22 August, 2010

இயற்பியல் இலக்கணம் - இது எப்படி இருக்கு!

ஆர்வமும் கோளாறும் சேர்ந்தால் என்ன ஆகும்? விடை கீழே... தமிழுணர்வும், இயற்பியல் அறிவும் சேர்ந்ததன் விளைவு...

பாவகைகளைக் கற்று அவற்றில் பாடல் இயற்றிப் பார்ப்பது என் ஆர்வங்களில் ஒன்று, அவ்வழியில் பண்டைத் தமிழர் அறிவுப்புலங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்திய “நூற்பா” என்னும் பா வகையில் யாத்துப் பார்க்க ஆவல் வந்தது, அதற்கான சரியான பாடுபொருள் இலக்கணமே, ஆனால் தமிழிலக்கணம் பாடும் தகுதி எனக்கில்லை என்பதினால் இயற்பியல் இலக்கணம் பாடியுள்ளேன்!

அறிவுப்புலங்களை இம்மாதிரி நூற்பாக்களாகச் செய்து வைப்பதால் அவற்றை மனப்பாடம் செய்வதும், தக்க சமயத்தில் இடத்தில் அவ்வறிவைப் பயன்படுத்துவதும் எளிதாகும், (மனப்பாடம் செய்வது ஆழ்மனதில் அப்பொருளைக் கொண்டு சேர்க்கும் என்பது என் கருத்து - மேலும் இங்கே நான் குறிப்பிடும் மனப்பாட முறையும் இன்று நம் பள்ளிகளில் கையாளப்படும் மனப்பாட முறையும் முற்றிலும் வேறானவை ஆகும்!)

மேல் குறிப்பிட்ட காரணங்களால் இயற்பியல் இலக்கணம் பயந்தரும் என்று நான் எண்ணுகிறேன், அது மெய்யா அல்லது மேலை நாட்டார் முறைகளைப் பெரிதும் பயன்படுத்தும் இற்றை நாளில் இதெல்லாம் வெட்டிவேலையா என்பதை நீங்கள்தான் கருத்துரைக்க வேண்டும் (எதிரொலிகளின் அடிப்படையில் என் முயற்சியை நான் தொடர்ந்து முடிப்பதோ அல்லது கைவிடுவதோ நிகழும் - என்னை அறிந்தவர்கள் அருள்கூர்ந்து “நன்று” என பொத்தாம் பொதுவாக கருத்து இடாமல், முடிந்தவரை அலசி ஆய்ந்து, கிழித்து தைத்து, ஆக்கப்பூர்வமாய் கருத்திட்டுப் போனால் நலம்!)

இயற்பியல் இலக்கணம்

இறை வணக்கம்

அணுவின் அணுகி இருப்பது எதுவோ
அண்டத்தின் அகண்டு நிலைப்பதும் அதுவே
இயற்கை எனினும் இறைவன் எனினும்
இயக்குவ தொன்றே இருப்பமதை வாழ்த்தியே!           0.1

அவையடக்கம்

அண்டத்தின் அகத்தே மண்டலமோர் தூசி
மண்டலத்தின் மடியில் கதிரோர் தூசி
கதிரொடு ஒட்டிய உலகோர் தூசி
உலகினில் உழலும் உயிர்கள் தூசி
உலகினில் உழலும் உயிர்தூசி ஒன்று
உணரா முதலை உரைசெய் வதுவோ!                0.2
______________________________________________________

இயல் ஒன்று - இயக்கவியல் (Mechanics)

இறைவாழ்த்து 

இயங்குவ தியக்கினை இருப்ப திருத்தினை
மயங்கும் மதிக்கு மறையாய் நின்றனை
இயக்கவியல் அறைகுவன் இளையன்
பயக்கும் பயனெலாம் நீயென போற்றியே!          1.1
___________________________________________________

நூட்டன் விதிகள் 

நிற்கும் இயங்கும் பொருட்களின் இயல்பை
கற்கும் படிமூன்று கருகோள் கொண்டு
நூட்டன் என்பான் நுதலிய விதிகளை
காட்டுதும் ஈண்டு ஐயற அறிகவே,                         1.2

முதலே,
நிற்பவை நகரா நகர்வன நில்லா
உற்றோர் புறவிசை உறழ்த்தல் இன்றேல்.        1.3

(இயக்கம் இன்றி இருப்பவையும், இயக்கத்தொடு இருப்பவையும் வெளியிலிருந்து ஒரு புறவிசை [External Force] செயல்பட்டால் அன்றி தத்தமது இயக்கதிலிருந்து மாறுபடாது - அஃதாவது, ஒரு பொருளால் தானாகவே தனது இயக்கத்தை மாற்றிக் கொள்ள இயலாது; இத்தன்மை சடத்துவம் எனப்படும், அதனை கீழே நூற்பா 1.6-ல் காண்க)

இரண்டே,
உற்று உறழ்த்தும் புறவிசை அளவொடு
பற்றது கொள்ளும் பொருளுறும் முடுகே.         1.4

(முதல் விதியில் கூறியவாறு, ஒரு பொருள் புறவிசை ஒன்றினால் தனது இயக்கத்தில் மாற்றம் கொள்கையில், அம்மாற்றமானது அப்புறவிசையின் அளவை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் - Acceleration = Force / Mass - நூற்பா 1.7 காண்க; உறழ்த்துதல் - நிலை மாற்றுதல், முடுகு - Acceleration)

மூன்றே,
எல்லா விசைக்கும் எதிர்விசை எழுமே
சொல்லிய அவ்விரண் டும்அள வொக்குமே.    1.5

(இது நாம் அனைவரும் நன்கறிந்த, ஆனால் முறையாக புரிந்து கொள்ளாத, ஒரு விதிதான்! நூற்பா 1.8 காண்க)

சடத்துவம் (Inertia)

இயக்கத்தின் விலகாமை இருப்பவைக்கு இயல்பே.    1.6

(தானாக தன் இயக்கத்திலிருந்து மாறாமல் இருக்கும் தன்மை அனைத்து பொருள்களுக்கும் இயல்பாகும் - இதுவே சடத்துவம் - இது முதல் விதியின் பயனாகும்)

F = m.a 

முடுகொடு நிறையின் முறைபெருக் கத்தை
படுவிசை அதனின் பலமென்ப புலவர்.                          1.7

(முடுகு - விசையால் உந்தப்படும் பொருளின் திசைவேகம் மாறும் அளவு (Acceleration); நிறை - பொருளின் திணிவு (Mass); இங்கே முறை பெருக்கம் எனச் சொல்லியது விசையும் முடுகும் திசையன்கள் ஆனால் நிறை திசையிலி என்பதைக் குறிக்க; முறை பெருக்கம் - திசையனுகுரிய பெருக்கம்)

விசையும் எதிர்வும் வினைபுரிந் திடுமே
அசையும் அசைக்கும் அவற்றில் முறையே.               1.8

(இது இரண்டாம் விதிக்கு புறனடை; விசைக்கு எதிர்விசை எழும் என்று சொல்லப்பட்டது, அவ்வாறு எழும் எதிர்விசையானது விசைக்கு காரணமான பொருளில் செயல்படும், அதாவது, விசையும் எதிர்விசையும் செயல்படும் பொருட்கள் வேறுவேறு ஆகும் - இதுவே ”அசையும்” ”அசைக்கும்” எனக் குறிக்கப்பட்டது; எடுத்துக்காட்டாய், மட்டையால் பந்தை அடிக்கையில் பந்தில் (அசையும் பொருள்) விசையும், மட்டையில் (அசைக்கும் பொருள்) எதிர்விசையும் செயல்படும்)

விசைஎன் பதனை விளக்கும் காலை
திசையுடன் அளபு சிவணிய துவ்வே.                             1.9

(விசை என்பதன் இயல்பைச் சொல்லின் அது திசையும் அளபும் பெற்ற திசையன் ஆகும்; சிவணுதல் - சேர்தல்)

விரைவும் முடுகும் விசையியல் பினவே.                   1.10

(திசைவேகமும்[விரைவு], முடுகும் கூட விசையைப் போலவே திசையன்கள் ஆகும்)

பொருள் என்பதன் பொருள் கூறிடின்
உருவத் திண்மையும் நிறையும் பெறுவதே.               1.11

(பொருள் [Particle/Body] என்பதன் இயல்பைச் சொல்கையில் அது உருவத்தின்மையும் [Solid] நிறையும் [Mass] பெற்று இருப்பது)
______________________________________________


இப்பொழுது இத்தோடு முடித்துக் கொள்கிறேன், இன்னும் ஒளியியல், வானியல் ஆகியவற்றிலும் சில நூற்பாக்கள் இயற்றியுள்ளேன், அவற்றை பின்னர் - படிப்பவர்களின் பின்னூட்டத்தினைப் பொறுத்து - தருகிறேன்.

இதைப் படிப்பதில் நேரம் செலவிட்டமைக்கு மிக்க நன்றி... மறக்காமல் கருத்திட்டுச் செல்லவும்...

08 February, 2010

முத்தம் - காமத்துப்பாலும் கலவியல்கல்வியும்

கலவியல்கல்வி (sex education) தேவையா இல்லையா என்பது இன்னும் விவாதத்திற்குட்பட்ட ஒன்றாகவே இருக்கும் நிலையில் என் கருத்து தேவை என்பதே - அதையும் நம் பைந்தமிழ் இலக்கியங்கள் மூலம் தரவேண்டும் என்பது என் அவா!

அந்தவகையில் முதலில் நிற்கும் தகுதியுடையது திருவள்ளுவரின் காமத்துப்பாலே. இதன் குறள்களை எடுத்துக்கொண்டு அலசி ஆய்வதன் மூலம் கலவியலை கற்பிக்க முயலப்போகிறேன் (- ”என் கருத்து” என்ற வகையில் முழுச்சுதந்திரத்துடன் இதைச் செய்யப்போகிறேன் - சரி/தவறு என்று நீங்களும் அதே சுதந்திரத்துடன் கருத்துரையுங்கள்!)

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். -திருக்குறள் 1289
”காமம் (காதல்) மலரைவிட மென்மையானது, சிலரே அதனை
நன்கு உணர்ந்து அதன் பயனை முழுதாய் துய்ப்பர்”

என்று வள்ளுவரே உரைப்பதற்கு ஏற்ப காதலின் நுண்மைகளை புரிய தலைப்படுவோம், தலையான புலவனின் வழி நின்று...

அழகான விதயத்துடன் துவங்கினால் அது கருத்தை ஈர்க்க உதவும் - காதலே அழகுதான், அதில் அழகு முத்தம் - ஆக முத்தத்திலிருந்தே துவங்கலாம்!

முத்தம் என்றவுடன் தெரிந்திருக்குமே என்ன குறள் என்று! அதேதான்,

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். -திருக்குறள் 1121

“பணிவான மொழியைப் பேசும் இவளின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீரானது
பாலோடு தேனைக் கலந்ததைப் போன்று உள்ளது”

என்பது நேரிடைப் பொருள். இனி, இதை சற்றே ஆழ்ந்து அலசுவோம்...

காதலியின் சிறப்பை உரைக்கும் காதலனின் மொழியாய் அமைந்த இந்தக் குறள் முத்தத்தைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரைக்கு அடித்தளமாய் அமையக்கூடியது.

எந்தவொரு விதயத்தைப் பற்றியும் முழுதாய்அறிய வேண்டுமாயின், ‘என்ன’, ‘எப்படி’, ‘ஏன்’, ‘எவர்’, ‘எங்கு’, ‘எப்பொழுது’ என்ற ஆறு வினாக்களுக்கும்* விடைதேட வேண்டும் என்பது என் ஆசிரியர்கள் எனக்கு கற்பித்த முறை, இவை அனைத்திற்கும் நேரிடையாகவோ அன்றியோ விடையளித்து நிற்கிறது இக்குறள்! எவ்வாறு? முதலில் கேள்விகளை வரைத்துக்கொள்வோம் -

1. முத்தம் என்றால் என்ன?
2. எப்படி முத்தமிட வேண்டும்?
3. ஏன் முத்தமிட வேண்டும்?
4. எவரை முத்தமிட வேண்டும்?
5. எங்கு முத்தமிட வேண்டும்?
6. எப்பொழுது முத்தமிட வேண்டும்?

இனி விடைகளை அக்குறளில் தேடுவோம் -

1. முத்தம் என்றால் என்ன?

இது அன்பின் வெளிப்பாடு! ’காதற் சிறப்புரைத்தல்’ எனத்துவங்கிய வள்ளுவர் எடுத்தவுடன் முத்தத்தை புகழ்வதிலிருந்து காதலில் முத்தத்திற்குள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளலாம்! மேலும் அறிய 2ம் கேள்விக்கு செல்வோம்...

2. எப்படி முத்தமிட வேண்டும்?

பொதுவாய் ”வாயோடு வாய்” என்பதே காதலர்களுக்கான முத்தம் என்பது தெரிந்த விதயம் - ஆனால், அது உதடுகளின் உரசலாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்பது வள்ளுவர் வழி அறிகிறோம். உதடுகளைத் தாண்டிச் சென்று பற்களை நெருடிச்சுவைப்பதே ஆழமான முத்தம் - அதனால்தான் வள்ளுவர் ”வால் எயிறு ஊறிய நீர்” என்று எயிற்றை (பல்லைக்) குறிப்பிடுகிறார்! இன்றைய முத்த வல்லுனர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள்!

3. ஏன் முத்தமிட வேண்டும்?

இதற்கு இரண்டாய் விடையளிப்போம். ஒன்று, முத்தம் காதலர்களுக்குள் மேலும் இணக்கத்தை தருகிறது, பாலோடு தேன் கலந்ததைப் போன்ற சுவையை அளித்து தலைவன் - தலைவியை ஒருவர்பால் ஒருவரை கட்டுகிறது.

இரண்டு, முத்தம் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! ஆம்! முத்தம் தருகையில் நாம் நிறைய ‘கலோரிகளை’ எரிக்கிறோம், இரத்தவோட்டத்தை இதயத்துடிப்பை பெருக்குகிறோம், மிக மகிழ்ச்சியாய், உற்சாகமாய் இருக்கிறோம் - இவையெல்லாம் உடலுக்கு மிக நல்லவை.

வள்ளுவரின் “பாலொடு தேன்” உவமை இந்த இரண்டு பயன்களையுமே குறிப்பிடுகிறது என்பது வியப்பான செய்தி - பாலும் தேனும் சுவையானவை மட்டுமல்ல மருந்தாகவும் இருப்பவை! நம் சித்த மருத்துவத்தில் இவற்றிர்கு மிகமுக்கிய இடமுண்டு.

4. எவரை முத்தமிட வேண்டும்?

முத்தத்தைப் பற்றிய புரிதலில் இது மிக தேவையான ஒன்று - யாரை முத்தமிடுவது? கண்டவர்களையெல்லாம் முத்தமிட்டால் “பாலொடு தேன்” ஆகாது - சுவையில் ஆனாலும் மருத்துவ குணத்தில் ஆகாது! கண்டவர்களையும் முத்தமிடுங்கள் என்று சொன்னால் இது கலவியல் கல்வி ஆகாது! வரையரை வேண்டும்! தலைவன் தலைவியைதான் முத்தமிடுகிறான் - ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்க வேண்டும்!

இதுபோக, “பணிமொழி” என வள்ளுவர் சொல்லியிருப்பதை காண்கையில். “எவர்” என்ற வினாவிற்கு அவர் மேலும் ஒரு விடையை தந்துள்ளார் என்று அறிகிறோம்! “பணிமொழி”களையே முத்தமிட வேண்டும் - பாலொடு தேன் கலந்தது போன்ற வாய்நீர் வேண்டுமென்றால்! ஆம், மென்மையாக பேசும் இயல்புடையவர்கள் தாங்களும் மென்மையானவர்களாய் இருப்பார்கள் (ஆண் பெண் இருபாலருக்கும் இது தகும்!) ”மலரினும் மெல்லிய” காதல் மெல்லியலாளர்களுடந்தானே இனிக்கும்? அதுபோக, இயல்பில் மென்மையாய் பேசுபவர்களின் வாய் அமைப்பும் (பற்களின் அமைப்பும்) சீராய் இருக்கும் என்பது தெளிவு - “வால் எயிறு” என்றதையும் நோக்குக - ஆக “பணிமொழி”களைதான் முத்தமிட வேண்டும்!

5. எங்கு முத்தமிட வேண்டும்?

இதற்கான விடை காதலர்களின் தன்மை (அவர்களது காதலின் படினிலை), அவர்களது சூழலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது - பொதுவாய் தனிமையில் இடுவது நலம்! இதை “களவியலின்” வழி அறிகிறோம்!

6. எப்பொழுது முத்தமிட வேண்டும்?

இவ்வினாவிற்கு நாம் இக்குறள் அமைந்த இடத்திலிருந்து பொருள் கொள்வோம். இக்குறள் “காதற் சிறப்பு உரைத்தல்” என்னும் அதிகாரத்தில் உள்ளது, இவ்வதிகாரம் ”தகையணங்குறுத்தல்” ”குறிப்பறிதல்” ”புணர்ச்சி மகிழ்தல்” “நலம் புனைந்து உரைத்தல்” ஆகியவற்றுக்குப்பின் முறையே வைக்கப்பட்டுள்ளது. இதன்வழி, காதலியை கண்டு, அவள் அழகில் மயங்கி (தகையணங்குறுத்தல்), அவளது குறிப்பை உணர்ந்து காதலை அறிந்து (குறிப்பறிதல்), அவளோடு சேர்ந்து கலக்கையில் (புணர்ச்சி மகிழ்தல்) அவளின் நலங்களை போற்றி அவளை நம்வழிப்படுத்திபின் (நலம் புனைந்து உரைத்தல்) அவளை முத்தமிட வேண்டும் என்று அறிகிறோம்.

ஆக, ஒரு குறளில் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைவைத்து முத்தத்திற்கு இலக்கணம் நல்கியுள்ளார் ஐயர் வள்ளுவர்! இரண்டடி இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டு நிலைக்கிறது என்றால் சும்மாவா!

ஆதலினால் காதல் செய்வீர் - முத்தம் கொடுத்து நித்தம் மகிழ்வீர்!

*ஆங்கிலத்தில் இவற்றை ‘W5H' (What, When, Where, Who, Why, How) என்போம்!

பகல்தவச் சிறிதே - பழைய ஹைக்கூ 2

ஹைக்கூ ஒரு அழகான கவிதை வடிவம் - ”வடிவம்” என்ற பொழுதிலும் ஹைக்கூவின் சுவை அதன் யாப்பைவிட அதில் சொல்லப்பட்ட பொருளிலேயே பெரும்பான்மை உள்ளது - இதை இன்றைய ஹைக்கூ புனைஞர்கள் (என்னையும் சேர்த்துதான்) இன்னும் முழுதாய் புரிந்து கொள்ளவில்லை என்பதே என் கருத்து!

ஒரு நல்ல ஹைக்கூ படிபவரின் எண்ணவோட்டத்தை தடுத்து நிறுத்தி, அதனை ஒருமுகப்படுத்தி சீராக்கும் - இதற்கு அந்த ஹைக்கூவின் சொற்கோவை (யாப்பு) சிறிது உதவுமென்றால், பெரிதும் உதவுவது அதன் பொருளமைதியே - உலகின் இயல்புகளை, அதன் மெய்ப்பொருட்களை உரைக்கையில்தான் இந்த தடுத்துச்சீராக்கல் இயலும் - இந்தவகையில் நம் பழைய (குறிப்பாய் சங்க) இலக்கியங்களின் “பொருண்மொழிக் காஞ்சி”, “முதுமொழிக் காஞ்சி”, “செவியறிவுறூஉ” போன்ற துறைகள் உலகின் இயல்பை எடுத்துச் சொல்வதில் ஹைக்கூக்களை ஒத்து இருக்கின்றன (ஆனால் சற்றே பெரிதாய்!) இவற்றின் பொருளின் சாரத்தில் ஹைக்கூக்களைக் காண்பது எளிது (இதையும் காண்க).

ஆனால், அரசனைப் புகழும் “வாகை” பாட்டில் ஒரு ஹைக்கூவை அழகாய் பொதிந்துள்ளார் இடைக்குன்றூர் கிழார்!

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் போர் திறத்தை இவ்வாறு புகழ்கிறார் அவர்,

மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
தெண்கிணை மன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்த்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே!

-புறம் 79

”தன் பழமையான ஊரின் முன்னர் உள்ள குளிர்குளத்தில் குளித்து, மன்றத்தில் வளர்ந்துள்ள (தன் குடிக்குரிய) வேம்பின் ஒளிமிக்க தளிரை சூடி, முரசம் அதிர்ந்து முன் செல்ல, களிற்றியானையைப் போல நடந்து...” என்ற முன்னுரைகளை விட்டுவிட்டு,

“கொடியபோர் செய்யும் செழியன் வந்துவிட்டான்,
அவனை எதிர்க்கும் மள்ளர் பலர்,
அவருள் சிலர் பிழைக்கலாம் - காரணம்
பகல்பொழுது மிகச் சிறியது!”

என்னும் முடிவுரையைப் பார்த்தோமேயானால், பொழுது சாய்ந்தபின் போர் செய்யாத நெடுஞ்செழியனின் பண்பையும், சிறிய பொழுதிற்குள் பலரை வீழ்த்தும் அவனது ஆற்றலையும் சொல்லலுற்ற புலவர் அழகானதோர் ஹைக்கூவில் அதைச் செய்திருப்பது புலனாகும்!