குறிப்பு: இந்தக் கவிதை என்னவள் என் காதலுக்கு பதில் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில் தோன்றியது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எழுதியது, தாளில் விழுந்து கெஞ்சாத குறைக்கு தாலில் விழுந்து கெஞ்சியிருக்கிறேன் (அஃதாவது; பாட்டில், தால் - நாக்கு, இங்கே பாட்டை குறித்தது!)இன்று எதையோ தேடுகையில் இது என் கண்களில் பட, நூறு வரிகளுக்கும் மேல் நான் எழுதியிருந்தது என்னையே வியக்க வைத்து இங்கு இடுகையாய் இடம்பெறுகிறது... காப்புரிமைகளைவிட முக்கியமாய் இது காதலுரிமை கட்டுப்பெற்றது, ஆக படிப்பவர்கள் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (”சுட்டு விடாதீர்கள்” என்பதே பொருள், கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்துவிட போகின்றீகள்!) என்னையும் கவிஞனாக்கிய என்னவளுக்கு காணிக்கை!
வாக்களிப்பீர்! வாக்களிப்பீர்!
கன்னி மனதின் காரணங்களே! என்
காதல் கனிந்திட வாக்களிப்பீர்!
வாக்குறுதி பல தந்து
வாக்கு வாங்கும் விளையாட்டல்ல
காதல் என்ற போதும்
களத்தில் இறங்கிவிட்டேன்
களைத்து நான் போகமாட்டேன்!
போட்டியென்று யாருமில்லை!
அன்னபோஸ்டில் வெற்றி யில்லை!
கன்னியவள் கரைய வில்லை, எனக்கோ
காதல் ஓட்டு போடவில்லை!
தேர்தல் இவள் நடத்தவில்லை, என்னை
தேர்ந்தேடுக்க சொல்லுங்கள்,
என் காதல் வாக்குமூலம்தனை
கேட்டுவிட்டு செல்லுங்கள்!
காதலிதன் நெஞ்சமே நீ என்
கனவுதனை அறியாயோ!
காத்திருப்பேன் காத்திருப்பேன், எனக்காய்
கரைந்து வாக்கை இடுவாயோ?
இதயமென்னும் தொகுதியே என்
இனிய ஆட்சி வேண்டாயோ? என்மேல்
இரக்கமின்றி இருக்கின்றாள்,
இவள் சிந்தை மாற செய்வாயோ?
கண்களெனும் மீன்களே, என் பார்வை
கடலில் நீந்தித் திளைத்தீரே!
காதல் தேர்தல் களம் நிற்கின்றேன்
கனிந்து உங்கள் ஓட்டை தாரீரோ!
இதழென்னும் பூவேயுன்
சுவையறியும் இதம் பற்றி
ஐந்தாண்டு திட்டமொன்றும்
அதற்கு மேலும் திட்டம் போட்டேன்,
இறுகி இருந்து கொள்ளாதே,
இவளைப் போல் நீயுமெனை கொல்லாதே!
இன்னும் என்ன நான் கேட்க!
இளகி எனக்கு வாக்கிடுவாய்!
நீங்களெல்லாம் நியாயம் அலசி, வாக்கிட்டு
நான் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க
நாட்கள் பல ஆகுமென்றால்,
நேரடியாய் கேட்டுக் கொள்கிறேன்
என் ஆளுனர் என்னவளிடம்...
உன்னைப் பார்த்தவன்று என்னுள்
பரவித்திரிந்த பட்டாம் பூச்சிகளை நீகேள்,
அன்று முதல் இன்றுவரை வளர்ந்த
காதலின் கதையை அவை சொல்லும்!
பொழுது போகவல்ல, எனக்கு
வாழ்ந்து போக வேண்டும் நீ!
கண் நிறைத்துப் போனவள் அல்ல, என்
கருத்தில் நிறைந்து நின்றவள் நீ!
கொஞ்சம் என் தாயாய்,
கொஞ்சம் என் தோழியாய்,
நிறைய என் காதலாய்
நெஞ்சில், வாழ்வில் நிறைய வேண்டும் நீ!
காதல் எனக்கு இல்லையென்று,
கல்யாணம் வீண் தொல்லையென்று
காத்திருப்பவன் கலக்கமுற, நின்
கருத்துரைத்துப் போனாய் நீ...
பகல் உணர்த்தும் இரவாய்,
இரவை உணர்த்தும் பகலாய்,
குளிர் உணர்த்தும் தணலாய்,
தணலை உணர்த்தும் குளிராய்,
என்னை உணர்த்த நீயென்று
உண்மை உணர்ந்து கொள்வாயோ?
காதல் என்னும் கருவி கொண்டு
உன்னை என்னால் உணர்வாயோ!
கணவனாய் இருந்து உனக்கு
காதலை எவ்வாறு தருவேன் என்று
கணக்கிட்டே நான் பட்டியல் தந்தால்
காதல் தேர்தல் ஆகிவிடும்!
ஆனதுதான் ஆகியது,
அதையும் தான் தருகின்றேன்,
கேட்டுவிட்டே என்னவளே, உன்
காதல் ஓட்டை எனக்கேயிடு!
எதை சொல்லி தொடங்க என்
காதல் வாக்கு உறுதிகளை!
இறுதிவரை என்றே நம்பி
இலட்சம் கோடி ஆசைகள் வைத்தேன்!
காலை தொடங்கி மாலை வரை
நித்தம் நூறு பூக்கள் தரவும்,
சத்தம் மின்றி பின்னால் வந்து
முத்தம் நூறா யிரம் தரவும்
திட்டம் போட்ட சின்ன சில்மிஷங்களின்
சட்டம் போட்டே செய்வேன் ஆட்சி!
உன்னோடு கடல் கரை நடக்க,
கண்ணோடு கையும்கோர்த்து மழை நனைய,
கருத்தின்றி பேசியே காலம் கழிக்க,
காதலிக்கிறேன் உன்னை யென்று
காதில் சொல்ல கற்பனை பல வளர்த்தேன்,
கவிதையாய் வாழ, கவிதையோடு வாழ!
குலோத்துங்க சோழன் குலம் ஆராய,
பல்லவன் படையெடுப்பின் பலம் அலச
பாண்டியன் பற்றி யென்று புத்தகம் பல
பார்த்து வைத்துள்ளேன் உன்னோடு சேர்ந்து படிக்க!
பழந்தமிழர் புகழ் படிக்கும் ஆவலொரு
பக்கமென்றால், காதலி உன்னோடிதை
பகிர்வதில் சுகமெனக்கு, உண்மையிதை
பகிர்ந்துவிட்டேன், பொறுத்தருள்வாள் தமிழென்னை!
எனக்கென்றே நான் எண்ணுவதாய்
எண்ணாதே! உறாவாடும் உயிரேயுன்
இலட்சியங்கள் நானறிவேன், அவையாவும்
ஈடேற இடர்களைந்து உடன் நிற்பேன்!
இயன்ற வரை இயம்பிவிட்டேன்,
இன்னும் இன்னும் இருக்கிறது!
கேட்டவரை, கருத்தில் என்
காதல் உனக்கு புரிந்தால்
எனக்கே உன் வாக்கிடு, எனக்காய்
இதய வாசல்தனை திறந்திடு!
இலட்சம் கோடி பேர் இல்லை,
உன் ஒருத்தி ஓட்டு தான் இங்கு,
வெற்றி தோல்வி என்றில்லை,
போட்டி நிற்க ஆளில்லை!
வாக்களிப்பாய் வாழ்க்கைக்கு
இதயத் தொகுதி தேர்தலில்
ஆட்சி எனது
ஆளுமை உனது!
-விஜய்
பின்குறிப்பு: நடந்து முடிந்த இதயத்தேர்தலில் நான் அமோக வாக்குகள் பெற்று வென்றுவிட்டேன் என்பதை வாசகர்களுக்கு மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் :)
No comments:
Post a Comment