23 January, 2010

ஆயிரத்தில் ஒருவன் - திரைப்பட விமர்சனம்

(படிப்பதானால் முழுமையாய் படித்துவிடுங்கள் - தயவு செய்து!)

தமிழும் நானும்-இல் எழுதும் அளவிற்கு ஒரு தமிழ் திரைப்படம், ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம், தமிழனைத் தலைநிமிர வைக்கும் ஒரு முயற்சி... நிற்க - இவ்வாறெல்லாம் எழுதத்தான் எனக்கு விருப்பம், ஆனால் நாம் விரும்பியதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?

நான் நேற்றுதான் படத்தை பார்த்தேன், எனக்கு முன் பார்த்தவர்கள் படம் தமிழ வரலாற்றை ஒட்டியது, ஆனால் சொல்லப்பட்டவை புரியவில்லை என்று கூறக்கேட்டபொழுது அவர்களை திட்டினேன் நான் - புரியாமல் எத்தனை ஆங்கிலப் படங்களை பார்க்கிறோம், புரிந்துகொள்ள எத்துனை முயல்கிறோம்? ஒரு தமிழனின் முயற்சிக்கு ஏன் அந்த மதிப்பைத் தரத்தயங்குகின்றோம்? என்று...

படத்தைப் பார்ப்பது, அதன் பெருமையை பறைசாற்றி ஒரு இடுகை இடுவது என்ற முடிவோடே சென்று படத்தைப் பார்த்த எனக்கு பெறுத்த ஏமாற்றம்! மூன்று ஆண்டுகள் உழைத்த படம் போல் துளியும் தெரியவில்லை - நிற்க, இயக்குனர் திரு.செல்வராகவன் மேல் எனக்கு எந்தக் காழ்ப்பும் இருந்ததில்லை, மாறாய் அவரின் இரசிகர்களில் ஒருவன் நான் - எந்தவொரு செய்தியையும் “உணர்வு” என்ற தளத்தில் தீட்டக்கூடிய அற்புதமான செல்லுலாய்டு ஓவியர் அவர் என்று நினைப்பவன் நான் - இந்த எதிர்பார்ப்புகளும் சேர்ந்துதான் என்னை ஏமாறச் செய்தன!

”தமிழன் தன் முன்னோரின் வரலாற்றை, அவரின் வாழ்க்கை முறையை, பெருமைகளை தெரிந்துகொள்வர், இந்தப் படத்தை பார்த்தால்” என்று இயக்குனர் ஒரு பேட்டியில் சொல்லக் கேட்டதாய் நினைவு - தமிழனோ பிறரோ என் வேண்டுகோள் இதுதான் - தயவு செய்து இந்த அரைவேக்காட்டு படத்தை வைத்து தமிழனின் பெருமையை எடைபோட்டு விடாதீர்கள் - அது ஒரு பைத்தியக்காரன் தரையில் வரைந்த நான்கு வளைகோடுகளை வைத்து கடல் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுவதைப் போலாகிவிடும்!

தமிழ் உலகின் முதல் மொழிகளில் ஒன்று, தமிழன் முதல் மனிதர்களின் ஒருவன்! “செம்மொழி” என்று நாம் நெஞ்சுநிமிர்த்தி உவந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழனை காட்டுமிராண்டியாய் - கிரேக்க - உரோமானிய சுவடுகளோடும், மந்திர-தந்திரங்களால் வித்தைகாட்டும் மாயன் சுவடுகளோடும் காட்டி தமிழன்னையின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டான் ஒரு தமிழன்! இந்த மானக்கேட்டின் கோவத்தில்தான் இந்த விமர்சனம் எழுதப்படுகிறது - இது நடுநிலையில் இல்லை என்றாலும் எனக்கு கவலையில்லை - எனது அந்தச் சகதமிழனைப் போல் நானும் இங்கே ஒரு குப்பையை உருவாக்கி வைத்திருக்கிறேன் எனினும் எனக்கு கவலையில்லை!

ஒரு இளைஞன் இரண்டு இளம்பெண்கள், ஒரு பயணத்தில் இவர்களுக்கு இடையில் ஏற்படும் பால்கவர்ச்சி, அதனால் நிகழும் கலவி, புலவி - இதுதான் கதை என்றால் இயக்குனர் அருமையான படத்தை தந்திருப்பார் என்பதில் ஐயமேயில்லை - அதில் அவர் வல்லவரும் கூட - ஆனால் தமிழன்னையின் போதாத காலம், சோழ பாண்டியர்களின் பெயர்கள் இயக்குனரின் நினைவிற்கு வந்து தொலைத்துவிட்டன, அதில்தான் வந்தது சிக்கல்!

மூன்று ஆண்டுகளின் உழைப்பு - எதற்கு இத்துனை காலம்? நாயகிகளின் அங்கங்களை எங்கெங்கு நன்றாய் காட்டலாம் என்று சிந்திக்கவா? எத்துனை தரங்குறைந்த சொற்களை - தமிழின், ஆங்கிலத்தின், இன்னும் பிற வியட்னாம், காட்டுவாசிகள் மொழிகளின் தரங்குறைந்த சொற்களை - எப்படியெப்படி சேர்க்கலாம் என்று ஆராயவா? மூன்று ஆண்டுகளில் சோழ பாண்டியர்களை பற்றி ஒரு மணி நேரமேனும் ஆராய்ந்தனரா? அவர் பெயர் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்று இயக்குனர் நினைத்துவிட்டாரா? “இத்திரைப்படத்தில் வருபவை அனைத்தும் கற்பனையே” என்று முகப்பு போட்டுவிட்டால் எதை வேண்டுமானாலும் காட்டலாமா?

சோழன், பாண்டியன் என்னும் பெயர் தவிர்த்து வேறெந்த அம்சமும் அவர்களைப் பற்றி படத்தில் காணப்படவில்லை! “கிளாடியேட்ட்ர்” பாணியில் மைதானத்தில் அப்பாவிகளை அடிமைகளாக்கி கொண்டுவந்து கொல்வது, “300” பாணியில் சோழ அரசன் ஆட்கள் சுமக்கும் ஒரு “மிகப்பெறிய” இருக்கையில் வலம் வருவது, “ட்ராய்” பாணியில் கேடயத்திற்குள் ஒளிந்து போர் செய்வது - இப்படி கிரேக்க - உரோமானிய போர் முறைகளை தமிழனுக்கு ஏத்திவிட்டார் இயக்குனர் - தமிழ போர்முறைகளை சித்தரிக்கும் ஹாலிவுட் படங்கள் இல்லாததுதான் காரணமோ? வெட்சி முதலாய் வாகை ஈறாக எட்டுத்திணைகள் போர்கு வகுத்தவன் தமிழன்!(தன் படத்தில் ஹாலிவுட் படங்களின் சுவடு இருப்பதாய் நிறுவினால் தான் படமெடுப்பதையே விட்டுவிட்டு வேறு தொழில் செய்வதாக இயக்குனர் கூறியுள்ளாராம் - மேலேயுள்ள எடுத்துக்காட்டுகள் போதுமானதாக் இருக்கும், அவர் தன் பட்டப்படிப்பின் சான்றிதழை ஆயத்தம் செய்ய, என்று நினைக்கிறேன்!)

ஒரே தீவில் மழைக்காடுகளும் இருக்கிறது, பாலைவனமும் இருக்கிறது - சோழர்கள் “ஆர்டரின் பேரில் ஆபத்து நிறைந்த தீவுகள் செய்து தரப்படும்” என்று விளம்பரம் செய்யாததுதான் குறை!

தொல்பொருள் ஆய்வாளர் இலாவன்யா (ஆண்ட்ரியா ஜெரோமியா) பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஓலைச்சுவடி தமிழைப் படிக்கும் திறமும், நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளின் மொழியைப் பேசும் திறமும் வாய்ந்தவர், ஆனால் பாவம் அவரால் சோழ அரசனிடம் அவருக்கு புரியும் தமிழில்தான் பேசவியலவில்லை - என்ன ஒரு சிக்கல்!

எஞ்சியிருக்கும் பாண்டிய சந்ததிகள் இந்திய அரசியல்வாதிகளாய், அதிகாரிகளாய் இருப்பது சரிதான், ஆனால் அவர்களின் “ஆணையில்” இந்திய இராணுவம் செயல்படுவதும், அதுவும் - பெண்களை பாலியல் துன்புறுத்தும், பழங்குடியினரை கண்டபடி சுட்டுத்தள்ளும், அவர்களை அடிமைகளாய் விலங்கிட்டு இழுத்துவரும் வகையில் - அரக்கத்தனமாக, அதுவும் வேறொரு நாட்டில், செயல்படுவதாய் காட்டுவது சரியா? பண்டைய தமிழனின் வீரத்தை இழிவுபடுத்தியதோடு திருப்தி அடையாமல் இன்றைய இந்திய வீரர்களையும் இழிவுபடுத்திவிட்டது ஏன்?

இயக்குனர் என்னதான் சொல்ல முயல்கிறார்? -இந்தக் கேள்விக்கான பதில், படத்தின் ஒரே ஆறுதலான - கடைசி சோழ அரசனின் (இரா.பார்த்திபன்) கதாபாத்திரத்தில் மின்னுகிறது! இந்த ஒரு விதயத்தில் இயக்குனரையும், திரு.இரா.பார்த்திபன் அவர்களையும் எத்துனை பாராட்டினாலும் அது தகும்! ’இவன் சோழன்’ என்று சொன்னால் மறுப்பே சொல்ல இயலாத வகையில் பொருந்துகிறார் நடிகர் இரா.பார்த்திபன் - சோழ அரசனுக்கான மிடுக்கு, தமிழ் வீரனின் துடிப்பு, தாய்நாட்டை பிரிந்து வாடும் ஏக்கம், தம் மக்களின் நிலைக்கு அடையும் துயரம், தூதனை அடையாளம் காணுவதின் குழப்பம், நம்பியவள் ஏமாற்றிவிட்டதின் துன்பம், இறுதி முயற்சியாய் போரிட்டு பார்ப்பதின் முனைப்பு, தன் மனைவியை இழிவுபடுத்துகையில் எழும் சினம், எதிர்ப்பார்ப்போடு கடலை நோக்கி ஓடி வீழ்ந்து இறக்கும் ஒரு பேரரசனின் எச்சத்தின் மிகச்சரியான உருவகமாய் வாழ்ந்து கண்களிலும் நெஞ்சிலும் ஈரத்தை கசியவைத்துவிட்டார்!

இன்று தமிழின், தமிழனின் உண்மை நிலை ஏறத்தாழ இதுதான் - தாய் நாட்டிற்குள்ளேயே நாம் அண்ணியப்பட்டு இருக்கிறோம், நமது பெருமை என்னும் செல்வத்தை இழந்த வறுமையில் வாடுகிறோம், நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்வதில் தன் இனத்தைத் தானே தின்னும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறோம் - இதை காட்டுவதுதான் இயக்குனரின் நோக்கம் என்றால் அவர் நிச்சயம் வென்றிருப்பார் - தமிழ் சினிமாவின் மசாலாத்தனங்களுக்குள் சிக்காமல் இருந்திருந்தால்!

ஆயிரத்தில் ஒருவன் - பத்தோடு பதினொன்று - செல்லுலாய்டு குப்பைகளில்!

பின்குறிப்பு:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
.” (தி.கு - 664)

மூன்று ஆண்டுகள் உழைத்து எடுத்த ஒரு படத்தை, வெறும் ரூ.90 தந்து பார்த்துவிட்டவன் என்ற முறையில் “குப்பை” என்று நான் விமர்சனம் செய்வது நியாயமில்லைதான், எனினும் ஒரு தனிமனிதனின் பார்வை என்ற வகையில் மட்டுமே இதை பதிக்கிறேன் - தனிமனித கருத்து விருப்பு வெறுப்புகளோடுதான் இருக்கும்!

இந்தத் திரைப்படத்தை வைத்து தயவு செய்து தமிழனை எடைபோட்டுவிடாதீர்கள்!” என்பது மட்டும் நடுநிலையான, நியாயமான கோரிக்கையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்!

தங்கள் நேரத்தை செலவிட்டு இதைப் படித்தமைக்கு நன்றி!

வாழ்க தமிழ்! வாழ்க ஞாலம்!

7 comments:

  1. ”இந்தத் திரைப்படத்தை வைத்து தயவு செய்து தமிழனை எடைபோட்டுவிடாதீர்கள்!”
    -exactly!!!

    ReplyDelete
  2. அன்பர் விஜய்.

    //இந்தத் திரைப்படத்தை வைத்து தயவு செய்து தமிழனை எடைபோட்டுவிடாதீர்கள்!//

    நன்றாக அலசியிருக்கிறீர்கள்.

    இந்தப் படத்தை மாயவித்தை(ஃபாண்டஸி), சாகசம், வரலாற்றுக் காலத்தை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள் என நாம் இதுவரை தமிழ் படங்களில் அதிகம் சுவைத்திராத மாறுபட்ட மசாலா என்று தான் கூறியிருக்கிறேன்.

    லாஜிக் பற்றி யோசிக்காமல் பார்த்தால் நமக்குப் புது அனுபவம் கிடைப்பது உறுதி. அதையே நானும் பதிவு செய்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. என்ன மாதிரியான வித்தியாசமான பார்வை.உங்களின் தமிழ் ஆர்வம் கண்டு வியக்கிறேன்.

    //காட்டுமிராண்டிகளின் மொழியைப் பேசும் திறமும் வாய்ந்தவர், ஆனால் பாவம் அவரால் சோழ அரசனிடம் அவருக்கு புரியும் தமிழில்தான் பேசவியலவில்லை - என்ன ஒரு சிக்கல்!//

    மிக நன்று.நல்ல கவனிப்பு.இதைத்தான் நானும் நினைத்தேன். பதிவில் எழுத மறந்துவிட்டேன்.
    ஆனால் வேறுவிதமாக வந்துவிட்டது.

    //கடைசி சோழ அரசனின் (இரா.பார்த்திபன்) கதாபாத்திரத்தில் மின்னுகிறது! //

    உண்மைதான்.கடைசிக் காட்சி.எனக்கு முதலில் புரியவில்லை.சற்று நேரம் கழித்துதான் புரிந்தது.பொதுபுத்தி. இன்னும் கூட குழப்பம் இல்லாமல் எடுத்திருக்கலாம்.ஏன் நர மாமிசம்?

    நன்றி விஜய்.

    ReplyDelete
  4. ரவி,
    நர மாமிசம் தின்பதாய் காட்டுவதிலும் ஒரு “லாஜிக்” இடிக்கிறது, ஆட்களே வர இயலாத தீவிற்குள் இவர்களுக்கு அடிமைகளும் நரமாமிசமும் எப்படி கிடைக்கும்? அதேபோல், ஏழு அபாயங்களைப் பற்றிய பாண்டிய தளபதியின் ஓலையும் சிக்கலான விஷயமே, ஏழு அபாயங்களையும் அந்தப் பாண்டிய தளபதி கடந்துவிட்டாரா? அப்படி இருந்தால்தானே அவற்றைப் பற்றி எழுத இயலும், அந்த ஓலை தமிழகத்தில் இருக்கிறது என்றால் அவர் திரும்பி வந்திருக்கிறார் என்றே பொருள், அப்படியானால் அவர் ஏன் சோழ இளவரசனை கொண்டுவரவில்லை? மேலும், அந்த தளபதியின் ஓலை பாண்டிய வம்சத்தினரிடம் இல்லாமல் எப்படி ஒரு தொல்பொருள் ஆய்வாளரிடம் வந்தது?..!!!

    இதையெல்லாம் நானும் விமர்சனத்தில் குறிப்பிட நினைத்து மறந்துவிட்டவை (ஒரு பக்க விமர்சனத்திலேயே நாம் இவ்வளவு விஷயங்களை மறக்கையில், மூன்று ஆண்டு படத்தில் இயக்குனர் “சிலதை” மறப்பது இயல்புதானோ??) தங்கள் வாயிலாக இங்கே குறிப்பிட்டு கொள்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  5. இதைப் படிங்க... படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று “சோழர் பேரவை” என்ற அமைப்பு வழக்கு போட்டிருக்கிறார்களாம்!

    ReplyDelete
  6. En manasula ullatha intha blog sollirku

    ReplyDelete