28 October, 2010

கல்லில் கண்ட கலைவண்ணம்

குடைவரைக் கோயில்கள்

குடைவரைக் கலை உலகின் மிக பழமையான கலையாகும். இக்கலை நம் நாட்டில் மிகவும் பிற்பட்டக் காலத்திலேயே ஏற்பட்டாலும், உலகளவில் இங்கு மட்டும் தான் பெரியஅளவிலான வளர்ச்சிப் பெற்று விளங்கியது. நம் நாட்டில் 1200க்கும் மேற்பட்ட குடைவரைகள் இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 900 பெளத்த சமயத் தொடர்புடையவை. எஞ்சிய 300 சமண மற்றும் இந்து சமயத் தொடர்புடையவை.
 
தென்னிந்தியாவில் இக்கலை மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் வேரூன்றியது. பெளத்த சமயத்தினரால் போற்றப்பட்ட இக்கலை நாளடைவில் இந்து சமயத்தினராலும் வளர்க்கப்பட்டது.
 
 தமிழ்நாட்டில் இக்குடைவரைக் கலை ஏறக்குறைய 800 ஆண்டுகள் கழிந்தப் பின்னரே தோற்றுவிக்கப்பட்டது. சங்கக் காலத்தில் வாழ்ந்த சமணர்கள் தங்களது வாழ்விடங்களாக இயற்கையாக அமைந்த குகைகளைத் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்துக் கொண்டனர். மழைநீர் குகைகளில் விழாதவாறு கூரைகளின் விளிம்புகளில் கால்கள் அமைத்தும், படுக்கைகளைத் தாங்கள் உறங்குவதற்கு ஏற்றவாறு உருவாக்கியும் தமிழகத்தில் இக்கலை உருவாகுவதற்கு முன்னோடிகளாக இருந்தனர்.
 
குடைவரைகள் உருவாக்க அதிக உழைப்பும் பொருளும் தேவைப்பட்டது. கட்டுமான கலையைவிட இது அதிக தொழில்நுட்பம் வாய்ந்ததாக விளங்கியது. பாறையில் சிறு பிளவு ஏற்பட்டாலும் பணியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தமிழகத்தில் உறுதியான பாறைகள் உள்ள மலைகளிலும் குன்றுகளிலும்தான் குடைவரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் குடைவதும் மிக கடினமானதே. மேற்கிந்தியப் பகுதிகளில் மிருதுவான பாறைகளிலேயே குடைவரைகள் அமைக்கப்பட்டன.
 
தமிழகத்தை ஆட்சி செய்தப் பேரரசர்களான பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் அவர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களான முத்தரையர்கள், அதியமான் மரபினர்களுமே குடைவரைக் கலை வளர பெரிதும் பங்களித்தவர்கள். பல்லவப் பேரரசு தோன்றிய பின் (சுமார் கி.பி.600) குடைவரைக் கலை பெரிதும் வளர்ச்சி பெற்றது. இக்கலையைத் தமிழகத்தில் தோற்றிவித்தவர்கள் பல்லவர்களே (முதலாம் மகேந்திரவர்ம பல்லவனே) என்னும் கருத்து நிலவி வந்தாலும், அவர்களின் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் இக்கலை இருந்ததற்குச் சான்றாக பிள்ளையார்பட்டி குடைவரை (இங்குள்ள எழுத்தமைப்புக்கள் மகேந்திரவர்மனுக்கு முந்தைய காலத்தது) உள்ளது. மேலும் பாண்டிய நாட்டில் உள்ள சில குடைவரைகளின் அமைப்புகளிலிருந்து அவை பல்லவர் காலத்திற்கு முந்தையது என அறிய முடிகிறது.
 
தமிழகத்தில் குடைவரைகள் தருமபுரி, ஈரோடு, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. காரணம் இக்கலையைப் போற்றிய அரசர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் இப்பகுதியில் காணப்படவில்லை. மேலும் இப்பகுதியை ஆண்ட சோழர்கள் கற்றளி கோயில்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் குடைவரைக்குக் கொடுக்காததே ஆகும். எனினும் அவர்கள் குடைவரைக் கோயில்களுக்குக் கட்டுமான விரிவாக்கங்களைச் செய்தனர்.
 
பாண்டிய பல்லவர்கள்
 
பல்லவ, பாண்டிய குடைவரைகளுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன. பல்லவ குடைவரைகளில் இறை சிற்பங்கள் அதிகமாக காணப்படுவதில்லை. கருவறைகளில் மூலக் கடவுள்கள் தனியாக மரத்தினாலோ, ஓவியங்களினாலோ அமைக்கப்பட்டனர். ஆனால் பாண்டியர் குடைவரைகளில் தாய் பாறையிலேயே கருவறைகளில் கடவுள் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறை உருவங்களும் மிகுந்து காணப்படும்.
 
தொடக்கக் காலப் பல்லவர் குடைவரைகளில் வழிபாட்டு முறை இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் பாண்டிய குடைவாரைகளில் நாள் தோறும் பூசைகள் நடத்தப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாக அபிஷேக நீர் வெளியேறும் கால்கள் கருவறையில் அமைந்துள்ளன.
 
இரண்டாவது கட்ட பல்லவர் குடைவரைகளில் கருவறையின் பின்புறம் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பமும், பாண்டியர்களின் குடைவரைகளில் விநாயகரின் புடைப்புச் சிற்பமும் தனியாக குடைவரையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும்.
 
தென் தமிழகத்தில் குடைவரைகள் சிலவற்றில் இசைக் குறித்த கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.
 
முத்தரையர்கள்
 
முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்களைப் பற்றிய குறிப்புகள் முதலில் தொண்டை மண்டலத்தில் பல்லவர் கால நடுகற்களில் கிடைக்கின்றன. இவர்களின் குடைவரைக் கோயில்கள் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும் பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்ததால் இவர்களின் குடைவரைகளில் பல்லவர்களின் பாணியைக் காணமுடிகிறது. மலையடிப்பட்டி, திருவெள்ளறை, நார்த்தாமலை (நகரத்தார்மலை), குன்னாண்டார் கோயில், பூவாலைக்குடி போன்றவை  இவர்களது குடைவரைக் கோயில்கள் ஆகும்.
 
நார்த்தாமலை (நகரத்தார்மலை)
 
புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் செல்லும் வழியில் நார்த்தாமலை என்னும் ஊர் உள்ளது. இவ்வூரைக் கல்வெட்டுகள் ‘நகரத்தார் மலை’ என்றும், ’குலோத்துங்க சோழப்பட்டினம்’ என்றும், ’தெலுங்கு குலகாலபுரம்’ என்றும் குறிக்கின்றன. சோழர் காலத்தில் சிறந்த வணிக நகரமாக விளங்கியது.
    நார்த்தாமலை மீது இரண்டு குடைவரைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. விஜயாலய சோழன் கட்டிய கற்றளியும் இம்மலை மீது உள்ளது. குடைவரைகள் இரண்டும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
 
  
சமணக்குடகு
 
முதலில் உள்ள குடைவரைக் கோயில் சமணக்குடகு என்று அழைக்கப்படுகிறது. இது முற்காலத்தில் சமணர்களின் வசிப்பிடமாக இருந்து, பிறகு திருமாலுக்குரிய கோயிலாக மாறியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
 

இது முன்புற மண்டபமும் கருவறையையும் கொண்டது. முன்புற மண்டபத்தில் திருமாலின் 12 உருவங்கள் காணப்படுகின்றது. ஏழு அடி உயரமுள்ள வாயிற்காவலர் சிற்பங்களையும் இக்குடைவரைக் கொண்டு விளங்குகின்றது. யாளி, சிங்கம், யானை போன்ற சிற்பங்களும் இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
 
பழியிலி ஈஸ்வரம்
 
இது சிவபெருமானுக்கு உரிய கோயிலாகும். கருவறையில் சதுர வடிவ ஆவுடையாருடன் இலிங்கம் உள்ளது, இது தாய்ப் பாறையில் அமைக்கப்பட்டது அல்ல. வாயில் காவலர் சிலையும் தனியாகவே உள்ளது.
 
இக்குடைவரையின் முன்பகுதியில் உள்ள இடிந்த மண்டபத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பல்லவர் கல்வெட்டு ”கோவிசையை நிருபதுங்க விக்ரமர்க்கு யாண்டு ஏழாவது விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தான் பழியிலி குடைந்தெடுத்த ஸ்ரீகோயில்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தான் பழியிலி இக்கோயிலை நிருபதுங்க பல்லவன் காலத்தில் குடைந்தமையால் அவன் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
 
 
விஜயாலய சோழன் கற்றளி
 
இங்கு காணப்படும் குடைவரை கோயில்களுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது விஜயாலய சோழன் கற்றளி. பிறகாலத்தில் விஜயாலய சோழன் கட்டியமையால் இது அவனது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் சிவபெருமானுக்கு உரியது ஆகும். 
 
இது மிக அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது. கருவரையில் சிவபெருமானையும், வாயில் புறத் தூணின் பக்கத்திற்கு இருபுறமும் வாயிற்காவலர் சிற்பங்கள் அமைந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக நான்கு தூண்களுக்கு நடுவில் நந்திப்பெருமான் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
 
முதன்மைக் கற்றளியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறுசிறு கோயில்கள் கோபுரங்கள் முழுமையாக முற்றுப் பெறாமலும், கருவரையில் இறை உருவங்கள் பெறமால் உள்ளன.
 
முடிவுரை
 
நம் முன்னோர் எத்தனையோ நுண்கலைகளில் சிறந்து விளக்கினர் என்பதை நாம் அறிவோம், இன்றைய தொழில்நுட்பங்களும் கண்டு வியக்கும் வண்ணம் பல நூற்றாண்டுகட்கு முன்னரே அமைந்த இத்தகைய குடைவரைகள் நம் கண்களுக்கும் கருத்துக்கும் இன்றும் விருந்தளித்து வருகின்றன. இவற்றை முறையாக பேணிக்காப்பதும், இவற்றின் பெருமையையும் மதிப்பையும் உலகறியச் செய்வதும் நம் கடமையாகும்.



பின்குறிப்பு:


அண்மையில் இந்த நகரத்தார் மலையைச் சுற்றிப் பார்த்து ஆசைத்தீர புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்த என் தோழி, தமிழனின் இந்த பெருமையையும் நான் என் வலையில் பகிர வேண்டும் எனக் கேட்டதோடு அல்லாமல் இந்தக் கட்டுரையையும் புகைப்படங்களையும் அளித்தாள். அவளுக்கு என் நன்றிகளை இங்ஙனம் தெரிவித்துக் கொள்கிறேன். 
நன்றி செல்வி. பெ. தாமரை* :-)

*புகைப்படங்கள் மற்றும் இக்கட்டுரையின் காப்புரிமையும் அவளுக்கே உரியவை.