13 June, 2016

பஞ்சாமிருத வண்ணம் - உரை - 2. தயிர்

அறிமுகம் மற்றும் முதல் பாடலை இங்கே காணவும்.
-----------------------------------------

பாம்பன் 
ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள்
அருளிய

பஞ்சாமிருத வண்ணம்



2. தயிர்


சந்தம்



தனத்தன தந்தன தனத்தன தந்தன 
.....தனத்தன தந்தன தனத்தன தந்தன

.....தா தனனா தன தா தனனா

.....தனந்த தந்தன தனந்த தந்தன 
.....தனந்த தந்தன தனந்த தந்தன

.....தா தனனா தன தா தனனாதனதனதனதானா (அரையடி)



பாடல்

கடித்துண ரொன்றிய முகிற்குழ லுங்குளிர்  
.....கலைப்பிறை யென்றிடு நுதற்றில கந்திகழ்

.....கா சுமையா ளிளமா மகனே

.....களங்க விந்துவை முனிந்து நன்கது  
.....கடந்து விஞ்சிய முகஞ்சி றந்தொளி

.....கா லயிலார் விழிமா மருகா - விரைசெறி யணி மார்பா



.....கனத்துயர் குன்றையு மிணைத்துள கும்பக 
.....லசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்
.....கா தலனான் முகனா டமுதே
.....கமழ்ந்த குங்கும நரந்த முந்திமிர் 
.....கரும்பெ னுஞ்சொலை யியம்பு குஞ்சரி
.....கா வலனே குகனே பரனே அமரர்கடொழுபாதா [1]


உடுக்கிடை யின்பணி யடுக்குடை யுங்கன  
.....யுரைப்புயர் மஞ்சுறு பதக்கமொ டம்பத 
.....வோ வியநூ புரமோ திரமே 
.....ருயர்ந்த தண்டொடை களுங்க ரங்களி 
.....லுறும்ப சுந்தொடி களுங்கு யங்களி 
.....லூ ரெழில்வா ரொடுநா சியிலே - மினுமணி நகையோடே.



.....உலப்பறி லம்பக மினுக்கிய செந்திரு  
.....வுருப்பணி யும்பல தரித்தடர் பைந்தினை 
.....யோ வலிலா வரணே செயுமா 
.....றொழுங்கு றும்புன மிருந்து மஞ்சுல 
.....முறைந்த கிஞ்சுக நறுஞ்சொ லென்றிட 
.....வோ லமத யிடுகா னவர்மா மகளெனுமொருமானாம் [2]



மடக்கொடி முன்றலை விருப்புடன் வந்ததி  
.....வனத்துறை குன்றவ ருறுப்பொடு நின்றிள 
.....மா னினியே கனியே யினிநீ 
.....வருந்து மென்றனை யணைந்து சந்தத 
.....மனங்கு ளிர்ந்திட விணங்கி வந்தரு
.....ளாய் மயிலே குயிலே யெழிலே - மடவனநினதேரார்



.....மடிக்கொரு வந்தன மடிக்கொரு வந்தனம் 
.....வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம் 
.....வா வெனுமோர் மொழியே சொலுநீ 
.....மணங்கி ளர்ந்தந லுடம்பி லங்கிடு  
.....மதங்கி யின்றள மகிழ்ந்தி டும்படி
.....மான் மகளே யெனையா ணிதியே எனுமொழிபலநூறே [3]



படித்தவ டன்கைகள் பிடித்துமு னஞ்சொன 
.....படிக்கும ணந்தரு ளளித்தவ னந்தகிர் 
.....பா கரனே வரனே யரனே 
.....படர்ந்த செந்தமிழ் தினஞ்சொ லின்பொடு  
.....பதங்கு ரங்குந ருளந்தெ ளிந்தருள் 
.....பா வகியே சிகியூ ரிறையே - திருமலிசமரூரா



.....பவக்கட லென்பது கடக்கவு நின்றுணை  
.....பலித்திட வும்ழை செறுத்திட வுங்கவி 
.....பா டவுநீ நடமா டவுமே 
.....படர்ந்து தண்டயை நிதஞ்செ யும்படி 
.....பணிந்த வென்றனை நினைத்து வந்தருள் 
.....பா லனனே யெனையாள் சிவனே - வளரயின் முருகோனே. [4]


(எண்கள் அடி எண்கள்)


[முதலடி]



பதவுரை:



கடி துணர் நறுமணம் மிக்க பூங்கொத்து (கடிவாசனை, துணர்பூங்கொத்து),


ஒன்றிய அணிந்த (ஒன்றியபொருந்திய/சேர்ந்த),


முகில் குழலும் மேகம் போன்ற கூந்தலும்,


குளிர் கலைப்பிறை குளிச்சியான பிறைசந்திரன்,


என்றிடு நுதல் – (பிறைசந்திரன்) போன்ற நெற்றி (நுதல்நெற்றி),


திலகம் திகழ் – (நெற்றியில்) பொட்டு (திலகம்) திகழ,


காசு உமையாள் -  காசுமாலை அணிந்த பார்வதியின் (காசு என்பதைக் குறிப்பாக என்ன பொருளில் இங்கே கையாள்கிறார் என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை, பல பொருள் உள்ள சொல் அது, நான் என்வரையில் காசுமாலை என்று கொள்கிறேன்!),


இள மாமகனே இளமையான உயர்ந்த மகனே (உமையின் மகனே எனக் கூட்டுக),


களங்க இந்துவை -  கறை உடைய சந்திரனை (களங்கம்சந்திரனில் காணப்படும் கறை; இந்துசந்திரன் / மதி);


முனிந்து – (அக்களங்கத்தினால் சந்திரனை) வெறுத்து;


நன்கு அது கடந்து விஞ்சிய முகம் – (அச்சந்திரனையும் விட) நன்கு அதிகமாய் விளங்கும் முகம் (சந்திரனில் கறை உள்ளது, இலக்குமியின் முகத்தில் இல்லை என்பது கருத்து! மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்... என்ற திருக்குறளைக் காண்க!),


சிறந்து ஒளி கால் சிறப்பாக ஒளி உமிழும் (முகம்) (காலுதல்உமிழ்தல்),


அயிலார் விழி வேல் பொருந்திய விழி (வேல் போன்ற விழி என்க), (இவையெல்லாம் இலக்குமியைக் குறிக்கின்றன),


மாமருகா (இலக்குமியின்) உயர்ந்த மருமகனே (பார்வதிக்கு திருமால் அண்ணன் என்பதால், இலக்குமி முருகனுக்கு மாமி ஆவாள்!),


விரை செறி அணி மார்பா நறுமணப்பொருள் செறிந்த அணிகள் அணிந்த மார்பனே...



கனத்து உயர் குன்றையும் எடையுடையதாய் உயர்ந்து விளங்கும் குன்றையும் (குன்றுசிறு மலை),


இணைத்து உள சேர்ந்து உள்ள (இணைந்து என்பதுஇணைத்துஎன்று வலித்தல் விகாரமாயும், உள்ள என்பதுஉளஎன்று குறுக்கல் விகாரமாயும் நின்றன),


கும்பகலசத்தையும் – (இரண்டு) குடங்களையும், (கும்பம் கலசம் இரண்டும் ஒரே பொருளின, ’மீமிசைஎன்பது போல அடுக்கி வந்தது!),


விஞ்சிய தனத்து – (குன்றையும், குடத்தையும்) விட சிறந்ததாய் (அளவிலும் வடிவிலும்) விளங்கும் முலைகளை உடைய (தனம்ஸ்தனம்முலை),


இசைமங்கை கலைமகள் (சிறந்த முலைகளை உடைய கலைமகள் எனக்கூட்டுக; கலைமகளின் முலைகள் ஞானத்தைக் குறிப்பன; கலைகளிலெல்லாம் சிறந்தது இசையே ஆதலால் கலைமகளை இசைமங்கை எனக்குறித்தார்),


கொள் – (அக்கலைமகள்) கொள்ளும்,


காதலன் நாயகனான,


நான்முகன் -  பிரமன்,


நாடு அமுதே- நாடுகின்ற அமுதம் போன்றவனே (கலைமகளின் காதலனான பிரமன் நாடும் அமுதம் போன்றவனே; படைப்பின் சாரமாகியன் பிரணவத்திற்குப் பொருள் தெரியாததால் பிரமனை சிறையில் வைத்து அவனது படைத்தல் தொழிலை (சிருஷ்டி) தானே மேற்கொண்டான் முருகன், பின் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரமனை விடுவித்து அவனது பதவியையும் அவனுக்கே அளித்தான், எனவே பிரமன் நாடும் அமுது என்று முருகனை குறித்தார்),


கமழ்ந்த குங்கும நரந்தமும் குங்குமத்தின் நறுமணமும் (நரந்தம்நறுமணம்),


திமிர் கரும்பு கொழுத்த கரும்பு (இதுநிமிர் கரும்புஎன்பதாகவும் இருக்கலாம், எனில் நேரான நல்ல கரும்பு என்று பொருள்படும்!),


எனும் சொலை -  (குங்குமம் போல நறுமணமும், கரும்பு போல இனிமை உடையது) என்று சொல்லக்கூடிய சொல்லை,


இயம்பு பேசுகின்ற,


குஞ்சரி தேவயானையின் (குஞ்சரிபெண்யானை, தேவயானை தேவியையும் குறிக்கும் சொல்),


காவலனே -  தலைவனே,


குகனே குகனே (குஹ்யம்இரகசியம், மறைகளுக்கெல்லாம் மறைபொருளாய் நிற்கும் இறைவன் குகன் எனப்படுகிறான், உள்ளம் என்ற குகையில் வசிப்பவன் என்பதாலும் குகன் என்று சொல்லலாம்),


பரனே – பரம்பொருளே,


அமரர்கள் தொழு பாதா தேவர்கள் வணங்குகின்றன திருப்பாதங்களை உடையவனே (தொழுபாதம் என்பது வினைத்தொகை ஆதல் அறிக!)



விளக்கம்:



பூக்கொத்துகள் சூடிய கூந்தலும், குளிர்ந்த பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியில் திலகமும், அணிகள் அணிந்த உமையம்மையின் சிறந்த மைந்தனே, களங்கம் உள்ள சந்திரனை வெறுத்து அதனையும் விட சிறந்து ஒளி உமிழும் முகமுடைய திருமகளின் உயர்ந்த மருமகனே, மலைகளைவிட பருத்தும் குடத்தைவிட வடிவில் சிறந்து விளங்கும் (ஞானமாகிய) தனங்களை உடைய கலைமகளின் காதலனான பிரமனும் நாடுகின்ற அமுதமே, குங்குமம் போன்ற நறுமணமும், நல்ல கரும்பைப் போன்ற இனிமையும் உடைய சொல்லைப் பேசும் தேவயானையின் காவலனே, குகனே, பரம்பொருளே, தேவர்கள் எப்போதும் தொழுகின்ற திருப்பாதங்களை உடையவனே...





[இரண்டாமடி]



பதவுரை:



உடுக்கு இடையின் பணி உடுக்கை போன்ற இடையில் உள்ள அணியும் (உடுக்குஉடுக்கை, நடுவில் சிறுத்து இருப்பதால் இடைக்கு உவமித்தார், பணி - நகை),


டுக்கு உடையும் பல அடுக்குகளை பெற்ற உடையும்,


கன ரைப்பு யர் மஞ்சு று பதக்கமொடு எடைமிக்க, உயர்த்திச் சொல்லப்படுகின்ற அழகு மிகுந்த பதக்கமும் (கனம்எடை; உரைப்பு உயர்உயர்த்தி சொல்லப்படும், அல்லது பொன்னை உரைத்துப் பார்க்கும் உரைப்பு என்றும் சொல்லலாம்; மஞ்சுஅழகு),


ம்பத விய நூபுரம் அழகிய ஓவிய வேலைபாடு மிக்க கொலுசும் (அம்பதம்அழகிய பதம், நூபுரம்காலணி, கொலுசு),


மோதிரம் விரலில் மோதிரமும்,


ஏர் உயர்ந்த தண் தொடைகளும் சிறப்பு மிக்க குளிர்ந்த மலர்ச்சரங்களும் (தண்மைகுளிர்ச்சி; தொடைதொடுக்கப்படுவதால்தொடைஎனப்பட்டது),


கரங்களில் றும் பசுந்தொடிகளும் கைகளில் அணியும் பசுமையான வளையல்களும்,


குயங்களில் ஊர் எழில் வாரொடு மார்பில் கட்டும் அழகிய வாரும் (கச்சை),


நாசியிலே மினும் ணி நகையோடேமூக்கிலே மின்னுகின்ற அணிகளும் நகைகளும்,


உலப்பு அறு லம்பகம் குறைவு இல்லாது மாலையும் (உலப்புகுற்றம் / குறை, அறுஅது இல்லாமல், இலம்பகம்மாலை),


மினுக்கிய செந்திரு ருப்பணியும் மினுமினுக்கும் செம்மையான சிறந்த வடிவுடைய அணிகளும் (மினுக்குதல்ஒளிர்தல், செந்திருசெம்மை+திரு, உருப்பணி – உரு+பணி, பணி – நகை),


பல தரித்து – (இவ்வாறு) பலவகையான அணிகளும் அணிந்து கொண்டு,


டர் பைந்தினைஅடர்ந்து வளரும் பசுமையான தினையை (பைந்தினைபசுமை+தினை; தினைமலையில் வளர்க்கப்படும் பயிர்),


ல்இலா ரணே செயுமாறுஇடையீடு இல்லாம காவல் செய்யுமாறு (ஓவுதல்ஒழிதல்/நீங்குதல், இங்குஓவல்என்று குறுகி நின்றது; அரண்காவல்; செய்யுமாறு என்பது குறுக்கல் விகாரமாய்செயுமாறுஎன்று நின்றது),


ழுங்குறும் புனம் வரிசை வரிசையாக அமைக்கப்பட்ட நிலம் (ஒழுங்குஒழுங்கான அமைப்பு, இயற்கையாக வளராமல் செயற்கையாக வளர்க்கப்படுவது என்பதைக் குறிக்கிறது; புனம்மலையில் இருக்கும் வயல்),


ருந்து – (அப்புனத்தில்) தங்கி,


மஞ்சுலம் றைந்த கிஞ்சுகள் அழகு/மென்மை பொருந்திய கிளிகள் (மஞ்சுளம்அழகு / மென்மை, கிஞ்சுகம்கிளி),


நறும்சொல் ன்றிட –  இனிய சொல் என்று போற்றிட (நறு என்று மணத்தைக்குறிக்கும் சொல் இங்கு இனிமையைக் குறித்தது; கிளிகளும் போற்றுமாறு இனிய சொல்/குரலை உடையவள் என்பது கருத்து),


ம்அதே டு ஆலோலம் போட்டுக்கொண்டு இருக்கும் (ஓலம்ஆலோலம், தினைப்புனத்தைக் காவல் செய்பவர்கள் பறவைகளையும் விலங்குகளையும் விரட்ட எழுப்பும் ஓசை),


கானவர் மா மகள் காட்டில் வசிக்கும் குறவரின் உயர்ந்த மகள் (கானவர்இங்கு குறவரைக் குறிக்கும்),


னும் ஒரு மானாம் – (மகள்) என்று சொல்லக்கூடிய ஒரு மான் (மான் போன்றவள்)...



விளக்கம்:



(இவ்வடியில் தினைப்புனம் காக்கும் வள்ளிதேவியை வருணிக்கிறார்)



பலவகையான அணிகலன்களையும் ஆடைகளையும் அணிந்து தினைபுனங்களைக் காக்கும் வள்ளி என்று வருணிக்கிறார் சுவாமிகள்...



இடுப்பில் அணியும் நகையும், பல அடுக்குக்களைப் பெற்ற ஆடையும், கனமான தங்க பதக்கமும், அழகிய கொலுசுகளும், மோதிரமும், சிறந்த குளிர்ச்சிதரும் பூமாலைகளும், பசுமையான வளையல்களும், மார்புக் கச்சும், மூக்கில் மினுமினுக்கும் அணியும், குறைவற்ற மாலையும், மேலும் சிறந்த அணிகள் பலவும் தரித்து, அடர்ந்து வளரும் பசுமையான தினை புனத்தை இடைவிடாது காவல் செய்வதற்காக அங்கே தங்கி, கிளிகளும் போற்றும் தன் இனிய குரலில் ஆலோலம் இடும் குறவரின் மான் போன்ற சிறந்த ஒரு மகள் (வள்ளி)...



[மூன்றாமடி]



பதவுரை:



மடக்கொடி – (மேலடியில் முடித்த ‘வள்ளி’ என்பதனோடு இது சேரும்) அவ்வள்ளியாகிய மடக்கொடி – மடமை நிறைந்த கொடி போன்றவள் (அன்மொழித்தொகை), மடமை – இளமை;


முன் அவள் முன்;


லைவிருப்புடன் வந்து – மிகுதியான அன்புடன் வந்து (’நின்று’ என்பது பின்னர் வருகிறது), விருப்பத்திலேயே உயர்ந்தது என்னும் பொருள்பட ‘தலைவிருப்பு’ என்றார்;


தி வனத்து றை குன்றவர் – அடர்ந்த காட்டில் வாழும் குறவர் (அதி – மிகுந்த, உயர்ந்த);


றுப்பொடு நின்று – குன்றவரின் வேடத்தில் (வந்து) நின்று (இரண்டாமடியில் வருணிக்கப்பட்ட ’வள்ளியாகிய மடக்கொடியின் முன் குறவர் வேடத்தில் வந்து நின்று’ என்று தொடர் அமையும்), வள்ளியைக் கவர முருகன் ஆடிய திருவிளையாடல் இது;


மானினியே – (இனி வருவன வள்ளி முன் வந்து நின்ற முருகன் சொல்வதாய் அமையும் வசனம்) இளமையான பெண்ணே (மானினி – பெண், மானம்மிகுந்த பெண் என்றும் உரைக்கலாம்);


கனியே பழம் போன்று இனிமையானவளே; (என் விருப்பத்திற்கு கனி (இணங்கு) என்று இரட்டுற மொழியினும் அமையும்);


னி நீ நீ இனிமேல்;


வருந்தும் ன்றனை (உன்னைக் கூடாமல்) வருத்தப்படும் என்னை;

ணைந்து சேர்ந்து;


சந்ததம் மனம் குளிர்ந்திட எப்போதும் என் மனம் குளிர்வு அடையும்படி (சந்ததம் – எக்காலமும்);


ணங்கி வந்தருளாய் – (என் விருப்பத்திற்கு) உடன்பட்டு வந்து எனக்கு அருள் செய்க;


மயிலே மயில் போன்றவளே (இது சாயலை வருணித்தது);


குயிலே குயில் போன்றவளே (இது குரலினிமை);


ழிலே அழகு நிறைந்தவளே (இது உருவம் உள்ளம் இரண்டையும்);


மட ம்மடமை பொருந்திய அன்னமே (மடமை – இளமை, மிருது), ‘அன்னம்’ என்பது ‘அனம்’ என்று குறுக்கல் விகாரமாய் நின்றது;


நிது ஏர் ஆர் உன் சிறப்பு பொருந்திய (ஏர் – சிறப்பு, உயர்வு; ஆர் – பொருந்துதல்);


மடிக்கு ஒரு வந்தனம் மடிக்கு ஒரு வணக்கம் (மடி – மார்பக அல்லது தொடைப்பகுதி அல்லது தனிமை என்று மூன்று பொருளிலும் கொள்ளலாம்);


டிக்கு ஒரு வந்தனம் திருப்பாதங்களுக்கு ஒரு வணக்கம்;


வளைக்கு ஒரு வந்தனம் கைவளையல்களுக்கு ஒரு வணக்கம்;


விழிக்கு ரு வந்தனம் கண்களுக்கு ஒரு வணக்கம் (என்று முருகன் காதலியை வழிக்குக் கொண்டுவர அவள் ஒவ்வொரு அங்கத்திற்கும் தனித்தனி வணக்கம் செய்கிறான் என்று சுவைபட பாடியுள்ளார்!);


வா னும் ஓர் மொழியே சொலு நீ என்னை (உன்னோடு சேர) ‘வா’ என்னும் ஒரு சொல்லைச் சொல்லு நீ (அது போதும், என்றவாறு!) ‘என்னும்’ என்பது ‘எனும்’ என்றும், ‘சொல்லு’ என்பது ‘சொலு’ என்றும் நின்றன, குறுக்கல் விகாரம்; மொழி – சொல்;


மணம் கிளர்ந்த மணத்தில் கிளர்ச்சி உண்டாக்கிய;


ல் டம்பு லங்கிடும்நல்ல உடம்பு பொலிந்திடும்;


மதங்கி இளைய பெண்ணே (மதங்கி – ஆடல் பாடல் வல்ல பெண் அல்லது பதினாறு வயது பெண்);


ன்று உம் மகிழ்ந்திடும்படி இன்று என் உள்ளம் மகிழ்ச்சி அடையும்படி (சொல்); ‘உள்ளம்’ ‘உளம்’ என்று குறுக்கல் விகாரமாய் நின்றது; (
‘மதங்கியாகிய வள்ளியின் உள்ளம் மகிழும்படி’ என்றும் உரைக்கலாம்);


மான் மகளே மான் போன்ற பெண்ணே (அல்லது) சிறந்த தலைவனின் மகளே (மான் – பெரியவன் என்றும் பொருள்படும்);


னை ஆள் நிதியே என்னை ஆட்சி உடைய செல்வமே (நிதி – செல்வம், பெரும் மதிப்பு மிக்க பொருள்), ‘எனை’ – என்னை (குறுக்கல்);


எனும் மொழி என்பன போன்ற மொழிகள்;


பல நூறே பலப்பலவாம் (நூறு என்பது அதிகமான எண்ணிக்கை என்று குறித்தது)



விளக்கம்:



(தினைபுனம் காக்கும் வள்ளியிடம் குறவர் வேடத்தில் வரும் முருகன் காதல் வசனங்கள் பல பேசுகிறான்...)



(அவ்வள்ளியாகிய) இளைய கொடி முன் குறவர் வேடத்தில், தலையாய விருப்பமுடன் வந்து நின்று, ”இளமையான பெண்ணே, கனியே, இனி நீ வருந்தும் என் மனம் எப்போதும் குளிரும்படி வந்து என்னை அணைய இணங்கி வந்து அருள் செய், மயிலே, குயிலே, அழகே, இள அன்னம் போன்றவளே உனது சிறப்பான மடிக்கும், அடிக்கும், வளைக்கும், விழிக்கும் ஒவ்வொரு வணக்கம் செய்கிறேன், மான் மகளே, என்னை ஆளும் செல்வமே, என் மணத்தில் கிளர்ச்சி உண்டாக்கும் நல்ல உடம்பு இலங்கும் பெண்ணே, என்னை வாஎன்று ஒரு சொல் உரை” என்று (கெஞ்சும்) மொழிகள் பலப்பல...



[நான்காமடி]



பதவுரை:



படித்து – (மொழிகள் பலநூறு) படித்து – உரைத்து (recite);


ள்தன் கைகள் பிடித்து அவ்வள்ளியின் கைகளை பிடித்து;


முனம் சொன படிக்கு முன்பு அவளுக்கு வாக்களித்த படியே; (”கைகள் பிடித்து சொன்ன படிக்கு” என்று கூட்டுக), முன்னம் – முனம், சொன்ன – சொன (குறுக்கல்);


மணந்து – மணம்செய்து (கொடுத்த வாக்கு தவறாமல் அவ்வள்ளியை மணம் செய்து);


ருள் அளித்த அருள் புரிந்த;


னந்த க்ருபாகரனே எல்லையற்ற அருள் புரிபவனே (அனந்தம் – அ + அந்தம் – முடிவில்லாத; க்ருபாகரன் – க்ருபை – கருணை, கரன் – செய்பவன்);


வரனே வரம் தருபவனே;


ரனே சிவனே (சிவனின் அம்சமே முருகன்);


படர்ந்த செந்தமிழ் எங்கும் பரவிய செம்மையான தமிழ் மொழி;


தினம் சொல் இன்பொடு நாளும் சொல்லும் இன்பத்தோடு (நாளும் தமிழ்ப் பாடல்களால் இறைவனை வழிபடும் இன்பத்தோடு) (படர்ந்த என்பதற்கு வழிபட்ட என்ற பொருளும் கொள்ளலாம்);


பதம் குரங்குநர் – (தமிழால் வழிபட்டு) திருவடியை வணங்குபவர் (பதம் – அடி, குரங்குதல் – வளைதல், இங்கே வணங்குதல் என்று பொருள்தரும்);


ம் தெளிந்து அருள் – (வணங்கும் அடியாரின்) உள்ளக் கருத்தை அறிந்து (அதற்கேற்றபடி) அருளும்;


பாவகியே முருகனே (பாவகி – நெருப்பில் தோன்றியவன், முருகன்; பிங்கல நிகண்டு);


சிகி ஊர் இறையே மயில் மீது ஏறும் இறைவனே (சிகி – மயில், கொண்டை உள்ளது என்பது நேரடிப் பொருள்);


திரு மலி செல்வம் நிறைந்த (திரு – செல்வம், அலைமகள் எனவும் உரைக்கலாம்; மலிதல் – மிகுதல்);


சமர் ஊரா போர் ஊரின் தலைவனே (’சமர்ஊர்’ என்பது முருகன் போர் செய்த தலமாகிய திருச்செந்தூரைக் குறிக்கிறது, சமர் - போர்);


பவக்கடல் – பிறவிக்கடல் (பவம் – இருப்பு, இப்பிறவி);


ன்பது கடக்கவும் – அக்கடலை கடக்கவும் (பிறவிப்பிணியை துறக்கவும்);

நின் துணை பலித்திடவும் உனது துணை எனக்கு அமையவும் (பலித்திடல் – உண்மையாதல்);


பிழை செறுத்திடவும் – என் குற்றங்களை களையவும் (செறுத்தல் – அழித்தல்);


கவி பாடவும் – (உன் மீது) செய்யுள் இயற்றவும்;


நீ  - நீ (இதை இறுதியில் கூட்டிக்கொள்ள வேண்டும்);


நடமாவுமே அடியேன் நடமாடாக்கூட (உன் அருள் வேண்டும்!);


படர்ந்து உன்னை போற்றி;


தண் யை நிதம் செயும் படி உன் கருணையை எனக்கு எப்பொழுதும் செய்யுமாறு (செய்யும் – செயும் (குறுக்கல்));


பணிந்த வணங்கிய;


ன்றனை (என்+தனை) – என்னை;


நினைந்து மனத்தில் எண்ணி;


வந்து அருள் – (நீ) வந்து அருள் செய்க;


பாலனனே காப்பவனே (பாலனம் – காத்தல், பாலனன் – காப்பவன்);


னை ள் சிவனே என்னை ஆளும் சிவனே (முருகனும் சிவனும் ஒன்றே என்பது பாம்பன் சுவாமிகளின் துணிபு, எனவே முருகனை ‘சிவனே’ என்றார்; ஒன்று என்ற போதும் இரண்டு அம்சங்கள் ஆவதை உணர்ந்த ‘ஐம்முகச்சிவன்’ ‘அறுமுகச்சிவன்’ என்று குறிப்பார்);


வளர் அயில் முருகோனே என்றும் பெருகும் அழகுடைய முருகனே (அல்லது) ஓங்கி வளரும் வேலை உடைய முருகனே! (அயில் – அழகு, வேல்).



விளக்கம்:



[உமை புதல்வா, திருமகளின் மருமகனே, சரசுவதியின் நாயகன் பிரம்னும் நாடும் அமுதமே, தேவயானையின் காவலனே, குகனே, பரம்பொருளே, தேவர்கள் எப்போதும் தொழுகின்ற திருப்பாதங்களை உடையவனே...] [முதலடி]



[பல வகையான அணிகலனும் ஆடைகளும் பூண்டு, தினைபுனம் காவல் செய்ய அங்கே தங்கி, கிளிகளும் போற்றும் இனிய குரலில் ஆலோலமிடும் வள்ளி...] [இரண்டாமடி]



[என்ற மடக்கொடியின் முன்னர் குறவர் வேடத்தில் சென்று அதிகமான விருப்பமுடன் நின்று, “இளையவளே, என் மனத்துயர் நீங்க என்னை வந்து சேர், உன் அங்கங்களுக்கு தனித்தனி வணக்கம், என்னை ‘வா’ என்று அழைக்கும் ஒரே ஒரு சொல்லை சொல்” என்று கெஞ்சும் பல மொழிகளை...] [மூன்றாமடி]


சொல்லி, அன்று அவளுக்கு அளித்த வாக்குபடியே அவளைத் திருமணம் செய்து அருளியவனே, கருணை மிக்கவனே, வரனே, அரனே, செந்தமிழ்ப் பாடலால் உன்னை நாளும் போற்றும் அன்பரின் உள்ளத்தை அறிந்து (அதன்படி) அருள்பவனே, நெருப்பில் தோன்றியவனே, மயில்மீது வருபவனே, செல்வம நிறைந்த திருச்செந்தூரின் தலைவனே, பிறவிக்கடலைக் கடக்கவும், உனது துணை கிடைக்கவும், என் குறைகளைக் களையவும், பாடல் இயற்றவும், (ஏன் அடியேன்) நடமாடவும் உன் அருள் வேண்டும், அதனை அருள் என்று உன்னை போற்றி வணங்கும் என்னை மனத்தில் நினைத்து நீ வந்து அருள் செய்க! என்னைக் காப்பவனே, என்னை ஆளும் சிவனே, என்றும் வளரும் அழகுடைய முருகப்பெருமானே!


-----------------------------------------------------
பாம்பன் சுவாமிகள் முருகனின் திருவருள் பெற்று இப்பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றை நாம் படிக்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். ’அவனருளாலே அவன் தாள் வணங்கி...’ என்றதைப் போல, அவன் அருளால்தான் அடியேனும் இதற்கு உரை செய்வோம் என்ற அரிய காரியத்தில் ஈடுபடலாயிற்று... என் சிறுமதிக்கு எட்டிய அளவிலேயே உரை செய்துள்ளேன், இதனைப் படிப்பவர்கள் பாடலை இன்னும் உணர்ந்து அனுபவித்து படித்து / பாடி அருள்பெற வேண்டும் என்பதே நோக்கம்... குற்றம் குறைகள் இருப்பின் தயங்காது சுட்டிக்காட்டவும்... நன்றி!

மற்ற பாடல்களும் உரைகளும் விரைவில் இடப்பெறும்...

5 comments:

  1. வணக்கம், பாம்பன் சுவாமிகள் பாடல்களுக்கு உரை எழுதும் தங்களது பணியை பாராட்டியே ஆக வேண்டும். உயர்ந்த தமிழில் உள்ள சுவாமிகளின் பாடல்களை விளக்குவது, சாதாரண காரியம் அல்ல. தாங்கள் இது போன்று பல சுவாமிகள் பாடல்களை விளக்கம் எழுத வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். வளரட்டும் தங்கள் பணி.

    சீனிவாசன் ஜானகிராமன்

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர், வணக்கம்!
      சுவாமிகளின் இவ்வழகிய வண்ணமும் பிற பாடல்களும் எனக்கு அறிமுகமானது திருவருள் பேறே... அவற்றைப் படிக்கவும், புரியவும் இயன்றது (இயல்வது) என் முன்வினைப் பயனேயாம்... திருவருள் துணையிருந்தால் நிச்சயம் இயன்றவரை செய்கிறேன்...

      நேரம் எடுத்து படித்துக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி...

      அயிற்கையோன் அருளட்டும்...

      -விசய் :-)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. thank you very much for the detailed commentary. I look forward to the next three sections

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா....

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

    ReplyDelete