு பதில்) ஆட்டுக்கிடாய் ஏறி விளையாடும் வயதினனாய் இருப்பினும், ஆட்சிப்பொறுப்பை ஏற்று செவ்வனே நடத்துகையில் அவனை புகழ்வதே “ஏழகநிலை” என்பது கருத்து.

மன்னர்கள் சிறுவயதில், குதிரை ஏற போதிய உயரம் இல்லாத நிலையில், ஆட்டுக்கிடாய் ஏறி குதிரைப்போல் செலுத்தி விளையாடுவார்கள் என்பது என்வரையில் புதிய செய்தி - சங்கவிலக்கியத்தில் மிகவிளம் வயதில் ஆட்சியேற்ற, பாடல்பெற்ற ஒரே மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனே, அவன்மேல் ஏழகப்பாடல் எதுவுமில்லையே!

நம் செய்திக்கு வருவோம், ஒரு மன்னன் இளம்வயதினன் என்று வைத்துக்கொள்ளுங்கள், புலவர்கள் பாடிப்புகழும் அளவிற்கு நன்றாய் ஆட்சியும் செய்கின்றான் என்றும் கொள்ளுங்கள் - நம் நெடுஞ்செழியனைப் போல் - அன்னிலையில் அண்டைநாட்டு இளவரசன் ஒருவன் பொறுப்பின்றி திரிந்துகொண்டிருக்கிறான் என்றும் கொள்ளுங்கள், அவனது தாய் (அஃதாவது அந்நாட்டின் அரசி) அவனை எப்படி திட்டியிருப்பார்?

”அவனை (நம் கணக்குப்படி, நெடுஞ்செழியனை) பாரு, ஏழக வயசுல என்னென்ன செயல்கள் செய்யுறான், நீயும் இருக்கியே, வெட்டியா ஊரைச்சுத்திகிட்டு, வம்பு செய்துகிட்டு...” என்றுதானே!

ஒருவேளை, இந்த “ஏழக வயசுல” என்பதுதான் மருவி இன்று “ஏழு கழுதை வயசுல” என்றாகியிருக்குமோ?...

11 comments:

  1. 'எழு கழுதை' என்பது 'ஏழு கழுதை' என்று மருவியதாக என்னருமைத் தமிழாசிரியர் மங்கலமன்னன் விளக்கியிருக்கிறார். "அய்யா, திட்டுறதோ திட்டுறீங்க பொருள் சொல்லிட்டுத் திட்டுங்க"னு கேட்டுக்கிட்டதுக்கு அவர் விளக்கம் கொடுத்துப் பிறகு திட்டினாரு. இல்லே திட்டின பிறகு விளக்கம் கொடுத்தாரு. ஏதோ ஒண்ணு.

    அதாவது சுமை ஏற்ற ஏற்ற கழுதை எழுந்து நடக்குமாம் ("கழுதை எப்ப உக்காந்துச்சு ஐயா" என்று கேட்டதற்கும் சூடாகப் பதில் கிடைத்தது). குட்டிக்கழுதை என்றால் சுமை ஏற்றியதும் உட்கார்ந்து விடுமாம். பொதி சுமக்கும் நிலை வந்த கழுதை மட்டுமே எழுந்து (அல்லது உட்காராமல்) நடக்குமாம்.

    குடும்பச்சுமைக்குத் தயாரான வயதைக்குறிப்பிட அப்படிச் சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. கேள்விக்கு மன்னிக்கவும்...

      நீங்கள் கூறியது கழுதை வயதா இல்லை ஏழு கழுதை வயதா...

      Delete
    2. கழுதையின் வயது

      Delete
    3. More apt than any other explanation

      Delete
  2. ஆஹா.. அருமையான விளக்கம்.. இதுபோன்று மேலும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.. நன்றி..

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்

    ReplyDelete
  4. ஏழு+ஏழு-49 நன்றி.

    ReplyDelete
  5. அருமை அருமை ஐயா......

    ReplyDelete
  6. என்னக்கு ஒனும் புரியல

    ReplyDelete
  7. ஒரு கழுதைக்கு என்ன வயசு

    ReplyDelete