04 December, 2009

நடுக்கமும் நகையும்!

சமுதாயத்தில் ஆண்கள் பெண்களை எத்தனையோ படுத்துகின்றனர், உண்மைதான்! ஆனால், காதல் என்று வந்துவிட்டால் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு திண்டாடுவதுதான் நடக்கிறது! ‘ஓ...! இவன் காதலி இவனைப் போட்டுப் படுத்தியெடுக்குறாப் போல!’ -என்று நினைத்து விடாதீர்கள் (அது உண்மையே என்றாலும், அதை இங்கு சொல்லி, அவள் படித்துவிட்டால் பிறகு என் நிலை என்னாவது - அதனால் அதற்கெல்லாம் நாம் செல்ல வேண்டாம்!) ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஒரு காதலன் பட்ட பாட்டை சொல்லவே யாம் முனைகிறோம்....

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பா? எனின், சங்க காலத்திலா? புலியோடும் யானையோடும் போரிட்ட வீரத்தமிழனா காதலியிடம் பாடுபட்டான்?... - உங்கள் ஐயம் புரிகிறது!

தமிழன் வீரனேதான்! அவன் (தலைவன்) புலியோடு சண்டையிட்டுக் கொண்டே இருந்திருக்கலாம், குறிஞ்சியில் ஒருத்தியை (தலைவி) காதலித்து மணந்து கொண்டு மருதத்தில் வேறொருத்தியிடமும் (காதற்பரத்தை) சிக்கியிருக்கிறான்... அதனால் வந்த வினை!

காதல் பொங்க பரத்தையை, அவளது மணமிக்க கூந்தலைப் பற்றி, தன்பக்கம் இழுத்துத் தன்மடியில் அவளை அமர வைத்து, மிக்க வேலைபாடுள்ள அவளது கைவளைகளைக் கழட்டிக் (காதல் விளையாட்டு) விளையாடியுள்ளான்... பிறகு விதி விளையாடியிருக்கிறது - காதற்பரத்தையும் ஊடலை மேற்கொண்டுவிட்டாள்!

அந்தக் கோவத்தில் அவள் “அன்று நீ என்னை மடியில் வைத்து என் கைவளைகள்க் கழட்டிய விளையாட்டை உன் மனைவியிடம் போய் சொல்கிறேன் பார்” என்று சொன்னதுதான் தாமதம், தலைவனின் உடல் - பகைவர்களின் ஆநிரைகளை தன் வில்லின் திறத்தால் வென்று வந்து இரவலர்களுக்குப் பரிசாகத் தரும் மலையமான் திருமுடிக்காரி-யின் முன்னிலையில் வேற்றுனாட்டுக் கூத்தர் முழக்கும் மத்தளத்தின் மண் வைத்தப் பக்கத்தைப் போல் - நடுங்கியதாம்! இதைத் தன் தோழியிடம் கூறி நகைக்கிறாள் அந்தப் பரத்தை - “அதை நினைக்கும் பொழுதெல்லாம் நான் நகுகிறேன்!” என்று...

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டுநீர் ஆம்பல் தண்துறை ஊரன்
தேங்கமழ் ஐம்பால் பற்றி என்வயின்
வான்கோல் எல்வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து ‘சினவாது சென்றுநின்
மனையோட்கு உரைப்பல்’ என்றலின் முனைஊர்ப்
பல்ஆ நெடுநிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தை பேர்இசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ஆர் கண்ணின் அதிரும்
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே!
[பரணர் - நற்றிணை - 100 மருதம்]


(தோழி! அதை நினைக்கும் போதெல்லாம் நான் நகுவேன்!

பெரிய நகமுடைய மழைக்கொக்கின் கூம்பலைப் போல ஆம்பல் மலரும் ஆழமான குளத்தினை உடைய குளிர்ந்த துறை உடைய ஊரன் தேன்மணம் கமழும் என் ஐந்து திறப்பட்ட கூந்தலை பற்றி இழுத்து தன் மடியில் என்னை அமரவைத்து மிகச்சிறந்த வேலைபாடமைந்த ஒளிபொருந்திய என் கைவளைகளை கழற்றி விளையாடிய பூசலை, இப்போது கோவத்துடன் நான் சென்று ”என் கோவத்தைக் காட்டாது உன் மனையாளுக்கு உரைப்பேன்” என்று சொன்னவுடன் - பகைவரின் ஊருக்கு முனையிலே (வெளியிலே) பலவாக திரண்ட ஆநிரைகளைத் தன் வில்லின் திறத்தால் கவர்ந்துவந்து அவற்றை இரவலர்களுக்குக் கொடையாக அளிக்கும் மலையமான் திருமுடிக்காரி என்பவனது முன்னர் வேற்றுநாட்டுக் கூத்தர் பரிசில் பெறுவதற்காக முழக்கும் மத்தளத்தின் மண்வைத்தப் பக்கம் அதிர்வதைப் போல இருந்தது - நன்மையை செய்பவரான அவரது உடலின் நடுக்கம்!)


’என் கோவத்தைக் காட்டாது சொல்வேன்’ என்றது, தான் கோவமாய் இருப்பது தெரிந்தால் தலைவன் மீது வேண்டுமென்றே புனைந்துரைப்பதாய் தலைவி நினைத்துத் தலைவனை சினவாது விட்டுவிடுவாள் என்பதினால்! அதனின் பரத்தை கூற்றைக் கேட்பின் தலைவி முனிவாள் என்பது உறுதியாக, அதை நினைக்கையிலேயே தலைவனுக்கு உடல் நடுங்குகிறது!

”என் இடம்தான் வீரமாய் பேசுவான், தன் மகனின் தாயிடம் (மனைவியிடம்) கண்ணாடியில் தெரியும் பாவையைப் போல அவள் ஆட்டுவிக்கும் வண்ணம் இவனும் ஆடுவான்!” என்று (குறுந்தொகையில் எட்டாம் பாடலில்) பரத்தை கூறுவதை உணர்ந்தால் தலைவனின் உடல் நடுங்கியதன் பொருளையும் உணரலாம்!

ஆக, இந்த இருபெண்களும் அவனை என்னமாய் ஆட்டுவிக்கின்றனர்! ஆனாலும் அவன் மீண்டும் அவர்களிடமே செல்வதைப் பார்க்கையில்,

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து (குறள் - 1102)


- என்று வள்ளுவர் உரைத்ததற்கு புதிய பொருள் கிடைக்கிறதன்றோ?...

2 comments: