30 December, 2009

ஏழு கழுதை வயசு!

”ஏழு கழுதை வயசாச்சு, இன்னும் இப்படி...” என்று துவங்கி நீண்டுசெல்லும் அர்ச்சனைகளை நீங்களும் உங்கள் தாயிடமிருந்து கேட்டிருக்கின்றீர்களா? அப்படியானால், என்னைப் போல் நீங்களும் திருப்பி “அதென்ன ஏழு கழுதை வயசு? ஒரு கழுதைக்கு எத்தனை வயசு? ஏழு கழுதைக்கு எத்தனை வயசு?” என்று கேட்டிருப்பீர்களே!

“யாருக்குத் தெரியும்! எதோ, எங்க அம்மா என்னை அப்படி திட்டுவா, நானும் அதையே சொல்றேன்; நாங்களாம் உன்னை மாதிரி எங்க அம்மாவை எதிர்த்து கேள்வி கேட்டதில்ல” என்ற விடை எனக்கு கிடைத்ததைப் போல் உங்களுக்கும் கிடைத்திருக்குமே!

ஒரு கட்டத்தில் இதைப்பற்றி (எங்களின் இம்சை தாங்காமல்) நிறைய சிந்தித்து, “கடவுள் உயிரிணங்களைப் படைத்து ஒவ்வொன்றிற்கும் ஒரு கால அளவை ஆயுளாக தர, மனிதனைத் தவிர மற்றவை எங்களுக்கு இத்தனை ஆண்டுகள் தேவையில்லை குறைத்துக் கொடுங்கள் எனக் கேட்க, கடவுளும் அவ்வாறே அருள, அவைகள் வேண்டாமென ஒதுக்கிய வாழ்நாட்களை மனிதன் தனக்கு பெற்றுக்கொண்டான், அந்த வகையில் ஏழு வயதுக்கு மேற்பட்ட வாழ்நாள் கழுதையினுடையது, அதனால் ஏழு கழுதை வயசு என்று சொல்லியிருப்பார்கள்” என்ற ஒரு விளக்கத்தை (இதன் அடிப்படையில்தான் “நாற்பது வயதில் நாய்க்குணம்” என்ற பழமொழி வழங்குவதாய் உபரி தகவலோடு) ஒருநாள் தந்தார் எங்கள் பாட்டி!

அவ்வளவில் அந்த விளக்கத்தோடு நின்றுவிட்டிருந்த என் “ஏழு கழுதை வயசு” விளக்கம், அண்மையில் நான் “புறப்பொருள் வெண்பாமாலை” நூலை வாங்கிப் படித்தபொழுது சற்று மாறிவிட்டது, அதை பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை (கருத்து சரியோ தவறோ, ஏற்புடையதோ அன்றோ, கருத்துக்களை இடுங்கள், விவாதிப்போம்)...

வெட்சி, கரந்தை என்று பொதுவாக சிலத்திணைகளை அறிந்திருந்த எனக்கு “பொதுவியல் திணை”-யில் ஒரு துறை “ஏழு கழுதை வயசை” நினைவூட்டியது, அது பின்வருமாறு,

பொதுவியற் படலம் - ஐந்தாவது துறை - ஏழகநிலை:

ஏழகம் ஊரினும் இன்னன் என்றவன்
தாழ்வில் ஊக்கமொடு தகைபுகழ்ந் தன்று.
(பு.பொ.வெ.மா - கொளு-10-5)


ஏழகம்” என்பது ஆட்டுக்கிடாய் - மன்னவன் (குதிரைக்கு பதில்) ஆட்டுக்கிடாய் ஏறி விளையாடும் வயதினனாய் இருப்பினும், ஆட்சிப்பொறுப்பை ஏற்று செவ்வனே நடத்துகையில் அவனை புகழ்வதே “ஏழகநிலை” என்பது கருத்து.

மன்னர்கள் சிறுவயதில், குதிரை ஏற போதிய உயரம் இல்லாத நிலையில், ஆட்டுக்கிடாய் ஏறி குதிரைப்போல் செலுத்தி விளையாடுவார்கள் என்பது என்வரையில் புதிய செய்தி - சங்கவிலக்கியத்தில் மிகவிளம் வயதில் ஆட்சியேற்ற, பாடல்பெற்ற ஒரே மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனே, அவன்மேல் ஏழகப்பாடல் எதுவுமில்லையே!

நம் செய்திக்கு வருவோம், ஒரு மன்னன் இளம்வயதினன் என்று வைத்துக்கொள்ளுங்கள், புலவர்கள் பாடிப்புகழும் அளவிற்கு நன்றாய் ஆட்சியும் செய்கின்றான் என்றும் கொள்ளுங்கள் - நம் நெடுஞ்செழியனைப் போல் - அன்னிலையில் அண்டைநாட்டு இளவரசன் ஒருவன் பொறுப்பின்றி திரிந்துகொண்டிருக்கிறான் என்றும் கொள்ளுங்கள், அவனது தாய் (அஃதாவது அந்நாட்டின் அரசி) அவனை எப்படி திட்டியிருப்பார்?

”அவனை (நம் கணக்குப்படி, நெடுஞ்செழியனை) பாரு, ஏழக வயசுல என்னென்ன செயல்கள் செய்யுறான், நீயும் இருக்கியே, வெட்டியா ஊரைச்சுத்திகிட்டு, வம்பு செய்துகிட்டு...” என்றுதானே!

ஒருவேளை, இந்த “ஏழக வயசுல” என்பதுதான் மருவி இன்று “ஏழு கழுதை வயசுல” என்றாகியிருக்குமோ?...

04 December, 2009

நடுக்கமும் நகையும்!

சமுதாயத்தில் ஆண்கள் பெண்களை எத்தனையோ படுத்துகின்றனர், உண்மைதான்! ஆனால், காதல் என்று வந்துவிட்டால் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு திண்டாடுவதுதான் நடக்கிறது! ‘ஓ...! இவன் காதலி இவனைப் போட்டுப் படுத்தியெடுக்குறாப் போல!’ -என்று நினைத்து விடாதீர்கள் (அது உண்மையே என்றாலும், அதை இங்கு சொல்லி, அவள் படித்துவிட்டால் பிறகு என் நிலை என்னாவது - அதனால் அதற்கெல்லாம் நாம் செல்ல வேண்டாம்!) ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஒரு காதலன் பட்ட பாட்டை சொல்லவே யாம் முனைகிறோம்....

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பா? எனின், சங்க காலத்திலா? புலியோடும் யானையோடும் போரிட்ட வீரத்தமிழனா காதலியிடம் பாடுபட்டான்?... - உங்கள் ஐயம் புரிகிறது!

தமிழன் வீரனேதான்! அவன் (தலைவன்) புலியோடு சண்டையிட்டுக் கொண்டே இருந்திருக்கலாம், குறிஞ்சியில் ஒருத்தியை (தலைவி) காதலித்து மணந்து கொண்டு மருதத்தில் வேறொருத்தியிடமும் (காதற்பரத்தை) சிக்கியிருக்கிறான்... அதனால் வந்த வினை!

காதல் பொங்க பரத்தையை, அவளது மணமிக்க கூந்தலைப் பற்றி, தன்பக்கம் இழுத்துத் தன்மடியில் அவளை அமர வைத்து, மிக்க வேலைபாடுள்ள அவளது கைவளைகளைக் கழட்டிக் (காதல் விளையாட்டு) விளையாடியுள்ளான்... பிறகு விதி விளையாடியிருக்கிறது - காதற்பரத்தையும் ஊடலை மேற்கொண்டுவிட்டாள்!

அந்தக் கோவத்தில் அவள் “அன்று நீ என்னை மடியில் வைத்து என் கைவளைகள்க் கழட்டிய விளையாட்டை உன் மனைவியிடம் போய் சொல்கிறேன் பார்” என்று சொன்னதுதான் தாமதம், தலைவனின் உடல் - பகைவர்களின் ஆநிரைகளை தன் வில்லின் திறத்தால் வென்று வந்து இரவலர்களுக்குப் பரிசாகத் தரும் மலையமான் திருமுடிக்காரி-யின் முன்னிலையில் வேற்றுனாட்டுக் கூத்தர் முழக்கும் மத்தளத்தின் மண் வைத்தப் பக்கத்தைப் போல் - நடுங்கியதாம்! இதைத் தன் தோழியிடம் கூறி நகைக்கிறாள் அந்தப் பரத்தை - “அதை நினைக்கும் பொழுதெல்லாம் நான் நகுகிறேன்!” என்று...

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டுநீர் ஆம்பல் தண்துறை ஊரன்
தேங்கமழ் ஐம்பால் பற்றி என்வயின்
வான்கோல் எல்வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து ‘சினவாது சென்றுநின்
மனையோட்கு உரைப்பல்’ என்றலின் முனைஊர்ப்
பல்ஆ நெடுநிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தை பேர்இசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ஆர் கண்ணின் அதிரும்
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே!
[பரணர் - நற்றிணை - 100 மருதம்]


(தோழி! அதை நினைக்கும் போதெல்லாம் நான் நகுவேன்!

பெரிய நகமுடைய மழைக்கொக்கின் கூம்பலைப் போல ஆம்பல் மலரும் ஆழமான குளத்தினை உடைய குளிர்ந்த துறை உடைய ஊரன் தேன்மணம் கமழும் என் ஐந்து திறப்பட்ட கூந்தலை பற்றி இழுத்து தன் மடியில் என்னை அமரவைத்து மிகச்சிறந்த வேலைபாடமைந்த ஒளிபொருந்திய என் கைவளைகளை கழற்றி விளையாடிய பூசலை, இப்போது கோவத்துடன் நான் சென்று ”என் கோவத்தைக் காட்டாது உன் மனையாளுக்கு உரைப்பேன்” என்று சொன்னவுடன் - பகைவரின் ஊருக்கு முனையிலே (வெளியிலே) பலவாக திரண்ட ஆநிரைகளைத் தன் வில்லின் திறத்தால் கவர்ந்துவந்து அவற்றை இரவலர்களுக்குக் கொடையாக அளிக்கும் மலையமான் திருமுடிக்காரி என்பவனது முன்னர் வேற்றுநாட்டுக் கூத்தர் பரிசில் பெறுவதற்காக முழக்கும் மத்தளத்தின் மண்வைத்தப் பக்கம் அதிர்வதைப் போல இருந்தது - நன்மையை செய்பவரான அவரது உடலின் நடுக்கம்!)


’என் கோவத்தைக் காட்டாது சொல்வேன்’ என்றது, தான் கோவமாய் இருப்பது தெரிந்தால் தலைவன் மீது வேண்டுமென்றே புனைந்துரைப்பதாய் தலைவி நினைத்துத் தலைவனை சினவாது விட்டுவிடுவாள் என்பதினால்! அதனின் பரத்தை கூற்றைக் கேட்பின் தலைவி முனிவாள் என்பது உறுதியாக, அதை நினைக்கையிலேயே தலைவனுக்கு உடல் நடுங்குகிறது!

”என் இடம்தான் வீரமாய் பேசுவான், தன் மகனின் தாயிடம் (மனைவியிடம்) கண்ணாடியில் தெரியும் பாவையைப் போல அவள் ஆட்டுவிக்கும் வண்ணம் இவனும் ஆடுவான்!” என்று (குறுந்தொகையில் எட்டாம் பாடலில்) பரத்தை கூறுவதை உணர்ந்தால் தலைவனின் உடல் நடுங்கியதன் பொருளையும் உணரலாம்!

ஆக, இந்த இருபெண்களும் அவனை என்னமாய் ஆட்டுவிக்கின்றனர்! ஆனாலும் அவன் மீண்டும் அவர்களிடமே செல்வதைப் பார்க்கையில்,

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து (குறள் - 1102)


- என்று வள்ளுவர் உரைத்ததற்கு புதிய பொருள் கிடைக்கிறதன்றோ?...

03 December, 2009

ஏன்? - தமிழும் இளைஞர்களும்...

எனக்கு இலக்கியம் மிக பிடிக்கும், இலக்கியவட்டம், இலக்கியகூட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவேன் - அந்த வகையில் அண்ணாநகர் தமிழ்பேரவையின் கூட்டம் ஒன்று நடப்பதாய் அறிந்து சென்ற காரிக்கிழமையன்று (சனிக்கிழமை) அதற்கு சென்றேன்.

இடத்தை கண்டறிவதிலும், பேருந்து கிடைப்பதிலும் ஏற்பட்ட சிக்கல்களால் காலம்தாழ்ந்தே சென்றேன், நான் சென்ற வேளை பேச்சாளர் ஏறத்தாழ சொற்பொழிவை முடித்திருந்தார் - திருவிளையாடற் புராணம் : வேதத்திற்கு பொருளருளி செய்த படலம்தான் தலைப்பு - எனக்கு தொகுப்புரையை மட்டுமே செவிதோய்க்க வாய்த்தது!

தொகுப்புரைக்குபின் நன்றியுரை ஆற்றியவர் உரையின் நடுவே ‘நம் கூட்டத்திற்கு இளைஞர்கள் நிறைய வரவேண்டும், அதுதான் சிறக்கும்’ என்று குறிப்பிட்டார், அனைவரது கண்ணும் சட்டென என்பக்கம் திரும்பின - காரணம் அங்கு இருந்ததில் நான் மட்டுமே (அகவையில்) இளைஞன்! நானொருவனாவது இருந்ததில் அவர்களுக்கு மெத்த மகிழ்ச்சி!

அந்த நொடி என் உள்ளத்தில் இந்த வினா எழுந்தது - பெரும்பான்மையான இளைஞர்களுக்கு இது போன்ற இலக்கிய சொற்பொழிவுகளும், உரையாடல்களும் ஏன் பிடிப்பதில்லை? இந்த வினா இதற்கு முன்னும் பலமுறை எனக்கு எழுந்திருக்கிறது - பலமுறை நான் சென்றுள்ள கூட்டங்களில் நான் மட்டுமேதான் இளைஞனாய் இருந்துள்ளேன் - அவ்ற்றில் பல இளைஞர்கள் கட்டாயம் இருக்க வேண்டிய கூட்டங்கள்! அப்பொழுதெல்லாம் எனக்கே தோன்றியோ அல்லது நண்பர்களிடம் வினவியதன் பயனாகவோ கிடைத்த பதில்கள்:

அ. அது அறுவை! ("bore adikkum!")
ஆ. அதுலாம் “பழைய” விஷயம், இப்ப உலகம் எவ்ளோ வேகமா போகுது, இன்னும் அத பத்தி எதுக்கு பேசிட்டு இருக்கனும்!
இ. அதுலாம் புரிய மாட்டேங்குது!


இவற்றுக்கு என் பதில்:

அ. புரியாததால்தான் அறுவையா இருக்கு, புரிந்தால் ஆர்வமா இருக்கும் (எப்படி புரிந்துகொள்வது? அதற்கு பதில் மூன்றைப் படிக்கவும்)
ஆ. அவை பழையவைதான் - ஆனால் அவற்றில் உள்ள நுணுக்கமும் அழகும் இன்றைய புதியவைகளில் இல்லை (இந்த பதிலின் கண்ணோட்டதில் ஒரு தனி பதிவையே போடலாம்!)
இ. சில (சரி சரி, “பல”) அரிதான, வழக்கற்ற சொற்களால் அவை புரிவது கடினமாகிறது, படிக்க படிக்க அச்சொற்கள் பழகிவிட்டால் சரியாகிவிடும்.


எனக்கு தெரிந்தவரையில் கூறிவிட்டேன்.

ஆனால், நான் பார்த்தவரையில் இணையத்தில் இருக்கும் இளைஞர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு இலக்கியங்களை அலசி ஆய்கின்றனர். சிக்கல் இயல் உலகில்தான் (அல்லது தமிழ் நாட்டில்தான், அல்லது என் பகுதியில்தான்) உள்ளது! 99% வெறும் செல்லுலாய்டு குப்பையாய் இருக்கும் திரைப்படத்திற்காக வீணாக்க பணமும் நேரமும் இருப்பவர்களுக்கு இலக்கியத்திற்கு ஏன் நேரம் கிடைப்பதில்லை?

இதை படித்தால், எனக்கு நீங்கள் இரண்டு உதவிகள் செய்யுங்கள்,
அ. இளைஞர்களை ஏன் இலக்கியம் கவரவில்லை என்று உங்களுக்கு தெரிந்த கரணியத்தை எனக்கும் தெரிவியுங்கள்
ஆ. இளைஞர்களை எப்படி இலக்கியத்தின் பக்கம் கவர்வது என்பதையும் சொல்லுங்கள் (சென்னையில் ஒரு இலக்கிய வட்டம் துவங்க விருப்பம் எனக்கு!)


மேலுமொரு செய்தி:

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள “லியோ மேன்நிலைப் பள்ளி”யில் காரிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்குத் துவங்கி சொற்பொழிவு நடக்கிறது - சென்னை அன்பர்கள் கலந்துகொள்ள முயலவும்.

பேரவையின் செயலாளர் :
திரு. நாகசுந்தரம்
தொ.பே: 044 26164387
கை.பே: 98404 68277

28 November, 2009

காலைத் தடுக்கிறது! - ஒரு “பழைய” ஹைக்கூ!

கவிதை என்பது சொற்கோவையின் (யாப்பின்) நுண்டிறத்தை மட்டுமே கொண்டு சிறப்பதில்லை. சரியான சொல் சரியான முறையில் சரியான் இடத்தில் இருப்பது அழகுதான், ஆனால் அதையும் மீறிய அழகையும் ஆழத்தையும் கவிதைக்கு தருவது அதில் பொதிந்துள்ள பொருளேயாம் - தமிழின் பழமையான இலக்கியங்களாய் நமக்கு இன்று கிடைக்கும் “சங்கவிலக்கியங்களை” படிக்கையில் என்னுள்ளத்தே தோன்றும் கருத்து இதுவேயாம்!

கவிதைகளில் எத்துனையோ வகைகள் உள்ளன. தமிழுக்கே செம்மையான யாப்பமைதிகள் பல உள்ளன. வேவ்வேறு மொழிகளின் ஒன்றன்மீதான மற்றொன்றின் தாக்கத்தால் ஒன்றின் மரபு மற்றொன்றில் கலந்து புதுப்புது வகைகள் உருவாகியும் வருகின்றன. அவ்வாறு ஜப்பானிய கவிதை வடிவான ‘ஹைக்கூ’ (Haiku) நம் கவிஞர்களை கவர்ந்து தமிழுக்கும் குடியேரியது. முறையாக சொல்வதென்றால் ஹைக்கூ என்பது பதிணேழு அசைகளில் (syllables) முன்று வரிகளால் யாக்கப்பெற்ற ஒரு குறுங்கவிதை.

ஹைகூவின் சிறப்பே அதன் பொருளமைப்பில்தான் உள்ளது. நம் திருக்குறளை போல அளவில் சிறிதாய் இருந்துகொண்டு பெறிய பொருளை/கருத்தை உள்ளடக்கி யிருக்கும். ஒற்றை பச்சை மிளகாயை நச்சென்று கடித்ததை போல நறுக்கென்றும் இருக்கும், ஒரு நொடியை தன்னுள் உறைய வைத்துக்கொண்ட புகைபடத்தை போல பல செய்திகளை சொல்வதாயும் இருக்கும். இதுதான் ஹைக்கூ. வாழ்வை படிக்க வரும் மாணவனுக்காக ‘ஜென்’ (Zen) ஆசான்கள் வடிவமைத்த உருவு சிறுத்தாலும் காரம் குறையாத கடுகுகளே ஹைக்கூக்கள்.

எல்லாம் சரி, நம் தமிழ் புலவர்களும் ஹைக்கூ எழுதியிருக்கிறார்கள், அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, என்றால் நம்புவீர்களா?

இன்றைய வடிவில் அல்ல என்றாலும், ஹைக்கூவிற்கான ‘நறுக்குத்தன்மை’ சிறிதும் குறையாத பாடல்கள் பல நம் சங்கவிலக்கியத்தில் உள்ளன. என் கண்களில் முதலில் பட்டது கீழ்வரும் இந்தப் புறநானூற்றுப் பாடல்தான்:

அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. (புறம் - 193 - ஓரேருழவர்)


பாட்டின் (ஹைக்கூ) பொருள் இதுதான்:

வேடன் துரத்தும் மானைப் போல
ஓடி பிழைத்துவிட முடியுமோ?
காலை தடுக்குமே வாழ்க்கை!


(தெளிவுரை, பதவுரையெல்லாம் வேண்டுமா? ‘நறுக்குத்தன்மை’யை கெடுத்துவிடுவானேன்!)

”ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” என்ற வரிதான் என்னை மிகவும் கவர்ந்து, இப்பாடலில் பொதிந்துள்ள அந்த அழகிய ஆழமான ஹைக்கூச் சுவடை உணர்த்தியது! புலவர் எத்துனை நன்றாய் வாழ்க்கையின் இயல்பை புரிந்துகொண்டுள்ளார்?...

26 November, 2009

காளமேகம் - ககர கவிதை

வணக்கம் நண்பர்களே...

இன்று பாடல் என்ற பெயரில் பொருளற்ற சொற்களாலும் இரைச்சலான இசையாலும் கருத்தையும் காதையும் கிழிக்கும் பாடல்களோடு சிறிதும் ஒப்பிட இயலாத மீநுந்திறத்தோடு விளங்குபவை நம் தமிழ் இலக்கிய பாடல்கள்.

சொல்லால் பொருளால் பல திறங்களை காட்டிச்சென்றுளனர் நம் புலவர்கள், அவர்களுள் கவி காளமேகம் என்பார் ஓர் ஆசுகவி (எவ்வகை கவியும் விரைந்து பாடவல்லவர்) ஒரே எழுத்தின் வரிசையை வைத்தே பாடல்களை, அதுவும் வெண்பாக்களை, பாடியுள்ளார். அங்ஙணம் அவர் ‘ககர’ வரிசையில் பாடிய பாடலொன்றை கீழே தந்துள்ளேம்.

இதை படித்தபின் இன்றுலவும் சொற்கூளங்களை ”பாடல்” எனவும் மனம் வருமோ?

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.


காக்கைக்கா காகூகை [காக்கைக்கு ஆகா கூகை] - காகத்திற்கு கூகை (ஆந்தை) ஆகாது, இரவில் அது காக்கையை வெல்லும்
கூகைக்கா காகாக்கை [கூகைக்கு ஆகா காக்கை] - கூகைக்கு காகம் ஆகாது, பகலில் இது கூகையை வெல்லும்
கோக்குக்கூக் காக்கைக்குக் [கோக்கு கூ காக்கைக்கு] - கோ [மன்னன்] கூவை [உலகை/ நாட்டை] காக்க வேண்டுமாயின்
கொக்கொக்க [கொக்கு ஒக்க] - கொக்கை போல இருக்க வேண்டும், அஃதாவது கொக்கு தனக்கு இரையாக மீன் சிக்கும் வரை காத்திருப்பதை போல மன்னவன் சரியான நேரம் பார்த்து செயலாற்ற வேண்டும், அவ்வாறு இல்லையென்றால்,
கைக்கைக்கு காக்கைக்கு - கைக்கைக்கு [பகையிடமிருந்து] காப்பதற்கு
கைக்கைக்கா கா [கைக்கு ஐக்கு ஆகா] - ஐக்கு [தலைவனுக்கு] கைக்கு ஆகா [செய்ய இயலாது].


எப்படி...?