அறிமுகம் – வண்ணம்
வண்ணம் என்பது தமிழ் யாப்பு வகைகளில் ஒன்று. (வர்ணம் என்ற கருநாடக இசை சொல்லுடன் குழப்பிக்கொள்ளாதீர்கள். தமிழ் இலக்கியத்திலேயும் ‘வண்ணம்’ என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன.)
வண்ணப் பாடல்கள் நான்கு அடிகள் கொண்டிருக்கும்.
நான்கு அடிகளும் ஒரே அளவாய், இறுதியில் ஒரு தனிச்சொல் பெற்று வரும் (இந்தத் தனிச்சொல் ‘தொங்கல்’ எனப்படும்).
அடிகள் நான்கும் ஒரே எழுத்து அமைப்பைக் கொண்டிருக்கும். குறில், நெடில் ஆகிய உயிரும், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மெய்யும் ஒவ்வொரு அடியிலும் ஒரே வரிசையில் அமைந்திருக்க வேண்டும், அதுவே வண்ணம் எனப்படும்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் அனைத்துமே இவ்வகை வண்ணப்பாடல்கள்தான்.
’முத்தைத்தருப் பத்தித்திருநகை அத்திக்கிறைச் சத்திச்சரவண…’ எனவரும் முதல் அடிக்கு ஏற்பவே, அதே அமைப்பில் குறிலும் நெடிலும், வல்லினமும் மெல்லினமும் பெற்று அடுத்தடுத்த அடிகளும் வருவதைக் காண்க.
வண்ணப்பாடல்களின் எழுத்தமைப்பை (சந்தக்குறிப்பு) ‘த/ன’ ‘தா/னா’ ‘த்’ ‘ந்’ ‘ய்’ ஆகியவற்றால் குறிக்கப்படும். ‘த/ன’ குறிலின் இடத்தையும், ‘தா/னா’ நெடில், ‘த்’ வல்லொற்று, ‘ந்’ மெல்லொற்று மற்றும் ‘ய்’ இடையொற்றின் இடத்தையும் முறையே குறிக்கும்.
இதன்படி, மேற்குறிப்பிட்ட திருப்புகழ் பாடலின் சந்தக்குறிப்பு கீழ்வருமாறு தரப்படும்:
’தத்தத்தனத் தத்தத்தனதன தத்தத்தனத் தத்தத்தனதன…’
(த என்பது குறிலை மட்டுமே குறிக்கும், அது வல்லினம், மெல்லினம், இடையினம் என்று எதுவாகவும் இருக்கலாம், ஆனால் ‘த்’ வரும் இடத்தில் வல்லின மெய் மட்டுமே வரவேண்டும். இது போல மற்றவற்றிற்கும்!)
பாடலின் நான்கு அடிகளும் ஒரே எதுகையில் (இரண்டாம் எழுத்து ஒன்றாதல்) அமையும். ஒரே அடியின் சீர்களுக்கிடையில் மோனை (முதல் எழுத்து ஒன்றாதல்) அமையும் (பொதுவாக நீண்ட அடிகளை உடைய பாடல் அடிகளைச் சிறுசிறு ‘துண்டு’களாக வகுத்துக்கொள்வர், அப்படி வகுக்கப்படும் ஒவ்வொரு துண்டிலும் ஒரே மோனை அமையும், இப்படி மோனை அமைந்த அளவொத்த துண்டுகள் ‘பிணை’ என அழைக்கப்படும்.)
இனி நாம் பாம்பன் சுவாமிகளின் வண்ணங்களைப் பார்ப்போம்.
பாம்பன்
ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள்
அருளிய
பஞ்சாமிருத வண்ணம்
1. பால்
சந்தம்
தனந்த தந்தன தனந்தனா தனந்த தந்தன தனந்தனா
.....தனந்த தந்தன தனந்தனா தனந்த தந்தன தனந்தனா
.....தந்தந் தந்தன தந்தானா தந்தந் தந்தன தந்தானா
.....தந்தந் தந்தன தந்தானா தந்தந் தந்தன தந்தானா
.....தாந்த தந்தனனா தன தாந்த தந்தனனா
.....தாந்த தந்தனனா தன தாந்த தந்தனனா
.....தனந்த தந்தன தனந்த தந்தன தனந்த தந்தன தனந்தனா
.....தனந்த தந்தன தனந்த தந்தன தனந்த தந்தன தனந்தனா – தனதனதனதானா…
பாடல்
.....வியன்கொ டம்பியர் களும்பொனா டுறைந்த புங்கவர் களுங்கெடா
.....தென்றுங் கொன்றைய ணிந்தோனார் தந்தண் டிண்றிர ளுஞ்சேயா
.....மென்றன் சொந்தமி னுந்தீதே தென்றங் கங்கணி கண்டோயா
.....தேந்து வன்படைவேல் வலிசேர்ந்த திண்புயமே
.....யேய்ந்த கண்டர்கா றொடை மூஞ்சி கந்தரமோ
.....டெலும்பு றுந்தலை களுந்து ணிந்திட வடர்ந்த சண்டைக டொடர்ந்துபே
.....யெனுங்கு ணுங்குக ணிணங்க ளுண்டரன் மகன்பு றஞ்சய மெனுஞ்சொலே - களமிசையெழுமாறே [1]
துலங்கு மஞ்சிறை யலங்கவே விளங்க வந்தவொர் சிகண்டியே
.....துணிந்தி ருந்துயர் கரங்கண்மா வரங்கண் மிஞ்சிய விரும்புகூர்
.....துன்றுந் தண்டமொ டம்பீர்வாள் கொண்டண் டங்களி னின்றூடே
.....சுண்டும் புங்கம ழிந்தேலா தஞ்சும் பண்டசு ரன்சூதே
.....சூழ்ந்தெ ழும்பொழுதே கரம்வாங்கி யொண்டிணிவே
.....றூண்டி நின்றவனே கிளை யோங்க நின்றுளமா
.....துவந்து வம்பட வகிர்ந்து வென்றதி பலம்பொ ருந்திய நிரஞ்சனா
.....சுகங்கொ ளுந்தவர் வணங்கு மிங்கித முகந்த சுந்தர வல்ங்க்ருதா - அரிபிரமருமேயோ [2]
அலைந்து சந்தத மறிந்திடா தெழுந்த செந்தழ லுடம்பினா
.....ரடங்கி யங்கமு மிறைஞ்சியே புகழ்ந்த வன்றுமெய் மொழிந்தவா
.....அங்கிங் கென்பத றுந்தேவா யெங்குந் துன்றிநி றைந்தோனே
.....யண்டுந் தொண்டர்வ ருந்தாமே யின்பந் தந்தரு ளுந்தாளா
.....ஆம்பி தந்திடுமா மணி பூண்ட வந்தளையா
.....வாண்ட வன்குமரா வெனை யாண்ட செஞ்சரணா
.....அலர்ந்த விந்துள வலங்க லுங்கடி செறிந்த சந்தன சுகந்தமே
.....யணிந்து குன்றவர் நலம்பொ ருந்திட வளர்ந்த பந்தனை யெனும் பெணாள் - தனையணை மணவாளா [3]
குலுங்கி ரண்டுமு கையுங்களா ரிருண்ட கொந்தள வொழுங்கும்வேல்
.....குரங்கு மம்பக மதுஞ்செவா யதுஞ்ச மைந்துள மடந்தைமார்
.....கொஞ்சும் புன்றொழி லுங்காலோ ருஞ்சண் டன்செய லுஞ்சூடே
.....கொண்டங் கம்பட ருஞ்சீழ்நோ யண்டந் தந்தம்வி ழும்பாழ்நோய்
.....கூன்செ யும்பிணிகால் கரம் வீங்க ழுங்கலும்வாய்
.....கூம்ப ணங்குகணோய் துயர் சார்ந்த புன்கணுமே
.....குயின்கொ ளுங்கடல் வளைந்த விங்கெனை யடைந்தி டும்படி யினுஞ்செயேல்
.....குவிந்து நெஞ்சமு ளணைந்து நின்பத நினைந்து யும்படி மனஞ்செயே - திருவருண் முருகோனே. [4]
(எண்கள் அடி எண்கள்)
[முதலடி]
பதவுரை
விரிஞ்சன் – பிரம்மா, இலங்கு நன் கலை விரிஞ்சன் – பொலியும் பல நல்ல கலைகளை
(கல்வி) உடைய பிரம்மா (சரசுவதியின் கணவனாகையால் இவ்வாறு சொன்னார்),
அனந்தன் – விஷ்ணு (பாம்பணையில் துயில்பவன், அனந்தன் – ஆதிசேஷன்),
சதமகன் – இந்திரன் (நூறு வேள்விகளைச் செய்தவன், சதம் – நூறு),
தம்பியர் – முருகப்பெருமானின் தம்பியர்களான வீரபாகுத்தேவர் முதலிய நவவீரர்கள்
(தேவசேனாபதியின் தம்பியர் என்ற பெருமையினால் எப்பொழுதும் இறும்பூது எய்தியிருப்பர்
என்பது தோன்ற ‘சதா வியன்கொள் தம்பியர்’ என்றார்),
புங்கவர் – வானவர், தேவர் (’பொன்னாடு உறைந்த புங்கவர்’ எனக்கூட்டிக்கொள்க)
கெடாது – அவர்கள் துன்பம் அடையாது,
கொன்றை அணிந்தோனார் – சிவபெருமான் (சிவனுக்கு தாரும் கண்ணியும் கொன்றை பூவே.
தார் – மார்பில் அணிவது, கண்ணி – தலையில் அணிவது),
தன் தண் திண் திரளும் சேய் – முருகன். குளுமையும், வலிமையும் நிறைந்தவன். சேர்ந்தவர்க்கு
குளுமையும், பகைவர்க்கு தின்மையும் உடையவன் எனக்கொள்க. கொன்றை அணிந்த சிவபிரான் தன்
சேய் எனக் கூட்டுக,
எந்தன் சொந்தம் இனும் தீது ஏது – அம்முருகன் எம்பக்கம் இருத்தலால் இனி எமக்கு
தீமை ஏது? (இனி தீமை இல்லை என்பதாம்!), என்று
அங்கங்கு அணி கண்டு* – ஆங்காங்கே நிற்கும் தேவ சேனையின் அணிகளை பார்வையிட்டு…
ஏந்து வன்படை வேல் – வலிமையான படையான வேலை ஏந்தி
வலிசேர்ந்த திண்புயமே – வலிமை மிக்க உறுதியான கரங்கள் (புயம் – புஜம் – கரம்),
ஏய்ந்த கண்டகர் – (வலிய கரங்கள்) வாய்த்த அரக்கர் (கண்டகர் – அரக்கர்),
கால், தொடை, மூஞ்சி, கந்தரமோடு – (அவ்வரக்கர்களின்) கால், தொடை, முகம் (மூஞ்சி),
கழுத்து (கந்தரம்) ஆகியவற்றோடு,
எலும்புறும் தலைகளும் – மண்டையோட்டை (எலும்பு) உடைய தலைகளையும்,
*ஓயாது துணிந்திட – முடிவின்றி வெட்டிக்கொண்டிருக்க (அணிகண்டு ஓயாது என்ற இடத்தில்
வந்த ஓயாது என்பதை இங்கே சேர்த்துக்கொள்வதே பொருத்தம்!),
அடர்ந்த சண்டைகள் – மிகுதியாக நடக்கும் போர்களால்,
பேய் எனும் குணுங்குகள் – பேய்களாகிய குணுங்குகள் (குணுங்கு – ஒரு வகை பேய்),
நிணங்கள் உண்டு – (அப்போரினால் கிடைக்கும்) கொழுப்பை உண்டு (களித்து),
அரன் மகன் புறம் செயம் – முருகனது போர் வெற்றி உடையது,
எனும் சொல்லே (தொடர்ந்து) – என்ற வாழ்த்தே தொடர்ந்து,
களமிசை எழுமாறே – போர்க்களமீது கேட்குமாறு… (முருகன் அரக்கரோடு போர் செய்தான்!)
விளக்கம்
முருகன் அரக்கர் சேனையோடு போர் செய்கிறான். வலிய கரங்களை உடைய அரக்கரை, உறுதியான
வேலை உடைய தேவ சேனை அவரின் கால், கை, கழுத்து, தலை என்று வெட்டி வீழ்த்தி போர் செய்கிறது,
அவ்வாறு வெட்டுப்பட்ட அரக்கரின் கொழுப்பை (நிணம்) மிகுதியாக உண்டு போர்க்களத்தில் பேய்கள்
கூத்தாடுகின்றன, இந்த மகிழ்ச்சிக்குக் காரணமாகிய முருகனின் போர் வெல்க என்று அவை வாழ்த்துகின்றன,
அவ்வோசை போர்க்களமெங்கும் எழுகிறது…
இப்போரையும், முருகவேளின் தேவ படையின் அணிகளையும்
கண்டு பிரமன், திருமால், இந்திரன், முருகனின் தம்பியரான நவவீரர், பொன்னகரில் வசிக்கும்
தேவர்கள் முதலானோர் கண்டு வியந்து, சிவபெருமானின் இந்த குமாரன் நம் சொந்தமாக இருப்பதால்
இனி நமக்கு தீமை ஏதும் இல்லை என்று உற்சாகம் கொள்கின்றனர்…
(இது போன்ற போர்க்கள காட்சியும், போரில் மடிந்தொரின் கொழுப்பை பேய்கள் தின்று
களித்து போரில் வென்றவரை வாழ்த்துவதையும் பரணி இலக்கியத்தில் காணலாம். திருமுருகாற்றுப்படையில்
ஒரு பேய்மகள் களத்தில் பிணங்களின் கொழுப்பை உண்டு துணங்க்கைக் கூத்து ஆடுவதை நக்கீரர்
வருணிக்கிறார்!)
[இரண்டாம் அடி]
பதவுரை:
துலங்கும் அஞ்சிறை – ஒளிமிக்க அழகிய சிறகு (சிறை),
அலங்கவே – ஆடி அசைய,
விளங்க வந்த ஓர் சிகண்டி – ஒளிமிக்க வந்த ஒரு மயில் (சிகண்டி – மயில், தோகையுடையதால்
இப்பெயர்),
துணிந்து இருந்து – (அம்மயில் மீது, அசுரரை அழிப்பது என்ற) ஒரு முடிவுடன் அமர்ந்து,
உயர் கரங்கள் – உயர்ந்த (வலிமை மிக்க) கைகளும்,
மா வரங்கள் மிஞ்சிய – பெரிய வரங்கள் அதிகமாகப் பெற்ற,
இரும்பு கூர் துன்றும் தண்டமொடு – கூரான இரும்பு (நுனி) பொருந்திய (துன்றுதல்
– பொருந்துதல் [embed]) தண்டத்துடன் (தண்டம் – பருத்த நீண்ட கோல் ஆயுதம் [mace]),
அம்பு – அம்புகளும்,
ஈர்வாள் – எதையும் பிளக்கக் கூடிய வாளும் (ஈர்தல் – இரண்டாக பிளத்தல்),
கொண்டு – கைக்கொண்டு,
அண்டங்களில் நின்று ஊடே – அண்டங்களின் ஊடே நின்று (முருகனோடு போர் செய்த சூரன்
தனது மாய வித்தைகளை கையாண்டான், அவன் பல அண்டங்களிலும் மாயமாய் நின்று போர் செய்தான்
– Hyperdimensions!),
சுண்டும் புங்கம் – (அவ்வாறு அண்டங்களின் ஊடே மறைந்து நின்று அவன்) செலுத்தும்
அம்பு (புங்கம் – அம்பு),
அழிந்து ஏலாது – (அவ்வம்பு முருகனின் திருமுன்பு) அழிந்து பயனற்று போய் விழ,
அஞ்சும் – அதைக் கண்டு அஞ்சும்,
பண்டசுரன் – பண்டு+அசுரன் – பழைய அசுரனான சூரன் (சூரன் தான் பெற்ற வரத்தால்
பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தான், முருகனால் அழிக்கப்படும் முன்வரை, எனவே ‘பண்டசுரன்’ என்றார்!),
சூதே – (இனி மேலும் என்ன செய்யலாம் என) அவன் வகுக்கும் சூது,
சூழ்ந்தெழும் பொழுதே – (அவனது மாய சூது தேவ சேனையைச்) சூழ்ந்து அதிகரிக்கும்
பொழுது,
கரம் வாங்கி ஒண் திணி வேல் – ஒளிமிக்க, உறுதியான வேலை கரத்தில் வாங்கி,
தூண்டி நின்றவனே – அதை செலுத்தி நின்றவனே (முருகனின் வேல் சாதாரண வேல் அன்று,
அது சக்தி வேல், எனவே அதை ‘எய்தான்’ எனச் சொல்லாமல், ‘தூண்டி நின்றான்’ என்றார், பகைவர்
மீது செலுத்தப்பட்ட பின் அவரை அழித்து மீண்டும் முருகன் கைக்கே திரும்பி வரும் சிறப்பான
வேல் அது, சாதாரண எறிகோல் அன்று! ‘தூண்டி’ என்ற சொற்பிரயோகம் சிந்திக்க வைப்பது! Stimulate)
கிளையோங்க நின்றுள மா – (தன் ஆயுதமும் மாயச்சூதும் பலிக்காததைக் கண்ட சூரன்
கடல் நடுவில் மாமரமாக மாறி நின்றான், அதையே இங்கே சுட்டுகிறார்) பல கிளைகள் ஓங்கி வளர
நின்ற மாமரத்தை (மாமரமாய் நின்ற சூரனை),
துவந்துவம் பட – துவம் – இரண்டு (வடமொழி), துவந்துவம் – இடண்டான தன்மை (முதல்
‘துவம்’ இரண்டு, இரண்டாவது ‘துவம்’ தன்மை) – அம்மாமரம் இரண்டு கூறாக ஆகும் படி,
வகிர்ந்து வென்று – அதனை வகிர்ந்து (வேலால் பிளந்து, சூரனை) வென்று,
அதி பலம் பொருந்திய நிரஞ்சனா – (வஞ்சம் மிக்க சூரனையும் அரக்கர் சேனையையும்
அழித்த) மிகுந்த பலம் பொருந்திய தூயவனே, முருகனே (நிரஞ்சனம் – தூய்மை, அஞ்சனம் – மை,
கருமை, அழுக்கு, நிர்+அஞ்சனம் – அப்பழுக்கற்ற தூய்மை! தூயவனாதலால் முருகனை நிரஞ்சனன்
என்றார்),
சுகம் கொளும் தவர் – (உன்னைத் துதிப்பதனால்) இன்பம் (சுகம்) கொள்கின்ற தவசிகள்
(தவர்),
வணங்கும் இங்கிதம் உகந்த – (தவசிகள்) வணங்குகின்ற நுணுக்கமான குறிப்பை விரும்பும்
(இங்கே ‘இங்கிதம்’ என்ற சொல்பயன்பாடு மிகவும் கூர்ந்து நோக்கத்தக்கது, ‘சுகம்கொளும்தவர்’
என்று முன்பே சொன்னதால், அத்தகைய தவசிகள் முருகனை எதற்காக வணங்க வேண்டும்? அவர் வணங்குவதில்
நுட்பமான குறிப்பு உள்ளது, இதனையே ‘இங்கிதம்’ என்றார்!),
சுந்தர – அழகியவனே (முருகு என்பதற்கு அழகு என்ற பொருளும் உண்டு, முருகன் அழகன்,
சுந்தரன்!),
அலங்க்ருதா – துன்பத்தை நீக்குபவனே / திருப்தி அளிப்பவனே (அலம் – துன்பம், திருப்தி
என்ற இரண்டு பொருளிலும் வரும். ‘க்ருதா’ செய்பவன். இருவகையிலும் பொருள் கொள்ளலாம்!)
[அரிபிரமருமேயோ – இதனை அடுத்த அடியுடன் சேர்த்துக்கொள்க!]
விளக்கம்:
முதலடியில் காட்டிய முருகனின் போர் காட்சியே இதிலும் தொடர்கிறது.
சூரன் பழைய அசுரன், தன் பெரிய வரங்களால் நெடுநாளைய வாழ்வும், பல பலம் வாய்ந்த
ஆயுதங்களும், மாய தந்திரங்களும் பெற்றவன், அழகிய சிறகுகளை உடைய ஒளிமிக்க மயிலின் மீது
உறுதியுடன் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானின் முன் தனது ஆயுதங்களும் தந்திரங்களும்
செயலற்று தோற்பதைக் கண்டு அஞ்சி அவன் (கடல் நடுவில்) பெரிய மாமரமாய் நிற்க, முருகன்
தன் வேலை கையில் வாங்கி அதைச் செலுத்த, அது அம்மாமரத்தை இருகூறாகும்படி பிளந்து முருகனுக்கு
வெற்றியைத் தருகிறது, அவ்வாறு வெற்றியும், இன்பம் மிக்க தவசிகள் நுட்பமாய் வணங்கும்
இங்கிதத்தையும் விரும்பிய, அழகிய, களங்கமற்ற, பக்தர்களுக்கு திருப்தி செய்யக் கூடிய
முருகனே… (என்று முருகனை அழைக்கிறார்)…
[மூன்றாமடி]
பதவுரை:
அரிபிரமருமேயோ – அரியும் (திருமாலும்) பிரமரும் (நான்முகனும்) (ஏஓ – என்பதை
‘அவரே’ என்ற பொருள்படும் ஈற்றசையாகவும் கொள்ளலாம், அல்லது, ஏ – ஏனம் (வராகம், பன்றி),
ஓ – ஓதிமம் (அன்னப்பறவை) என்ற குறிப்பாகவும் கொள்ளலாம்!), அரியும் பிரமரும் (ஏனமாகவும்
அன்னமாகவும்),
அலைந்து சந்ததம் அறிந்திடாது – ’சந்ததம் அலைந்து’ என்று மாற்றிக்கொள்க, பல காலும்
தேடி அலைந்து அறிய முடியாதபடி,
எழுந்த செந்தழல் உடம்பினார் – (அரியும் பிரமனும் பலகாலும் தேடியும் அறிய முடியாதபடி)
செம்மையான நெருப்பே உடம்பாக எழுந்த (சிவபிரானார்) (இது அடிமுடி காணாத வரலாறு!),
அடங்கி – (அவர் அடிமுடி காணாதபடி எழுந்த அச்சிவனே முருகன் முன்) மண்டியிட்டு,
அங்கமும் இறைஞ்சியே – வேதங்களின் பொருளை உரைக்க வேண்டிநிற்க, (அங்கம் – வேதங்களுக்கு
ஆறு உறுப்புகள் உண்டு: ஷிக்ஷை, வியாகரணம், சந்தம், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் என்பவை
அவை. இங்கே ஆகுபெயராய் ‘அங்கம்’ என்பது ‘வேதம்’ என்ற பொருளில் நின்றது. சினையாகுபெயர்.),
புகழ்ந்த அன்று மெய் மொழிந்தவா – (அவ்வாறு சிவனார் மண்டியிட்டு, இறைஞ்சி,) புகழ்ந்து
கேட்ட அன்று (வேதங்களின் சாரமான) உண்மையை (மெய்) மொழிந்தவனே,
அங்கு இங்கு என்பது அறும் தேவா – இறைவன் இங்கு இருக்கிறான் என்று சுட்டிக்காட்ட
இயலாத படி எங்கும் இருக்கிறான், எனவே ‘அங்கு’ ‘இங்கு’ என்பது அறும் தேவனே என்றார்,
எங்கும் துன்றி நிறைந்தோனே – (அங்கு இங்கு எனாதபடி) எங்கும் பொருந்தி நிறைபவனே
(துன்றுதல் – பொருந்துதல் என்று முன்பே கண்டோம்!),
அண்டும் தொண்டர் வருந்தாமே – தன்னை நாடும் அடியவர் வருத்தம் அடையாமல்,
இன்பம் தந்தருளும் தாளா – (அவருக்கு) இன்பம் தந்து அருளும் கருணை மிக்கவனே
(தாளா – தாளாண்மை உடையவன்!),
ஆம்பி தந்திடும் மா மணி – ஒலி தரும் பெரிய மணியை, (ஆம்பி – ஒலி),
பூண்ட அந்தளையா – (மணியை) சூடிய அழகிய கழலை உடையவனே (அம்- அழகு, தளை – காலணி,
ஆண்களின் காலணி ‘கழல்’, பெண்களின் காலணி ‘சிலம்பு’; அம்+தளை – அந்தளை),
ஆண்டவன் குமரா – ஆண்டவனாகிய குமரனே (குமரன் – சேயோன்),
எனை ஆண்ட செஞ்சரணா – என்னை ஆளுமையுடைய சிவந்த பாதங்களை உடையவனே (சரணம் – பாதம்,
சிவந்த பாதங்கள் எனவே தாமரைக்கு உவமிக்கப்படும்!),
அலர்ந்த இந்துள அலங்கலும் – மலர்ந்த (புதிய) இந்துள மாலையும் (இந்துளம் – கடம்பு
– முருகனின் அடையாளப்பூ; அலங்கல் – கீழே முடிச்சில்லாமல் இருபுறமும் தொங்கும் மாலை
அலங்கல் எனப்படும்),
கடி செறிந்த சந்தன சுகந்தமே – அடர்த்தியான வாசனை நிறைந்த சந்தனத்தின் நறுமணத்தையும்
(கடி – செறிவு, நறுமணம்; கந்தம் – மணம், சுகந்தம் – நறுமணம்),
அணிந்து – இவற்றை அணிந்து,
குன்றவர் நலம் பொருந்திட வளர்ந்த – மலைவாழ் மக்களான குறவர் மகிழ அவர்களிடத்தில்
வளர்ந்த,
பந்தனை எனும் பெணாள் – பந்தனை (வள்ளி) என்னும் பெண்ணாள்,
தனை அணை மணவாளா – (வள்ளியாகிய பெண்ணை) அணைக்கும் (சேர்ந்து) அவளோடு திருமணக்கோலத்தில்
இருப்பவனே…
விளக்கம்:
திருமாலும் பிரமனும் (பன்றியாகவும் அன்னமாகவும்) பலகாலும் தேடியும் அறிய இயலாதபடி
தோற்றம் முடிவு இல்லாத செந்தழலாக விரிந்த அந்தச் சிவபெருமானும் தன் முன் மண்டியிட்டு
வேதங்களின் சாரத்தை உரைக்குமாறு கெஞ்சிக் கேட்க, அவருக்கு அவ்வாறே உரைத்தவனே, ’அங்கு,
இங்கு’ என்று சுட்டுதல் அன்றி எங்கும் பொருந்திய பரம்பொருளே, தன்னை அண்டும் தொண்டர்கள்
வருத்தம் கொள்ளாமல் அவருக்கு இன்பத்தை அளிப்பவனே, கடல் தந்த பெரிய மணியை தன் அழகிய
கழலில் அணிந்தவனே, அன்று மலர்ந்த கடம்ப மாலையும், நறுமணம் மிக்க சந்தனமும் அணிந்தவனே,
குறவர் நலம் பெருக அவரிடம் வளர்ந்த வள்ளிபிராட்டியை சேர்ந்து மணக்கோலத்தில் இருப்பவனே…
[நான்காமடி]
பதவுரை:
குலுங்கு இரண்டு முகையும் – அசைந்தாடுகிற இரண்டு முலைகளும் (முலைகளை ‘முகை’
என்றார், உவமவாகுபெயராக!),
களார் இருண்ட கொந்தள ஒழுங்கும் – கள் நிறைந்த கருத்த கூந்தல் ஒழுங்கும் (பூக்களைச்
சூடுவதால் கள் (தேன்) நிறைந்த கூந்தலாகியது, ’கள்ளார்’ என்பது ‘களார்’ என நின்றது குறுக்கல்
விகாரம்; ஒழுங்கு – பின்னல் முதலாக கட்டப்பட்ட ஒழுக்கம்),
வேல் குரங்கும் அம்பகம் – வேலும் நாணும் கண்கள் (குரங்குதல் – வளைதல், அம்பகம்
– கண்; பெண்களின் கண்ணுக்கு வேலும் கயலும் உவமை, அந்த வேலும் நாணிக் குரங்கும்படியான
கண்கள்),
அதும் – அதுவும்,
செவாய் – செவ்வாய் (குறுக்கல் விகாரம்), சிவந்த வாய் (இதழ்),
அதும் – அதுவும்,
சமைந்துள மடந்தைமார் – (அழகிய முலையும், கூந்தலும், கண்களும் வாயும்) படைத்துள்ள
பெண்கள் (சமைந்துள்ள – அமைந்துள்ள),
கொஞ்சும் புன் தொழிலும் – (அவ்வழிகிய பெண்களை) கொஞ்சும் புன்மையான தொழிலும்
(அவர்களோடு உறவாடும் கீழான செயலும்; பேரின்ப வீட்டை நாடாது சிற்றின்ப சேர்க்கையை நாடும்
சிறுமையும் என்று குறிப்பு…),
கால் ஓரும் சண்டன் செயலும் – (உயிரைப் பறிக்க) காலத்தை எண்ணிக்கொண்டிருக்கும்
எமனது செயலும் (ஓர்தல் – எண்ணுதல்),
சூடே கொண்டு அங்கம் படரும் சீழ் நோய் – சூட்டினால் உடம்பில் பரவும் சீழ் நோயும்
(இவை முதலான நோய்கள் மேல் சொன்னவற்றால் வருபவை எனவும் கொள்க!),
அண்டம் தந்தம் விழும் பாழ் நோய் – அண்டம் (முட்டை/எலும்பு?), தந்தம் (பற்கள்) ஆகியவற்றை
விழச்செய்யும் பாழான நோயும்,
கூன்செயும் பிணி – உடம்பில் கூனலை செய்யும் நோயும்,
கால் கரம் வீங்கு அழுங்கலும் – கால்கள், கைகள் வீங்குதல், (புண்ணால்) அழுகுதல்
போன்றவையும்,
வாய் கூம்பு அணங்குகள் நோய் – வாய் கூம்பி பேச இயலாமல் செய்யும் துன்பமிக்க
பல நோய்களும் (அணங்கு – துன்பம்),
துயர் சார்ந்த புன்களுமே – துயர மிக்க புண்களும்,
குயின் கொளும் கடல் – (இப்படிப் பலவகைப்பட்ட நோய்களாகிய) மேகங்கள் சூழ்ந்த கடல்
(குயின் – கடல்); கடல் – பிறவிக்கடல்; (நோய்கள் துன்பங்கள் ஆகிய மேகங்கள் சூழ்ந்த பிறவியாகிய
கடல் என்க),
வளைந்த இங்கெனை அடைந்திடும் படி இனும் செயேல் – உன் திருவடிகளை வளைந்த (வணங்கிய)
என்னை, அந்த (பிறவிக்) கடலை அடைந்திடும்படி இனி மேலும் செய்யாதே (இனியும் எனக்கு பிறவி
அளிக்காதே!),
குவிந்து நெஞ்சமுள் அணைந்து – மனம் ஒருமித்து (குவிந்து), நெஞ்சத்தில் உன் அன்பே
அணைந்து,
நின்பதம் நினைந்துய்யும்படி - உன் திருவடிகளையே
எண்ணி முத்தி பெறும்படி (பதம் – திருவடி; உய்தல் – முத்தியடைதல்),
மனஞ்செயே – (முத்தியடையும் படி) திருவுளம் கொள்ளு (செய்யே எனப்து செயே என்று
நின்றது குறுக்கல் விகாரம்),
திருவருள் முருகோனே – சிறந்த அருள் நிரம்பிய முருகப்பெருமானே!
விளக்கம்:
(தேவர்கள் எல்லாம் வியக்க, பேய்கள் எல்லாம் வாழ்த்த, அரக்கரை அழித்து, வேலை
தூண்டி மாமரமாய் நின்ற சூரனை பிளந்து வென்ற, தவசிகளின் இங்கிதம் உகந்த, திருமால் பிரமனும்
அறியா செந்தழல் உடம்பினர் அடங்கி இறைஞ்சி புகழ்ந்து கேட்க வேதங்களின் உண்மையை மொழிந்த,
எங்கும் பொருந்தி நிறைந்த, அண்டும் தொண்டருக்கு துன்பமின்றி இன்பமே தந்தருளும் தாளா,
கடல் தந்த மணியை கழலில் அணிந்து, என்னை ஆளுமையுடைய சிவந்த பாதங்களை உடையவனே, அலர்ந்த
கடம்ப மாலையும் நறுமணமிக்க சந்தனமும் அணிந்து, குறவர் நலம் பொருந்த வளர்ந்த வள்ளியை
அணையும் மணவாளா…)
அழகிய முலைகளும் கூந்தலும் கண்களும் செவ்வாயும் உடைய பெண்களை கொஞ்சி இருப்பதாகிய
கீழான தொழிலைச் செய்தலும், காலம் பார்த்து உயிரை வாங்கும் எமனின் செயலும், சூட்டினால்
உடம்பில் பரவும் சீழ் நோயும், எலும்பும் பற்களும் விழும் பாழான நோயும், கூனலும், கால்
கை வீங்கி அழுகும் நோயும், வாய் கூம்பி குழறும் நோயும், துன்பமும் தரும் பல நோய்களும்
புண்களுமான இந்த மேகங்கள் சூழ்ந்த கடலாகிய பிறவிக்கடலை இனியும் நான் சேராத வண்ணம் செய்,
என் மனம் உன்பாலே ஒன்றி, நெஞ்சில் உனக்கே அன்பு பெருக, உன் திருவடிகளையே அடைந்து நான்
உய்யும்படி திருவுளம்கொள் (அருள்செய்), சிறந்த கருனை நிரம்பிய முருகப்பெருமானே!
-----------------------------------------------------
பாம்பன் சுவாமிகள் முருகனின் திருவருள் பெற்று இப்பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றை நாம் படிக்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். ’அவனருளாலே அவன் தாள் வணங்கி...’ என்றதைப் போல, அவன் அருளால்தான் அடியேனும் இதற்கு உரை செய்வோம் என்ற அரிய காரியத்தில் ஈடுபடலாயிற்று... என் சிறுமதிக்கு எட்டிய அளவிலேயே உரை செய்துள்ளேன், இதனைப் படிப்பவர்கள் பாடலை இன்னும் உணர்ந்து அனுபவித்து படித்து / பாடி அருள்பெற வேண்டும் என்பதே நோக்கம்... குற்றம் குறைகள் இருப்பின் தயங்காது சுட்டிக்காட்டவும்... நன்றி!
2வது பாடலும் உரையும்: இங்கே காணவும்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete