03 June, 2016

பஞ்சாமிருத வண்ணம் - உரை - 1. பால்

அறிமுகம் – வண்ணம்

வண்ணம் என்பது தமிழ் யாப்பு வகைகளில் ஒன்று. (வர்ணம் என்ற கருநாடக இசை சொல்லுடன் குழப்பிக்கொள்ளாதீர்கள். தமிழ் இலக்கியத்திலேயும் ‘வண்ணம்’ என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன.)

வண்ணப் பாடல்கள் நான்கு அடிகள் கொண்டிருக்கும். 
நான்கு அடிகளும் ஒரே அளவாய், இறுதியில் ஒரு தனிச்சொல் பெற்று வரும் (இந்தத் தனிச்சொல் ‘தொங்கல்’ எனப்படும்). 

அடிகள் நான்கும் ஒரே எழுத்து அமைப்பைக் கொண்டிருக்கும். குறில், நெடில் ஆகிய உயிரும், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மெய்யும் ஒவ்வொரு அடியிலும் ஒரே வரிசையில் அமைந்திருக்க வேண்டும், அதுவே வண்ணம் எனப்படும்.

அருணகிரிநாதரின் திருப்புகழ் அனைத்துமே இவ்வகை வண்ணப்பாடல்கள்தான். 

’முத்தைத்தருப் பத்தித்திருநகை அத்திக்கிறைச் சத்திச்சரவண…’ எனவரும் முதல் அடிக்கு ஏற்பவே, அதே அமைப்பில் குறிலும் நெடிலும், வல்லினமும் மெல்லினமும் பெற்று அடுத்தடுத்த அடிகளும் வருவதைக் காண்க.

வண்ணப்பாடல்களின் எழுத்தமைப்பை (சந்தக்குறிப்பு) ‘த/ன’ ‘தா/னா’ ‘த்’ ‘ந்’ ‘ய்’ ஆகியவற்றால் குறிக்கப்படும். ‘த/ன’ குறிலின் இடத்தையும், ‘தா/னா’ நெடில், ‘த்’ வல்லொற்று, ‘ந்’ மெல்லொற்று மற்றும் ‘ய்’ இடையொற்றின் இடத்தையும் முறையே குறிக்கும். 
இதன்படி, மேற்குறிப்பிட்ட திருப்புகழ் பாடலின் சந்தக்குறிப்பு கீழ்வருமாறு தரப்படும்:

’தத்தத்தனத் தத்தத்தனதன தத்தத்தனத் தத்தத்தனதன…’ 

(த என்பது குறிலை மட்டுமே குறிக்கும், அது வல்லினம், மெல்லினம், இடையினம் என்று எதுவாகவும் இருக்கலாம், ஆனால் ‘த்’ வரும் இடத்தில் வல்லின மெய் மட்டுமே வரவேண்டும். இது போல மற்றவற்றிற்கும்!)

பாடலின் நான்கு அடிகளும் ஒரே எதுகையில் (இரண்டாம் எழுத்து ஒன்றாதல்) அமையும். ஒரே அடியின் சீர்களுக்கிடையில் மோனை (முதல் எழுத்து ஒன்றாதல்) அமையும் (பொதுவாக நீண்ட அடிகளை உடைய பாடல் அடிகளைச் சிறுசிறு ‘துண்டு’களாக வகுத்துக்கொள்வர், அப்படி வகுக்கப்படும் ஒவ்வொரு துண்டிலும் ஒரே மோனை அமையும், இப்படி மோனை அமைந்த அளவொத்த துண்டுகள் ‘பிணை’ என அழைக்கப்படும்.)

இனி நாம் பாம்பன் சுவாமிகளின் வண்ணங்களைப் பார்ப்போம்.

பாம்பன் 
ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள்
அருளிய

பஞ்சாமிருத வண்ணம்


1. பால்


சந்தம்

தனந்த தந்தன தனந்தனா தனந்த தந்தன தனந்தனா
.....தனந்த தந்தன தனந்தனா தனந்த தந்தன தனந்தனா

.....தந்தந் தந்தன தந்தானா தந்தந் தந்தன தந்தானா
.....தந்தந் தந்தன தந்தானா தந்தந் தந்தன தந்தானா

.....தாந்த தந்தனனா தன தாந்த தந்தனனா
.....தாந்த தந்தனனா தன தாந்த தந்தனனா

.....தனந்த தந்தன தனந்த தந்தன தனந்த தந்தன தனந்தனா
.....தனந்த தந்தன தனந்த தந்தன தனந்த தந்தன தனந்தனா – தனதனதனதானா

பாடல்

இலங்கு நன்கலை விரிஞ்சனோ டனந்த னுஞ்சத மகன்சதா
.....வியன்கொ டம்பியர் களும்பொனா டுறைந்த புங்கவர் களுங்கெடா

.....தென்றுங் கொன்றைய ணிந்தோனார் தந்தண் டிண்றிர ளுஞ்சேயா
.....மென்றன் சொந்தமி னுந்தீதே தென்றங் கங்கணி கண்டோயா 

.....தேந்து வன்படைவேல் வலிசேர்ந்த திண்புயமே
.....யேய்ந்த கண்டர்கா றொடை மூஞ்சி கந்தரமோ

.....டெலும்பு றுந்தலை களுந்து ணிந்திட வடர்ந்த சண்டைக டொடர்ந்துபே
.....யெனுங்கு ணுங்குக ணிணங்க ளுண்டரன் மகன்பு றஞ்சய மெனுஞ்சொலே - களமிசையெழுமாறே [1]

துலங்கு மஞ்சிறை யலங்கவே விளங்க வந்தவொர் சிகண்டியே
.....துணிந்தி ருந்துயர் கரங்கண்மா வரங்கண் மிஞ்சிய விரும்புகூர்

.....துன்றுந் தண்டமொ டம்பீர்வாள் கொண்டண் டங்களி னின்றூடே
.....சுண்டும் புங்கம ழிந்தேலா தஞ்சும் பண்டசு ரன்சூதே

.....சூழ்ந்தெ ழும்பொழுதே கரம்வாங்கி யொண்டிணிவே
.....றூண்டி நின்றவனே கிளை யோங்க நின்றுளமா

.....துவந்து வம்பட வகிர்ந்து வென்றதி பலம்பொ ருந்திய நிரஞ்சனா
.....சுகங்கொ ளுந்தவர் வணங்கு மிங்கித முகந்த சுந்தர வல்ங்க்ருதா - அரிபிரமருமேயோ [2]

அலைந்து சந்தத மறிந்திடா தெழுந்த செந்தழ லுடம்பினா
.....ரடங்கி யங்கமு மிறைஞ்சியே புகழ்ந்த வன்றுமெய் மொழிந்தவா

.....அங்கிங் கென்பத றுந்தேவா யெங்குந் துன்றிநி றைந்தோனே
.....யண்டுந் தொண்டர்வ ருந்தாமே யின்பந் தந்தரு ளுந்தாளா

.....ஆம்பி தந்திடுமா மணி பூண்ட வந்தளையா
.....வாண்ட வன்குமரா வெனை யாண்ட செஞ்சரணா

.....அலர்ந்த விந்துள வலங்க லுங்கடி செறிந்த சந்தன சுகந்தமே
.....யணிந்து குன்றவர் நலம்பொ ருந்திட வளர்ந்த பந்தனை யெனும் பெணாள் - தனையணை மணவாளா [3]

குலுங்கி ரண்டுமு கையுங்களா ரிருண்ட கொந்தள வொழுங்கும்வேல்
.....குரங்கு மம்பக மதுஞ்செவா யதுஞ்ச மைந்துள மடந்தைமார்

.....கொஞ்சும் புன்றொழி லுங்காலோ ருஞ்சண் டன்செய லுஞ்சூடே
.....கொண்டங் கம்பட ருஞ்சீழ்நோ யண்டந் தந்தம்வி ழும்பாழ்நோய்

.....கூன்செ யும்பிணிகால் கரம் வீங்க ழுங்கலும்வாய்
.....கூம்ப ணங்குகணோய் துயர் சார்ந்த புன்கணுமே

.....குயின்கொ ளுங்கடல் வளைந்த விங்கெனை யடைந்தி டும்படி யினுஞ்செயேல்
.....குவிந்து நெஞ்சமு ளணைந்து நின்பத நினைந்து யும்படி மனஞ்செயே - திருவருண் முருகோனே. [4]



(எண்கள் அடி எண்கள்)

[முதலடி]

பதவுரை

விரிஞ்சன் – பிரம்மா, இலங்கு நன் கலை விரிஞ்சன் – பொலியும் பல நல்ல கலைகளை (கல்வி) உடைய பிரம்மா (சரசுவதியின் கணவனாகையால் இவ்வாறு சொன்னார்),

அனந்தன் – விஷ்ணு (பாம்பணையில் துயில்பவன், அனந்தன் – ஆதிசேஷன்),

சதமகன் – இந்திரன் (நூறு வேள்விகளைச் செய்தவன், சதம் – நூறு),

தம்பியர் – முருகப்பெருமானின் தம்பியர்களான வீரபாகுத்தேவர் முதலிய நவவீரர்கள் (தேவசேனாபதியின் தம்பியர் என்ற பெருமையினால் எப்பொழுதும் இறும்பூது எய்தியிருப்பர் என்பது தோன்ற ‘சதா வியன்கொள் தம்பியர்’ என்றார்),

புங்கவர் – வானவர், தேவர் (’பொன்னாடு உறைந்த புங்கவர்’ எனக்கூட்டிக்கொள்க)

கெடாது – அவர்கள் துன்பம் அடையாது,

கொன்றை அணிந்தோனார் – சிவபெருமான் (சிவனுக்கு தாரும் கண்ணியும் கொன்றை பூவே. தார் – மார்பில் அணிவது, கண்ணி – தலையில் அணிவது),

தன் தண் திண் திரளும் சேய் – முருகன். குளுமையும், வலிமையும் நிறைந்தவன். சேர்ந்தவர்க்கு குளுமையும், பகைவர்க்கு தின்மையும் உடையவன் எனக்கொள்க. கொன்றை அணிந்த சிவபிரான் தன் சேய் எனக் கூட்டுக,

எந்தன் சொந்தம் இனும் தீது ஏது – அம்முருகன் எம்பக்கம் இருத்தலால் இனி எமக்கு தீமை ஏது? (இனி தீமை இல்லை என்பதாம்!), என்று

அங்கங்கு அணி கண்டு* – ஆங்காங்கே நிற்கும் தேவ சேனையின் அணிகளை பார்வையிட்டு…

ஏந்து வன்படை வேல் – வலிமையான படையான வேலை ஏந்தி

வலிசேர்ந்த திண்புயமே – வலிமை மிக்க உறுதியான கரங்கள் (புயம் – புஜம் – கரம்),

ஏய்ந்த கண்டகர் – (வலிய கரங்கள்) வாய்த்த அரக்கர் (கண்டகர் – அரக்கர்),

கால், தொடை, மூஞ்சி, கந்தரமோடு – (அவ்வரக்கர்களின்) கால், தொடை, முகம் (மூஞ்சி), கழுத்து (கந்தரம்) ஆகியவற்றோடு,

எலும்புறும் தலைகளும் – மண்டையோட்டை (எலும்பு) உடைய தலைகளையும்,

*ஓயாது துணிந்திட – முடிவின்றி வெட்டிக்கொண்டிருக்க (அணிகண்டு ஓயாது என்ற இடத்தில் வந்த ஓயாது என்பதை இங்கே சேர்த்துக்கொள்வதே பொருத்தம்!),

அடர்ந்த சண்டைகள் – மிகுதியாக நடக்கும் போர்களால்,

பேய் எனும் குணுங்குகள் – பேய்களாகிய குணுங்குகள் (குணுங்கு – ஒரு வகை பேய்),

நிணங்கள் உண்டு – (அப்போரினால் கிடைக்கும்) கொழுப்பை உண்டு (களித்து),

அரன் மகன் புறம் செயம் – முருகனது போர் வெற்றி உடையது,

எனும் சொல்லே (தொடர்ந்து) – என்ற வாழ்த்தே தொடர்ந்து,

களமிசை எழுமாறே – போர்க்களமீது கேட்குமாறு… (முருகன் அரக்கரோடு போர் செய்தான்!)

விளக்கம்

முருகன் அரக்கர் சேனையோடு போர் செய்கிறான். வலிய கரங்களை உடைய அரக்கரை, உறுதியான வேலை உடைய தேவ சேனை அவரின் கால், கை, கழுத்து, தலை என்று வெட்டி வீழ்த்தி போர் செய்கிறது, அவ்வாறு வெட்டுப்பட்ட அரக்கரின் கொழுப்பை (நிணம்) மிகுதியாக உண்டு போர்க்களத்தில் பேய்கள் கூத்தாடுகின்றன, இந்த மகிழ்ச்சிக்குக் காரணமாகிய முருகனின் போர் வெல்க என்று அவை வாழ்த்துகின்றன, அவ்வோசை போர்க்களமெங்கும் எழுகிறது… 

இப்போரையும், முருகவேளின் தேவ படையின் அணிகளையும் கண்டு பிரமன், திருமால், இந்திரன், முருகனின் தம்பியரான நவவீரர், பொன்னகரில் வசிக்கும் தேவர்கள் முதலானோர் கண்டு வியந்து, சிவபெருமானின் இந்த குமாரன் நம் சொந்தமாக இருப்பதால் இனி நமக்கு தீமை ஏதும் இல்லை என்று உற்சாகம் கொள்கின்றனர்…

(இது போன்ற போர்க்கள காட்சியும், போரில் மடிந்தொரின் கொழுப்பை பேய்கள் தின்று களித்து போரில் வென்றவரை வாழ்த்துவதையும் பரணி இலக்கியத்தில் காணலாம். திருமுருகாற்றுப்படையில் ஒரு பேய்மகள் களத்தில் பிணங்களின் கொழுப்பை உண்டு துணங்க்கைக் கூத்து ஆடுவதை நக்கீரர் வருணிக்கிறார்!)

[இரண்டாம் அடி]

பதவுரை:

துலங்கும் அஞ்சிறை – ஒளிமிக்க அழகிய சிறகு (சிறை),

அலங்கவே – ஆடி அசைய,

விளங்க வந்த ஓர் சிகண்டி – ஒளிமிக்க வந்த ஒரு மயில் (சிகண்டி – மயில், தோகையுடையதால் இப்பெயர்),

துணிந்து இருந்து – (அம்மயில் மீது, அசுரரை அழிப்பது என்ற) ஒரு முடிவுடன் அமர்ந்து,

உயர் கரங்கள் – உயர்ந்த (வலிமை மிக்க) கைகளும்,

மா வரங்கள் மிஞ்சிய – பெரிய வரங்கள் அதிகமாகப் பெற்ற,

இரும்பு கூர் துன்றும் தண்டமொடு – கூரான இரும்பு (நுனி) பொருந்திய (துன்றுதல் – பொருந்துதல் [embed]) தண்டத்துடன் (தண்டம் – பருத்த நீண்ட கோல் ஆயுதம் [mace]),

அம்பு – அம்புகளும்,

ஈர்வாள் – எதையும் பிளக்கக் கூடிய வாளும் (ஈர்தல் – இரண்டாக பிளத்தல்),

கொண்டு – கைக்கொண்டு,

அண்டங்களில் நின்று ஊடே – அண்டங்களின் ஊடே நின்று (முருகனோடு போர் செய்த சூரன் தனது மாய வித்தைகளை கையாண்டான், அவன் பல அண்டங்களிலும் மாயமாய் நின்று போர் செய்தான் – Hyperdimensions!),

சுண்டும் புங்கம் – (அவ்வாறு அண்டங்களின் ஊடே மறைந்து நின்று அவன்) செலுத்தும் அம்பு (புங்கம் – அம்பு),

அழிந்து ஏலாது – (அவ்வம்பு முருகனின் திருமுன்பு) அழிந்து பயனற்று போய் விழ,

அஞ்சும் – அதைக் கண்டு அஞ்சும்,

பண்டசுரன் – பண்டு+அசுரன் – பழைய அசுரனான சூரன் (சூரன் தான் பெற்ற வரத்தால் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தான், முருகனால் அழிக்கப்படும் முன்வரை, எனவே ‘பண்டசுரன்’ என்றார்!),

சூதே – (இனி மேலும் என்ன செய்யலாம் என) அவன் வகுக்கும் சூது,
சூழ்ந்தெழும் பொழுதே – (அவனது மாய சூது தேவ சேனையைச்) சூழ்ந்து அதிகரிக்கும் பொழுது,

கரம் வாங்கி ஒண் திணி வேல் – ஒளிமிக்க, உறுதியான வேலை கரத்தில் வாங்கி,

தூண்டி நின்றவனே – அதை செலுத்தி நின்றவனே (முருகனின் வேல் சாதாரண வேல் அன்று, அது சக்தி வேல், எனவே அதை ‘எய்தான்’ எனச் சொல்லாமல், ‘தூண்டி நின்றான்’ என்றார், பகைவர் மீது செலுத்தப்பட்ட பின் அவரை அழித்து மீண்டும் முருகன் கைக்கே திரும்பி வரும் சிறப்பான வேல் அது, சாதாரண எறிகோல் அன்று! ‘தூண்டி’ என்ற சொற்பிரயோகம் சிந்திக்க வைப்பது! Stimulate)

கிளையோங்க நின்றுள மா – (தன் ஆயுதமும் மாயச்சூதும் பலிக்காததைக் கண்ட சூரன் கடல் நடுவில் மாமரமாக மாறி நின்றான், அதையே இங்கே சுட்டுகிறார்) பல கிளைகள் ஓங்கி வளர நின்ற மாமரத்தை (மாமரமாய் நின்ற சூரனை),

துவந்துவம் பட – துவம் – இரண்டு (வடமொழி), துவந்துவம் – இடண்டான தன்மை (முதல் ‘துவம்’ இரண்டு, இரண்டாவது ‘துவம்’ தன்மை) – அம்மாமரம் இரண்டு கூறாக ஆகும் படி,

வகிர்ந்து வென்று – அதனை வகிர்ந்து (வேலால் பிளந்து, சூரனை) வென்று,

அதி பலம் பொருந்திய நிரஞ்சனா – (வஞ்சம் மிக்க சூரனையும் அரக்கர் சேனையையும் அழித்த) மிகுந்த பலம் பொருந்திய தூயவனே, முருகனே (நிரஞ்சனம் – தூய்மை, அஞ்சனம் – மை, கருமை, அழுக்கு, நிர்+அஞ்சனம் – அப்பழுக்கற்ற தூய்மை! தூயவனாதலால் முருகனை நிரஞ்சனன் என்றார்),

சுகம் கொளும் தவர் – (உன்னைத் துதிப்பதனால்) இன்பம் (சுகம்) கொள்கின்ற தவசிகள் (தவர்),

வணங்கும் இங்கிதம் உகந்த – (தவசிகள்) வணங்குகின்ற நுணுக்கமான குறிப்பை விரும்பும் (இங்கே ‘இங்கிதம்’ என்ற சொல்பயன்பாடு மிகவும் கூர்ந்து நோக்கத்தக்கது, ‘சுகம்கொளும்தவர்’ என்று முன்பே சொன்னதால், அத்தகைய தவசிகள் முருகனை எதற்காக வணங்க வேண்டும்? அவர் வணங்குவதில் நுட்பமான குறிப்பு உள்ளது, இதனையே ‘இங்கிதம்’ என்றார்!),

சுந்தர – அழகியவனே (முருகு என்பதற்கு அழகு என்ற பொருளும் உண்டு, முருகன் அழகன், சுந்தரன்!),

அலங்க்ருதா – துன்பத்தை நீக்குபவனே / திருப்தி அளிப்பவனே (அலம் – துன்பம், திருப்தி என்ற இரண்டு பொருளிலும் வரும். ‘க்ருதா’ செய்பவன். இருவகையிலும் பொருள் கொள்ளலாம்!)

[அரிபிரமருமேயோ – இதனை அடுத்த அடியுடன் சேர்த்துக்கொள்க!]

விளக்கம்:

முதலடியில் காட்டிய முருகனின் போர் காட்சியே இதிலும் தொடர்கிறது.

சூரன் பழைய அசுரன், தன் பெரிய வரங்களால் நெடுநாளைய வாழ்வும், பல பலம் வாய்ந்த ஆயுதங்களும், மாய தந்திரங்களும் பெற்றவன், அழகிய சிறகுகளை உடைய ஒளிமிக்க மயிலின் மீது உறுதியுடன் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானின் முன் தனது ஆயுதங்களும் தந்திரங்களும் செயலற்று தோற்பதைக் கண்டு அஞ்சி அவன் (கடல் நடுவில்) பெரிய மாமரமாய் நிற்க, முருகன் தன் வேலை கையில் வாங்கி அதைச் செலுத்த, அது அம்மாமரத்தை இருகூறாகும்படி பிளந்து முருகனுக்கு வெற்றியைத் தருகிறது, அவ்வாறு வெற்றியும், இன்பம் மிக்க தவசிகள் நுட்பமாய் வணங்கும் இங்கிதத்தையும் விரும்பிய, அழகிய, களங்கமற்ற, பக்தர்களுக்கு திருப்தி செய்யக் கூடிய முருகனே… (என்று முருகனை அழைக்கிறார்)…

[மூன்றாமடி]

பதவுரை:

அரிபிரமருமேயோ – அரியும் (திருமாலும்) பிரமரும் (நான்முகனும்) (ஏஓ – என்பதை ‘அவரே’ என்ற பொருள்படும் ஈற்றசையாகவும் கொள்ளலாம், அல்லது, ஏ – ஏனம் (வராகம், பன்றி), ஓ – ஓதிமம் (அன்னப்பறவை) என்ற குறிப்பாகவும் கொள்ளலாம்!), அரியும் பிரமரும் (ஏனமாகவும் அன்னமாகவும்),

அலைந்து சந்ததம் அறிந்திடாது – ’சந்ததம் அலைந்து’ என்று மாற்றிக்கொள்க, பல காலும் தேடி அலைந்து அறிய முடியாதபடி,

எழுந்த செந்தழல் உடம்பினார் – (அரியும் பிரமனும் பலகாலும் தேடியும் அறிய முடியாதபடி) செம்மையான நெருப்பே உடம்பாக எழுந்த (சிவபிரானார்) (இது அடிமுடி காணாத வரலாறு!),

அடங்கி – (அவர் அடிமுடி காணாதபடி எழுந்த அச்சிவனே முருகன் முன்) மண்டியிட்டு,

அங்கமும் இறைஞ்சியே – வேதங்களின் பொருளை உரைக்க வேண்டிநிற்க, (அங்கம் – வேதங்களுக்கு ஆறு உறுப்புகள் உண்டு: ஷிக்‌ஷை, வியாகரணம், சந்தம், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் என்பவை அவை. இங்கே ஆகுபெயராய் ‘அங்கம்’ என்பது ‘வேதம்’ என்ற பொருளில் நின்றது. சினையாகுபெயர்.),

புகழ்ந்த அன்று மெய் மொழிந்தவா – (அவ்வாறு சிவனார் மண்டியிட்டு, இறைஞ்சி,) புகழ்ந்து கேட்ட அன்று (வேதங்களின் சாரமான) உண்மையை (மெய்) மொழிந்தவனே,

அங்கு இங்கு என்பது அறும் தேவா – இறைவன் இங்கு இருக்கிறான் என்று சுட்டிக்காட்ட இயலாத படி எங்கும் இருக்கிறான், எனவே ‘அங்கு’ ‘இங்கு’ என்பது அறும் தேவனே என்றார்,

எங்கும் துன்றி நிறைந்தோனே – (அங்கு இங்கு எனாதபடி) எங்கும் பொருந்தி நிறைபவனே (துன்றுதல் – பொருந்துதல் என்று முன்பே கண்டோம்!),

அண்டும் தொண்டர் வருந்தாமே – தன்னை நாடும் அடியவர் வருத்தம் அடையாமல்,

இன்பம் தந்தருளும் தாளா – (அவருக்கு) இன்பம் தந்து அருளும் கருணை மிக்கவனே (தாளா – தாளாண்மை உடையவன்!),

ஆம்பி தந்திடும் மா மணி ஒலி தரும் பெரிய மணியை, (ஆம்பி – ஒலி),

பூண்ட அந்தளையா – (மணியை) சூடிய அழகிய கழலை உடையவனே (அம்- அழகு, தளை – காலணி, ஆண்களின் காலணி ‘கழல்’, பெண்களின் காலணி ‘சிலம்பு’; அம்+தளை – அந்தளை),

ஆண்டவன் குமரா – ஆண்டவனாகிய குமரனே (குமரன் – சேயோன்),

எனை ஆண்ட செஞ்சரணா – என்னை ஆளுமையுடைய சிவந்த பாதங்களை உடையவனே (சரணம் – பாதம், சிவந்த பாதங்கள் எனவே தாமரைக்கு உவமிக்கப்படும்!),

அலர்ந்த இந்துள அலங்கலும் – மலர்ந்த (புதிய) இந்துள மாலையும் (இந்துளம் – கடம்பு – முருகனின் அடையாளப்பூ; அலங்கல் – கீழே முடிச்சில்லாமல் இருபுறமும் தொங்கும் மாலை அலங்கல் எனப்படும்),

கடி செறிந்த சந்தன சுகந்தமே – அடர்த்தியான வாசனை நிறைந்த சந்தனத்தின் நறுமணத்தையும் (கடி – செறிவு, நறுமணம்; கந்தம் – மணம், சுகந்தம் – நறுமணம்),

அணிந்து – இவற்றை அணிந்து,

குன்றவர் நலம் பொருந்திட வளர்ந்த – மலைவாழ் மக்களான குறவர் மகிழ அவர்களிடத்தில் வளர்ந்த,

பந்தனை எனும் பெணாள் – பந்தனை (வள்ளி) என்னும் பெண்ணாள்,

தனை அணை மணவாளா – (வள்ளியாகிய பெண்ணை) அணைக்கும் (சேர்ந்து) அவளோடு திருமணக்கோலத்தில் இருப்பவனே…

விளக்கம்:

திருமாலும் பிரமனும் (பன்றியாகவும் அன்னமாகவும்) பலகாலும் தேடியும் அறிய இயலாதபடி தோற்றம் முடிவு இல்லாத செந்தழலாக விரிந்த அந்தச் சிவபெருமானும் தன் முன் மண்டியிட்டு வேதங்களின் சாரத்தை உரைக்குமாறு கெஞ்சிக் கேட்க, அவருக்கு அவ்வாறே உரைத்தவனே, ’அங்கு, இங்கு’ என்று சுட்டுதல் அன்றி எங்கும் பொருந்திய பரம்பொருளே, தன்னை அண்டும் தொண்டர்கள் வருத்தம் கொள்ளாமல் அவருக்கு இன்பத்தை அளிப்பவனே, கடல் தந்த பெரிய மணியை தன் அழகிய கழலில் அணிந்தவனே, அன்று மலர்ந்த கடம்ப மாலையும், நறுமணம் மிக்க சந்தனமும் அணிந்தவனே, குறவர் நலம் பெருக அவரிடம் வளர்ந்த வள்ளிபிராட்டியை சேர்ந்து மணக்கோலத்தில் இருப்பவனே…

[நான்காமடி]

பதவுரை:

குலுங்கு இரண்டு முகையும் – அசைந்தாடுகிற இரண்டு முலைகளும் (முலைகளை ‘முகை’ என்றார், உவமவாகுபெயராக!),

களார் இருண்ட கொந்தள ஒழுங்கும் – கள் நிறைந்த கருத்த கூந்தல் ஒழுங்கும் (பூக்களைச் சூடுவதால் கள் (தேன்) நிறைந்த கூந்தலாகியது, ’கள்ளார்’ என்பது ‘களார்’ என நின்றது குறுக்கல் விகாரம்; ஒழுங்கு – பின்னல் முதலாக கட்டப்பட்ட ஒழுக்கம்),

வேல் குரங்கும் அம்பகம் – வேலும் நாணும் கண்கள் (குரங்குதல் – வளைதல், அம்பகம் – கண்; பெண்களின் கண்ணுக்கு வேலும் கயலும் உவமை, அந்த வேலும் நாணிக் குரங்கும்படியான கண்கள்),

அதும் – அதுவும்,

செவாய் – செவ்வாய் (குறுக்கல் விகாரம்), சிவந்த வாய் (இதழ்),

அதும் – அதுவும்,

சமைந்துள மடந்தைமார் – (அழகிய முலையும், கூந்தலும், கண்களும் வாயும்) படைத்துள்ள பெண்கள் (சமைந்துள்ள – அமைந்துள்ள),

கொஞ்சும் புன் தொழிலும் – (அவ்வழிகிய பெண்களை) கொஞ்சும் புன்மையான தொழிலும் (அவர்களோடு உறவாடும் கீழான செயலும்; பேரின்ப வீட்டை நாடாது சிற்றின்ப சேர்க்கையை நாடும் சிறுமையும் என்று குறிப்பு…),

கால் ஓரும் சண்டன் செயலும் – (உயிரைப் பறிக்க) காலத்தை எண்ணிக்கொண்டிருக்கும் எமனது செயலும் (ஓர்தல் – எண்ணுதல்),

சூடே கொண்டு அங்கம் படரும் சீழ் நோய் – சூட்டினால் உடம்பில் பரவும் சீழ் நோயும் (இவை முதலான நோய்கள் மேல் சொன்னவற்றால் வருபவை எனவும் கொள்க!),

அண்டம் தந்தம் விழும் பாழ் நோய் – அண்டம் (முட்டை/எலும்பு?), தந்தம் (பற்கள்) ஆகியவற்றை விழச்செய்யும் பாழான நோயும்,

கூன்செயும் பிணி – உடம்பில் கூனலை செய்யும் நோயும்,

கால் கரம் வீங்கு அழுங்கலும் – கால்கள், கைகள் வீங்குதல், (புண்ணால்) அழுகுதல் போன்றவையும்,

வாய் கூம்பு அணங்குகள் நோய் – வாய் கூம்பி பேச இயலாமல் செய்யும் துன்பமிக்க பல நோய்களும் (அணங்கு – துன்பம்),

துயர் சார்ந்த புன்களுமே – துயர மிக்க புண்களும்,

குயின் கொளும் கடல் – (இப்படிப் பலவகைப்பட்ட நோய்களாகிய) மேகங்கள் சூழ்ந்த கடல் (குயின் – கடல்); கடல் – பிறவிக்கடல்; (நோய்கள் துன்பங்கள் ஆகிய மேகங்கள் சூழ்ந்த பிறவியாகிய கடல் என்க),

வளைந்த இங்கெனை அடைந்திடும் படி இனும் செயேல் – உன் திருவடிகளை வளைந்த (வணங்கிய) என்னை, அந்த (பிறவிக்) கடலை அடைந்திடும்படி இனி மேலும் செய்யாதே (இனியும் எனக்கு பிறவி அளிக்காதே!),

குவிந்து நெஞ்சமுள் அணைந்து – மனம் ஒருமித்து (குவிந்து), நெஞ்சத்தில் உன் அன்பே அணைந்து,

நின்பதம் நினைந்துய்யும்படி  - உன் திருவடிகளையே எண்ணி முத்தி பெறும்படி (பதம் – திருவடி; உய்தல் – முத்தியடைதல்),

மனஞ்செயே – (முத்தியடையும் படி) திருவுளம் கொள்ளு (செய்யே எனப்து செயே என்று நின்றது குறுக்கல் விகாரம்),

திருவருள் முருகோனே – சிறந்த அருள் நிரம்பிய முருகப்பெருமானே!

விளக்கம்:

(தேவர்கள் எல்லாம் வியக்க, பேய்கள் எல்லாம் வாழ்த்த, அரக்கரை அழித்து, வேலை தூண்டி மாமரமாய் நின்ற சூரனை பிளந்து வென்ற, தவசிகளின் இங்கிதம் உகந்த, திருமால் பிரமனும் அறியா செந்தழல் உடம்பினர் அடங்கி இறைஞ்சி புகழ்ந்து கேட்க வேதங்களின் உண்மையை மொழிந்த, எங்கும் பொருந்தி நிறைந்த, அண்டும் தொண்டருக்கு துன்பமின்றி இன்பமே தந்தருளும் தாளா, கடல் தந்த மணியை கழலில் அணிந்து, என்னை ஆளுமையுடைய சிவந்த பாதங்களை உடையவனே, அலர்ந்த கடம்ப மாலையும் நறுமணமிக்க சந்தனமும் அணிந்து, குறவர் நலம் பொருந்த வளர்ந்த வள்ளியை அணையும் மணவாளா…)

அழகிய முலைகளும் கூந்தலும் கண்களும் செவ்வாயும் உடைய பெண்களை கொஞ்சி இருப்பதாகிய கீழான தொழிலைச் செய்தலும், காலம் பார்த்து உயிரை வாங்கும் எமனின் செயலும், சூட்டினால் உடம்பில் பரவும் சீழ் நோயும், எலும்பும் பற்களும் விழும் பாழான நோயும், கூனலும், கால் கை வீங்கி அழுகும் நோயும், வாய் கூம்பி குழறும் நோயும், துன்பமும் தரும் பல நோய்களும் புண்களுமான இந்த மேகங்கள் சூழ்ந்த கடலாகிய பிறவிக்கடலை இனியும் நான் சேராத வண்ணம் செய், என் மனம் உன்பாலே ஒன்றி, நெஞ்சில் உனக்கே அன்பு பெருக, உன் திருவடிகளையே அடைந்து நான் உய்யும்படி திருவுளம்கொள் (அருள்செய்), சிறந்த கருனை நிரம்பிய முருகப்பெருமானே!

-----------------------------------------------------
பாம்பன் சுவாமிகள் முருகனின் திருவருள் பெற்று இப்பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றை நாம் படிக்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். ’அவனருளாலே அவன் தாள் வணங்கி...’ என்றதைப் போல, அவன் அருளால்தான் அடியேனும் இதற்கு உரை செய்வோம் என்ற அரிய காரியத்தில் ஈடுபடலாயிற்று... என் சிறுமதிக்கு எட்டிய அளவிலேயே உரை செய்துள்ளேன், இதனைப் படிப்பவர்கள் பாடலை இன்னும் உணர்ந்து அனுபவித்து படித்து / பாடி அருள்பெற வேண்டும் என்பதே நோக்கம்... குற்றம் குறைகள் இருப்பின் தயங்காது சுட்டிக்காட்டவும்... நன்றி!

2 பாடும் உரைம்: ங்கே காணும்

28 October, 2010

கல்லில் கண்ட கலைவண்ணம்

குடைவரைக் கோயில்கள்

குடைவரைக் கலை உலகின் மிக பழமையான கலையாகும். இக்கலை நம் நாட்டில் மிகவும் பிற்பட்டக் காலத்திலேயே ஏற்பட்டாலும், உலகளவில் இங்கு மட்டும் தான் பெரியஅளவிலான வளர்ச்சிப் பெற்று விளங்கியது. நம் நாட்டில் 1200க்கும் மேற்பட்ட குடைவரைகள் இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 900 பெளத்த சமயத் தொடர்புடையவை. எஞ்சிய 300 சமண மற்றும் இந்து சமயத் தொடர்புடையவை.
 
தென்னிந்தியாவில் இக்கலை மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் வேரூன்றியது. பெளத்த சமயத்தினரால் போற்றப்பட்ட இக்கலை நாளடைவில் இந்து சமயத்தினராலும் வளர்க்கப்பட்டது.
 
 தமிழ்நாட்டில் இக்குடைவரைக் கலை ஏறக்குறைய 800 ஆண்டுகள் கழிந்தப் பின்னரே தோற்றுவிக்கப்பட்டது. சங்கக் காலத்தில் வாழ்ந்த சமணர்கள் தங்களது வாழ்விடங்களாக இயற்கையாக அமைந்த குகைகளைத் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்துக் கொண்டனர். மழைநீர் குகைகளில் விழாதவாறு கூரைகளின் விளிம்புகளில் கால்கள் அமைத்தும், படுக்கைகளைத் தாங்கள் உறங்குவதற்கு ஏற்றவாறு உருவாக்கியும் தமிழகத்தில் இக்கலை உருவாகுவதற்கு முன்னோடிகளாக இருந்தனர்.
 
குடைவரைகள் உருவாக்க அதிக உழைப்பும் பொருளும் தேவைப்பட்டது. கட்டுமான கலையைவிட இது அதிக தொழில்நுட்பம் வாய்ந்ததாக விளங்கியது. பாறையில் சிறு பிளவு ஏற்பட்டாலும் பணியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தமிழகத்தில் உறுதியான பாறைகள் உள்ள மலைகளிலும் குன்றுகளிலும்தான் குடைவரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் குடைவதும் மிக கடினமானதே. மேற்கிந்தியப் பகுதிகளில் மிருதுவான பாறைகளிலேயே குடைவரைகள் அமைக்கப்பட்டன.
 
தமிழகத்தை ஆட்சி செய்தப் பேரரசர்களான பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் அவர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களான முத்தரையர்கள், அதியமான் மரபினர்களுமே குடைவரைக் கலை வளர பெரிதும் பங்களித்தவர்கள். பல்லவப் பேரரசு தோன்றிய பின் (சுமார் கி.பி.600) குடைவரைக் கலை பெரிதும் வளர்ச்சி பெற்றது. இக்கலையைத் தமிழகத்தில் தோற்றிவித்தவர்கள் பல்லவர்களே (முதலாம் மகேந்திரவர்ம பல்லவனே) என்னும் கருத்து நிலவி வந்தாலும், அவர்களின் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் இக்கலை இருந்ததற்குச் சான்றாக பிள்ளையார்பட்டி குடைவரை (இங்குள்ள எழுத்தமைப்புக்கள் மகேந்திரவர்மனுக்கு முந்தைய காலத்தது) உள்ளது. மேலும் பாண்டிய நாட்டில் உள்ள சில குடைவரைகளின் அமைப்புகளிலிருந்து அவை பல்லவர் காலத்திற்கு முந்தையது என அறிய முடிகிறது.
 
தமிழகத்தில் குடைவரைகள் தருமபுரி, ஈரோடு, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. காரணம் இக்கலையைப் போற்றிய அரசர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் இப்பகுதியில் காணப்படவில்லை. மேலும் இப்பகுதியை ஆண்ட சோழர்கள் கற்றளி கோயில்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் குடைவரைக்குக் கொடுக்காததே ஆகும். எனினும் அவர்கள் குடைவரைக் கோயில்களுக்குக் கட்டுமான விரிவாக்கங்களைச் செய்தனர்.
 
பாண்டிய பல்லவர்கள்
 
பல்லவ, பாண்டிய குடைவரைகளுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன. பல்லவ குடைவரைகளில் இறை சிற்பங்கள் அதிகமாக காணப்படுவதில்லை. கருவறைகளில் மூலக் கடவுள்கள் தனியாக மரத்தினாலோ, ஓவியங்களினாலோ அமைக்கப்பட்டனர். ஆனால் பாண்டியர் குடைவரைகளில் தாய் பாறையிலேயே கருவறைகளில் கடவுள் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறை உருவங்களும் மிகுந்து காணப்படும்.
 
தொடக்கக் காலப் பல்லவர் குடைவரைகளில் வழிபாட்டு முறை இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் பாண்டிய குடைவாரைகளில் நாள் தோறும் பூசைகள் நடத்தப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாக அபிஷேக நீர் வெளியேறும் கால்கள் கருவறையில் அமைந்துள்ளன.
 
இரண்டாவது கட்ட பல்லவர் குடைவரைகளில் கருவறையின் பின்புறம் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பமும், பாண்டியர்களின் குடைவரைகளில் விநாயகரின் புடைப்புச் சிற்பமும் தனியாக குடைவரையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும்.
 
தென் தமிழகத்தில் குடைவரைகள் சிலவற்றில் இசைக் குறித்த கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.
 
முத்தரையர்கள்
 
முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்களைப் பற்றிய குறிப்புகள் முதலில் தொண்டை மண்டலத்தில் பல்லவர் கால நடுகற்களில் கிடைக்கின்றன. இவர்களின் குடைவரைக் கோயில்கள் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும் பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்ததால் இவர்களின் குடைவரைகளில் பல்லவர்களின் பாணியைக் காணமுடிகிறது. மலையடிப்பட்டி, திருவெள்ளறை, நார்த்தாமலை (நகரத்தார்மலை), குன்னாண்டார் கோயில், பூவாலைக்குடி போன்றவை  இவர்களது குடைவரைக் கோயில்கள் ஆகும்.
 
நார்த்தாமலை (நகரத்தார்மலை)
 
புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் செல்லும் வழியில் நார்த்தாமலை என்னும் ஊர் உள்ளது. இவ்வூரைக் கல்வெட்டுகள் ‘நகரத்தார் மலை’ என்றும், ’குலோத்துங்க சோழப்பட்டினம்’ என்றும், ’தெலுங்கு குலகாலபுரம்’ என்றும் குறிக்கின்றன. சோழர் காலத்தில் சிறந்த வணிக நகரமாக விளங்கியது.
    நார்த்தாமலை மீது இரண்டு குடைவரைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. விஜயாலய சோழன் கட்டிய கற்றளியும் இம்மலை மீது உள்ளது. குடைவரைகள் இரண்டும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
 
  
சமணக்குடகு
 
முதலில் உள்ள குடைவரைக் கோயில் சமணக்குடகு என்று அழைக்கப்படுகிறது. இது முற்காலத்தில் சமணர்களின் வசிப்பிடமாக இருந்து, பிறகு திருமாலுக்குரிய கோயிலாக மாறியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
 

இது முன்புற மண்டபமும் கருவறையையும் கொண்டது. முன்புற மண்டபத்தில் திருமாலின் 12 உருவங்கள் காணப்படுகின்றது. ஏழு அடி உயரமுள்ள வாயிற்காவலர் சிற்பங்களையும் இக்குடைவரைக் கொண்டு விளங்குகின்றது. யாளி, சிங்கம், யானை போன்ற சிற்பங்களும் இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
 
பழியிலி ஈஸ்வரம்
 
இது சிவபெருமானுக்கு உரிய கோயிலாகும். கருவறையில் சதுர வடிவ ஆவுடையாருடன் இலிங்கம் உள்ளது, இது தாய்ப் பாறையில் அமைக்கப்பட்டது அல்ல. வாயில் காவலர் சிலையும் தனியாகவே உள்ளது.
 
இக்குடைவரையின் முன்பகுதியில் உள்ள இடிந்த மண்டபத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பல்லவர் கல்வெட்டு ”கோவிசையை நிருபதுங்க விக்ரமர்க்கு யாண்டு ஏழாவது விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தான் பழியிலி குடைந்தெடுத்த ஸ்ரீகோயில்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தான் பழியிலி இக்கோயிலை நிருபதுங்க பல்லவன் காலத்தில் குடைந்தமையால் அவன் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
 
 
விஜயாலய சோழன் கற்றளி
 
இங்கு காணப்படும் குடைவரை கோயில்களுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது விஜயாலய சோழன் கற்றளி. பிறகாலத்தில் விஜயாலய சோழன் கட்டியமையால் இது அவனது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் சிவபெருமானுக்கு உரியது ஆகும். 
 
இது மிக அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது. கருவரையில் சிவபெருமானையும், வாயில் புறத் தூணின் பக்கத்திற்கு இருபுறமும் வாயிற்காவலர் சிற்பங்கள் அமைந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக நான்கு தூண்களுக்கு நடுவில் நந்திப்பெருமான் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
 
முதன்மைக் கற்றளியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறுசிறு கோயில்கள் கோபுரங்கள் முழுமையாக முற்றுப் பெறாமலும், கருவரையில் இறை உருவங்கள் பெறமால் உள்ளன.
 
முடிவுரை
 
நம் முன்னோர் எத்தனையோ நுண்கலைகளில் சிறந்து விளக்கினர் என்பதை நாம் அறிவோம், இன்றைய தொழில்நுட்பங்களும் கண்டு வியக்கும் வண்ணம் பல நூற்றாண்டுகட்கு முன்னரே அமைந்த இத்தகைய குடைவரைகள் நம் கண்களுக்கும் கருத்துக்கும் இன்றும் விருந்தளித்து வருகின்றன. இவற்றை முறையாக பேணிக்காப்பதும், இவற்றின் பெருமையையும் மதிப்பையும் உலகறியச் செய்வதும் நம் கடமையாகும்.



பின்குறிப்பு:


அண்மையில் இந்த நகரத்தார் மலையைச் சுற்றிப் பார்த்து ஆசைத்தீர புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்த என் தோழி, தமிழனின் இந்த பெருமையையும் நான் என் வலையில் பகிர வேண்டும் எனக் கேட்டதோடு அல்லாமல் இந்தக் கட்டுரையையும் புகைப்படங்களையும் அளித்தாள். அவளுக்கு என் நன்றிகளை இங்ஙனம் தெரிவித்துக் கொள்கிறேன். 
நன்றி செல்வி. பெ. தாமரை* :-)

*புகைப்படங்கள் மற்றும் இக்கட்டுரையின் காப்புரிமையும் அவளுக்கே உரியவை.

22 August, 2010

இயற்பியல் இலக்கணம் - இது எப்படி இருக்கு!

ஆர்வமும் கோளாறும் சேர்ந்தால் என்ன ஆகும்? விடை கீழே... தமிழுணர்வும், இயற்பியல் அறிவும் சேர்ந்ததன் விளைவு...

பாவகைகளைக் கற்று அவற்றில் பாடல் இயற்றிப் பார்ப்பது என் ஆர்வங்களில் ஒன்று, அவ்வழியில் பண்டைத் தமிழர் அறிவுப்புலங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்திய “நூற்பா” என்னும் பா வகையில் யாத்துப் பார்க்க ஆவல் வந்தது, அதற்கான சரியான பாடுபொருள் இலக்கணமே, ஆனால் தமிழிலக்கணம் பாடும் தகுதி எனக்கில்லை என்பதினால் இயற்பியல் இலக்கணம் பாடியுள்ளேன்!

அறிவுப்புலங்களை இம்மாதிரி நூற்பாக்களாகச் செய்து வைப்பதால் அவற்றை மனப்பாடம் செய்வதும், தக்க சமயத்தில் இடத்தில் அவ்வறிவைப் பயன்படுத்துவதும் எளிதாகும், (மனப்பாடம் செய்வது ஆழ்மனதில் அப்பொருளைக் கொண்டு சேர்க்கும் என்பது என் கருத்து - மேலும் இங்கே நான் குறிப்பிடும் மனப்பாட முறையும் இன்று நம் பள்ளிகளில் கையாளப்படும் மனப்பாட முறையும் முற்றிலும் வேறானவை ஆகும்!)

மேல் குறிப்பிட்ட காரணங்களால் இயற்பியல் இலக்கணம் பயந்தரும் என்று நான் எண்ணுகிறேன், அது மெய்யா அல்லது மேலை நாட்டார் முறைகளைப் பெரிதும் பயன்படுத்தும் இற்றை நாளில் இதெல்லாம் வெட்டிவேலையா என்பதை நீங்கள்தான் கருத்துரைக்க வேண்டும் (எதிரொலிகளின் அடிப்படையில் என் முயற்சியை நான் தொடர்ந்து முடிப்பதோ அல்லது கைவிடுவதோ நிகழும் - என்னை அறிந்தவர்கள் அருள்கூர்ந்து “நன்று” என பொத்தாம் பொதுவாக கருத்து இடாமல், முடிந்தவரை அலசி ஆய்ந்து, கிழித்து தைத்து, ஆக்கப்பூர்வமாய் கருத்திட்டுப் போனால் நலம்!)

இயற்பியல் இலக்கணம்

இறை வணக்கம்

அணுவின் அணுகி இருப்பது எதுவோ
அண்டத்தின் அகண்டு நிலைப்பதும் அதுவே
இயற்கை எனினும் இறைவன் எனினும்
இயக்குவ தொன்றே இருப்பமதை வாழ்த்தியே!           0.1

அவையடக்கம்

அண்டத்தின் அகத்தே மண்டலமோர் தூசி
மண்டலத்தின் மடியில் கதிரோர் தூசி
கதிரொடு ஒட்டிய உலகோர் தூசி
உலகினில் உழலும் உயிர்கள் தூசி
உலகினில் உழலும் உயிர்தூசி ஒன்று
உணரா முதலை உரைசெய் வதுவோ!                0.2
______________________________________________________

இயல் ஒன்று - இயக்கவியல் (Mechanics)

இறைவாழ்த்து 

இயங்குவ தியக்கினை இருப்ப திருத்தினை
மயங்கும் மதிக்கு மறையாய் நின்றனை
இயக்கவியல் அறைகுவன் இளையன்
பயக்கும் பயனெலாம் நீயென போற்றியே!          1.1
___________________________________________________

நூட்டன் விதிகள் 

நிற்கும் இயங்கும் பொருட்களின் இயல்பை
கற்கும் படிமூன்று கருகோள் கொண்டு
நூட்டன் என்பான் நுதலிய விதிகளை
காட்டுதும் ஈண்டு ஐயற அறிகவே,                         1.2

முதலே,
நிற்பவை நகரா நகர்வன நில்லா
உற்றோர் புறவிசை உறழ்த்தல் இன்றேல்.        1.3

(இயக்கம் இன்றி இருப்பவையும், இயக்கத்தொடு இருப்பவையும் வெளியிலிருந்து ஒரு புறவிசை [External Force] செயல்பட்டால் அன்றி தத்தமது இயக்கதிலிருந்து மாறுபடாது - அஃதாவது, ஒரு பொருளால் தானாகவே தனது இயக்கத்தை மாற்றிக் கொள்ள இயலாது; இத்தன்மை சடத்துவம் எனப்படும், அதனை கீழே நூற்பா 1.6-ல் காண்க)

இரண்டே,
உற்று உறழ்த்தும் புறவிசை அளவொடு
பற்றது கொள்ளும் பொருளுறும் முடுகே.         1.4

(முதல் விதியில் கூறியவாறு, ஒரு பொருள் புறவிசை ஒன்றினால் தனது இயக்கத்தில் மாற்றம் கொள்கையில், அம்மாற்றமானது அப்புறவிசையின் அளவை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் - Acceleration = Force / Mass - நூற்பா 1.7 காண்க; உறழ்த்துதல் - நிலை மாற்றுதல், முடுகு - Acceleration)

மூன்றே,
எல்லா விசைக்கும் எதிர்விசை எழுமே
சொல்லிய அவ்விரண் டும்அள வொக்குமே.    1.5

(இது நாம் அனைவரும் நன்கறிந்த, ஆனால் முறையாக புரிந்து கொள்ளாத, ஒரு விதிதான்! நூற்பா 1.8 காண்க)

சடத்துவம் (Inertia)

இயக்கத்தின் விலகாமை இருப்பவைக்கு இயல்பே.    1.6

(தானாக தன் இயக்கத்திலிருந்து மாறாமல் இருக்கும் தன்மை அனைத்து பொருள்களுக்கும் இயல்பாகும் - இதுவே சடத்துவம் - இது முதல் விதியின் பயனாகும்)

F = m.a 

முடுகொடு நிறையின் முறைபெருக் கத்தை
படுவிசை அதனின் பலமென்ப புலவர்.                          1.7

(முடுகு - விசையால் உந்தப்படும் பொருளின் திசைவேகம் மாறும் அளவு (Acceleration); நிறை - பொருளின் திணிவு (Mass); இங்கே முறை பெருக்கம் எனச் சொல்லியது விசையும் முடுகும் திசையன்கள் ஆனால் நிறை திசையிலி என்பதைக் குறிக்க; முறை பெருக்கம் - திசையனுகுரிய பெருக்கம்)

விசையும் எதிர்வும் வினைபுரிந் திடுமே
அசையும் அசைக்கும் அவற்றில் முறையே.               1.8

(இது இரண்டாம் விதிக்கு புறனடை; விசைக்கு எதிர்விசை எழும் என்று சொல்லப்பட்டது, அவ்வாறு எழும் எதிர்விசையானது விசைக்கு காரணமான பொருளில் செயல்படும், அதாவது, விசையும் எதிர்விசையும் செயல்படும் பொருட்கள் வேறுவேறு ஆகும் - இதுவே ”அசையும்” ”அசைக்கும்” எனக் குறிக்கப்பட்டது; எடுத்துக்காட்டாய், மட்டையால் பந்தை அடிக்கையில் பந்தில் (அசையும் பொருள்) விசையும், மட்டையில் (அசைக்கும் பொருள்) எதிர்விசையும் செயல்படும்)

விசைஎன் பதனை விளக்கும் காலை
திசையுடன் அளபு சிவணிய துவ்வே.                             1.9

(விசை என்பதன் இயல்பைச் சொல்லின் அது திசையும் அளபும் பெற்ற திசையன் ஆகும்; சிவணுதல் - சேர்தல்)

விரைவும் முடுகும் விசையியல் பினவே.                   1.10

(திசைவேகமும்[விரைவு], முடுகும் கூட விசையைப் போலவே திசையன்கள் ஆகும்)

பொருள் என்பதன் பொருள் கூறிடின்
உருவத் திண்மையும் நிறையும் பெறுவதே.               1.11

(பொருள் [Particle/Body] என்பதன் இயல்பைச் சொல்கையில் அது உருவத்தின்மையும் [Solid] நிறையும் [Mass] பெற்று இருப்பது)
______________________________________________


இப்பொழுது இத்தோடு முடித்துக் கொள்கிறேன், இன்னும் ஒளியியல், வானியல் ஆகியவற்றிலும் சில நூற்பாக்கள் இயற்றியுள்ளேன், அவற்றை பின்னர் - படிப்பவர்களின் பின்னூட்டத்தினைப் பொறுத்து - தருகிறேன்.

இதைப் படிப்பதில் நேரம் செலவிட்டமைக்கு மிக்க நன்றி... மறக்காமல் கருத்திட்டுச் செல்லவும்...