22 August, 2010

இயற்பியல் இலக்கணம் - இது எப்படி இருக்கு!

ஆர்வமும் கோளாறும் சேர்ந்தால் என்ன ஆகும்? விடை கீழே... தமிழுணர்வும், இயற்பியல் அறிவும் சேர்ந்ததன் விளைவு...

பாவகைகளைக் கற்று அவற்றில் பாடல் இயற்றிப் பார்ப்பது என் ஆர்வங்களில் ஒன்று, அவ்வழியில் பண்டைத் தமிழர் அறிவுப்புலங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்திய “நூற்பா” என்னும் பா வகையில் யாத்துப் பார்க்க ஆவல் வந்தது, அதற்கான சரியான பாடுபொருள் இலக்கணமே, ஆனால் தமிழிலக்கணம் பாடும் தகுதி எனக்கில்லை என்பதினால் இயற்பியல் இலக்கணம் பாடியுள்ளேன்!

அறிவுப்புலங்களை இம்மாதிரி நூற்பாக்களாகச் செய்து வைப்பதால் அவற்றை மனப்பாடம் செய்வதும், தக்க சமயத்தில் இடத்தில் அவ்வறிவைப் பயன்படுத்துவதும் எளிதாகும், (மனப்பாடம் செய்வது ஆழ்மனதில் அப்பொருளைக் கொண்டு சேர்க்கும் என்பது என் கருத்து - மேலும் இங்கே நான் குறிப்பிடும் மனப்பாட முறையும் இன்று நம் பள்ளிகளில் கையாளப்படும் மனப்பாட முறையும் முற்றிலும் வேறானவை ஆகும்!)

மேல் குறிப்பிட்ட காரணங்களால் இயற்பியல் இலக்கணம் பயந்தரும் என்று நான் எண்ணுகிறேன், அது மெய்யா அல்லது மேலை நாட்டார் முறைகளைப் பெரிதும் பயன்படுத்தும் இற்றை நாளில் இதெல்லாம் வெட்டிவேலையா என்பதை நீங்கள்தான் கருத்துரைக்க வேண்டும் (எதிரொலிகளின் அடிப்படையில் என் முயற்சியை நான் தொடர்ந்து முடிப்பதோ அல்லது கைவிடுவதோ நிகழும் - என்னை அறிந்தவர்கள் அருள்கூர்ந்து “நன்று” என பொத்தாம் பொதுவாக கருத்து இடாமல், முடிந்தவரை அலசி ஆய்ந்து, கிழித்து தைத்து, ஆக்கப்பூர்வமாய் கருத்திட்டுப் போனால் நலம்!)

இயற்பியல் இலக்கணம்

இறை வணக்கம்

அணுவின் அணுகி இருப்பது எதுவோ
அண்டத்தின் அகண்டு நிலைப்பதும் அதுவே
இயற்கை எனினும் இறைவன் எனினும்
இயக்குவ தொன்றே இருப்பமதை வாழ்த்தியே!           0.1

அவையடக்கம்

அண்டத்தின் அகத்தே மண்டலமோர் தூசி
மண்டலத்தின் மடியில் கதிரோர் தூசி
கதிரொடு ஒட்டிய உலகோர் தூசி
உலகினில் உழலும் உயிர்கள் தூசி
உலகினில் உழலும் உயிர்தூசி ஒன்று
உணரா முதலை உரைசெய் வதுவோ!                0.2
______________________________________________________

இயல் ஒன்று - இயக்கவியல் (Mechanics)

இறைவாழ்த்து 

இயங்குவ தியக்கினை இருப்ப திருத்தினை
மயங்கும் மதிக்கு மறையாய் நின்றனை
இயக்கவியல் அறைகுவன் இளையன்
பயக்கும் பயனெலாம் நீயென போற்றியே!          1.1
___________________________________________________

நூட்டன் விதிகள் 

நிற்கும் இயங்கும் பொருட்களின் இயல்பை
கற்கும் படிமூன்று கருகோள் கொண்டு
நூட்டன் என்பான் நுதலிய விதிகளை
காட்டுதும் ஈண்டு ஐயற அறிகவே,                         1.2

முதலே,
நிற்பவை நகரா நகர்வன நில்லா
உற்றோர் புறவிசை உறழ்த்தல் இன்றேல்.        1.3

(இயக்கம் இன்றி இருப்பவையும், இயக்கத்தொடு இருப்பவையும் வெளியிலிருந்து ஒரு புறவிசை [External Force] செயல்பட்டால் அன்றி தத்தமது இயக்கதிலிருந்து மாறுபடாது - அஃதாவது, ஒரு பொருளால் தானாகவே தனது இயக்கத்தை மாற்றிக் கொள்ள இயலாது; இத்தன்மை சடத்துவம் எனப்படும், அதனை கீழே நூற்பா 1.6-ல் காண்க)

இரண்டே,
உற்று உறழ்த்தும் புறவிசை அளவொடு
பற்றது கொள்ளும் பொருளுறும் முடுகே.         1.4

(முதல் விதியில் கூறியவாறு, ஒரு பொருள் புறவிசை ஒன்றினால் தனது இயக்கத்தில் மாற்றம் கொள்கையில், அம்மாற்றமானது அப்புறவிசையின் அளவை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் - Acceleration = Force / Mass - நூற்பா 1.7 காண்க; உறழ்த்துதல் - நிலை மாற்றுதல், முடுகு - Acceleration)

மூன்றே,
எல்லா விசைக்கும் எதிர்விசை எழுமே
சொல்லிய அவ்விரண் டும்அள வொக்குமே.    1.5

(இது நாம் அனைவரும் நன்கறிந்த, ஆனால் முறையாக புரிந்து கொள்ளாத, ஒரு விதிதான்! நூற்பா 1.8 காண்க)

சடத்துவம் (Inertia)

இயக்கத்தின் விலகாமை இருப்பவைக்கு இயல்பே.    1.6

(தானாக தன் இயக்கத்திலிருந்து மாறாமல் இருக்கும் தன்மை அனைத்து பொருள்களுக்கும் இயல்பாகும் - இதுவே சடத்துவம் - இது முதல் விதியின் பயனாகும்)

F = m.a 

முடுகொடு நிறையின் முறைபெருக் கத்தை
படுவிசை அதனின் பலமென்ப புலவர்.                          1.7

(முடுகு - விசையால் உந்தப்படும் பொருளின் திசைவேகம் மாறும் அளவு (Acceleration); நிறை - பொருளின் திணிவு (Mass); இங்கே முறை பெருக்கம் எனச் சொல்லியது விசையும் முடுகும் திசையன்கள் ஆனால் நிறை திசையிலி என்பதைக் குறிக்க; முறை பெருக்கம் - திசையனுகுரிய பெருக்கம்)

விசையும் எதிர்வும் வினைபுரிந் திடுமே
அசையும் அசைக்கும் அவற்றில் முறையே.               1.8

(இது இரண்டாம் விதிக்கு புறனடை; விசைக்கு எதிர்விசை எழும் என்று சொல்லப்பட்டது, அவ்வாறு எழும் எதிர்விசையானது விசைக்கு காரணமான பொருளில் செயல்படும், அதாவது, விசையும் எதிர்விசையும் செயல்படும் பொருட்கள் வேறுவேறு ஆகும் - இதுவே ”அசையும்” ”அசைக்கும்” எனக் குறிக்கப்பட்டது; எடுத்துக்காட்டாய், மட்டையால் பந்தை அடிக்கையில் பந்தில் (அசையும் பொருள்) விசையும், மட்டையில் (அசைக்கும் பொருள்) எதிர்விசையும் செயல்படும்)

விசைஎன் பதனை விளக்கும் காலை
திசையுடன் அளபு சிவணிய துவ்வே.                             1.9

(விசை என்பதன் இயல்பைச் சொல்லின் அது திசையும் அளபும் பெற்ற திசையன் ஆகும்; சிவணுதல் - சேர்தல்)

விரைவும் முடுகும் விசையியல் பினவே.                   1.10

(திசைவேகமும்[விரைவு], முடுகும் கூட விசையைப் போலவே திசையன்கள் ஆகும்)

பொருள் என்பதன் பொருள் கூறிடின்
உருவத் திண்மையும் நிறையும் பெறுவதே.               1.11

(பொருள் [Particle/Body] என்பதன் இயல்பைச் சொல்கையில் அது உருவத்தின்மையும் [Solid] நிறையும் [Mass] பெற்று இருப்பது)
______________________________________________


இப்பொழுது இத்தோடு முடித்துக் கொள்கிறேன், இன்னும் ஒளியியல், வானியல் ஆகியவற்றிலும் சில நூற்பாக்கள் இயற்றியுள்ளேன், அவற்றை பின்னர் - படிப்பவர்களின் பின்னூட்டத்தினைப் பொறுத்து - தருகிறேன்.

இதைப் படிப்பதில் நேரம் செலவிட்டமைக்கு மிக்க நன்றி... மறக்காமல் கருத்திட்டுச் செல்லவும்...