08 February, 2010

பகல்தவச் சிறிதே - பழைய ஹைக்கூ 2

ஹைக்கூ ஒரு அழகான கவிதை வடிவம் - ”வடிவம்” என்ற பொழுதிலும் ஹைக்கூவின் சுவை அதன் யாப்பைவிட அதில் சொல்லப்பட்ட பொருளிலேயே பெரும்பான்மை உள்ளது - இதை இன்றைய ஹைக்கூ புனைஞர்கள் (என்னையும் சேர்த்துதான்) இன்னும் முழுதாய் புரிந்து கொள்ளவில்லை என்பதே என் கருத்து!

ஒரு நல்ல ஹைக்கூ படிபவரின் எண்ணவோட்டத்தை தடுத்து நிறுத்தி, அதனை ஒருமுகப்படுத்தி சீராக்கும் - இதற்கு அந்த ஹைக்கூவின் சொற்கோவை (யாப்பு) சிறிது உதவுமென்றால், பெரிதும் உதவுவது அதன் பொருளமைதியே - உலகின் இயல்புகளை, அதன் மெய்ப்பொருட்களை உரைக்கையில்தான் இந்த தடுத்துச்சீராக்கல் இயலும் - இந்தவகையில் நம் பழைய (குறிப்பாய் சங்க) இலக்கியங்களின் “பொருண்மொழிக் காஞ்சி”, “முதுமொழிக் காஞ்சி”, “செவியறிவுறூஉ” போன்ற துறைகள் உலகின் இயல்பை எடுத்துச் சொல்வதில் ஹைக்கூக்களை ஒத்து இருக்கின்றன (ஆனால் சற்றே பெரிதாய்!) இவற்றின் பொருளின் சாரத்தில் ஹைக்கூக்களைக் காண்பது எளிது (இதையும் காண்க).

ஆனால், அரசனைப் புகழும் “வாகை” பாட்டில் ஒரு ஹைக்கூவை அழகாய் பொதிந்துள்ளார் இடைக்குன்றூர் கிழார்!

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் போர் திறத்தை இவ்வாறு புகழ்கிறார் அவர்,

மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
தெண்கிணை மன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்த்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே!

-புறம் 79

”தன் பழமையான ஊரின் முன்னர் உள்ள குளிர்குளத்தில் குளித்து, மன்றத்தில் வளர்ந்துள்ள (தன் குடிக்குரிய) வேம்பின் ஒளிமிக்க தளிரை சூடி, முரசம் அதிர்ந்து முன் செல்ல, களிற்றியானையைப் போல நடந்து...” என்ற முன்னுரைகளை விட்டுவிட்டு,

“கொடியபோர் செய்யும் செழியன் வந்துவிட்டான்,
அவனை எதிர்க்கும் மள்ளர் பலர்,
அவருள் சிலர் பிழைக்கலாம் - காரணம்
பகல்பொழுது மிகச் சிறியது!”

என்னும் முடிவுரையைப் பார்த்தோமேயானால், பொழுது சாய்ந்தபின் போர் செய்யாத நெடுஞ்செழியனின் பண்பையும், சிறிய பொழுதிற்குள் பலரை வீழ்த்தும் அவனது ஆற்றலையும் சொல்லலுற்ற புலவர் அழகானதோர் ஹைக்கூவில் அதைச் செய்திருப்பது புலனாகும்!

No comments:

Post a Comment