சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தமிழில் எல்லாமே செய்யுள்தான். மழலையர்களுக்கான அரிச்சுவடி முதல் சூரிய மண்டலத்தின் சூக்குமங்கள்வரை எல்லாமே பாடல்களாகவே சொல்லப்பட்டிருக்கின்றன!
இதற்குப் பல காரணங்கள் உள: சுருக்கம், மனத்தில் நிறுத்திக்கொள்வது எளிது, பிழைகள் மலியாது...
குறிப்பாக வெண்பாவின் இலக்கணம் மிகுந்த கட்டுக்கோப்புடையது, எனவேதான் இது போல செய்திகளைப் பட்டியலிடவோ பதியவோ பொதியவோ (enlist, embed, or encrypt) அது மிக உகந்த வடிவமாக இருந்துள்ளது (இருக்கிறது!).
ஒரு வெண்பா பாடலை ஒன்றிரண்டு முறை காதால் கேட்டவுடன் மனத்தில் பதிந்துகொண்டுவிட வேண்டும் என்கிறார் ஔவையார்:
’வெண்பா இருகாலில் கல்லானை...’ -கொன்றை வேந்தன்
இரண்டுமுறை கேட்டும் ஒருவர் மனத்தில் அவ்வெண்பா பதியவில்லை என்றால் அவர் பிறந்ததே வீண் என்று சற்று அழுத்தமாகவே சொல்கிறார் அவர்!
எதுகை, மோனை, கட்டுப்பாடான சீர், தளை, அடி அமைப்புகள் இவற்றின் காரணமாக வெண்பாக்களை மனத்தில் நிறுத்திக்கொள்வது எளிதாகிறது.
திருக்குறளும், பெரும்பான்மையான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் வெண்பாவில்தான் அமைந்துள்ளன. எட்டுத்தொகை நூல்கள் எவை, பத்துப்பாட்டு நூல்கள் எவை முதலிய பட்டியல்களையும் வெண்பாவிலேயே காண்கிறோம். இலக்கணம் முதல் சிற்பம், நாட்டியம், அணி, கட்டடத் தொழில்நுட்பம் போன்றவற்றோடு நளவெண்பா போன்ற காப்பியங்கள்வரை வெண்பாவில் அமைக்கப்பட்டுள்ளன!
காலவோட்டத்தில் ஒன்றிரண்டு இடங்களில் எழுத்தோ சீரோ அழிந்தாலும் பிறழ்ந்தாலும் வெண்பாவின் அமைப்பைக் கொண்டு அவற்றை மீட்டுருவாக்கம் செய்துவிடலாம், அப்படி ஒரு மீட்டுருவாக்கத்தைப் பற்றித்தான் இங்கே உங்களுக்குச் சொல்ல விழைகிறேன்!
திரு. பாலமுருகனும் பிறரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் என்ற பகுதியில் ஏரிக்கரைப் பாறையில் இரண்டு கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர். (ஆவணம் 31, தொல்லியல் கழகம், 2022)
குலோத்துங்க சோழனின் 17வது ஆட்சியாண்டை (பொ.ஆ. 1195) சேர்ந்த அக்கல்வெட்டுகளைப் படிக்கக் கல்வெட்டறிஞர் முனைவர் சு. இராசகோபால் அவர்கள் உதவியுள்ளார். அவற்றுள் இரண்டாவது கல்வெட்டு ஒரு செய்யுளாக இருக்கலாம் என்று எண்ணிய அவர் அதனைச் சோதிக்குமாறு என்னைப் பணித்தார்.
நான் அது வெண்பாதான் என்று உறுதி செய்து, வெண்பாவிற்கு ஏற்ப அக்கல்வெட்டு வாசகத்தை அமைத்துக்கொடுத்தேன். அவ்வாறு அமைக்கும்போது முன்னர் படிக்கப்பட்டிருந்ததை அடியோடு சில இடங்களில் மாற்ற வேண்டியிருந்தது, பாடலையும் ஓரளவு முழுமைப்படுத்தி அமைத்தோம். இருந்தும் சில இடங்களில் பொருள் முழுமையாக அமையவில்லை / புரியவில்லை! ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வேலையாக இருந்தது!
முதல் வாசிப்பு:
1.தொல் நிகழ் நரசிங்கப் புத்-
2.த்தேரி சிலாகரு மரபிற்
3.செய்தமைத்தான் கோ-
4.ல் நெடுவரைமான் பாத தொ
5.மலையன் மலர் மடந்
6.தை கோமான் பழுவையர்க்
7.கோன்
’தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி சிலா கருமரபிற் செய்தமைத்தான் கோல் நெடுவரைமான் பாத தொமலையன் மலர் மடந்தை கோமான் பழுவையர்க் கோன்’
’செய்தமைத்தான்’ என்பதனால் இக்கல்வெட்டு ஒருவர் செய்த திருப்பணியைப் பற்றியது என்பது தெளிவு. ‘பழுவையர்க் கோன்’ என்று அவர் பெயர் ஈற்றில் குறிப்பிடப்படுகிறது (இத்தோடு உள்ள மற்றொரு கல்வெட்டில் இவரின் பெயர் ‘புழுவுடையானான மன்மலையன்’ என்று உள்ளது! ‘பழுவையர்’ என்பது திரிந்து புழுவுடையான் ஆகிவிட்டது!).
ஈற்றில் உள்ள ‘மலர்மடந்தை கோமான் பழுவையர்க் கோன்’ என்பது தெளிவாக வெண்டளையில் அமைந்திருக்கிறது, ‘கோன்’ என்ற ஈற்றசை ‘நாள்’ என்ற வாய்ப்பாட்டில் உள்ளது. இதை வைத்துக்கொண்டு நான் பாடலைப் பின்னாலிருந்து அமைக்க முயன்றேன்:
’கோமான் பழுவையர்க் கோன்’ என்பது ஈற்றடி, மோனையும் தளையும் சரியாக உள்ளன.
இதற்கு முந்தய அடி என்ன? வாசிப்பிலிருந்து அமைத்துப் பார்த்தால்,
’நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்’
-எதுகை அமையவில்லை (நெடு-கோமான்), ‘தொமலையன் - மலர்மடைந்தை’ என்னுமிடத்தில் தளைதட்டுகிறது (கலித்தளை வருகிறது!)
நான் மேற்கொண்டு இவ்வடியைச் சீர்செய்யும் முன் முழுப்பாடலையும் அமைத்துக்கொண்டு சீர்களையும் எதுகை மோனைகளைக் கொஞ்சம் பார்ப்போம் என்று கருதினேன், எனவே,
தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி சிலா
கருமரபிற் செய்தமைத்தான் கோல்
நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்
என்று வைத்துக்கொண்டு தொடங்கினேன். ‘இது வெண்பாதானா? எதேச்சையாக ஈற்றடி மட்டும் அமைந்துவிட்டதோ?’ என்ற ஐயம் எழுந்தது! ஆனால், ‘சிலா’ ‘செய்த’ என்ற மோனைகள் கொஞ்சம் ஒளியூட்டின, எனவே,
தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி
சிலா கருமரபிற் செய்தமைத்தான் கோல்
நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்
என்று மாற்றிக்கொண்டேன், இப்போது இரண்டாமடியும் வெண்பா அமைப்பில் கொஞ்சம் வருகிறது, ஆனால், முதற்சீர் ஓரசையாக இருக்கிறது, எனவே அதனை ‘சீல’ என்று அமைத்தேன். கல்வெட்டுகளில் மெய்களுக்குப் புள்ளி இருக்காது, குறில் நெடில்களுக்கான கொம்புகளும் ஒன்றாகவே இருக்கும். எனவே, ‘சி’ என்பதைச் ‘சீ’ என்றும் படிக்கலாம். இந்நோக்கில் பார்த்தபோது, ‘சிலா’ என்று படிக்கப்பட்டிருந்தது ‘சீலந்’ என்றும் இருக்கலாம் என்று தோன்றியது (கல்வெட்டைப் பார்த்தபோது லகரத்தின் துணைக்கால் நகரமாகவும் இருக்கலாம் என்று அறிந்தேன்!)
‘சீலந் கருமரபிற் செய்தமைத்தான்’ என்றால் வெண்பா அடி நன்றாக அமைகிறது! மேலும், ‘சீலம்’ என்பது ‘சீலந்’ என்று எழுதப் பட்டிருப்பதால், அடுத்துள்ள சொல் தகரத்தில்தான் தொடங்க வேண்டும் என்ற துப்பும் கிடைத்தது, எனவே,
‘சீலந் தருமரபிற் செய்தமைத்தான்’ என்று அமைத்தேன், இந்த வாசிப்பு பொருத்தமானதாகத் தோன்றியது!
‘சிலா கருமரபிற் செய்தமைத்தான்’ என்ற வாசிப்பிற்கு ‘கருங்கல் பணிசெய்த’ என்று பொருள் கொண்டிருந்தனர் (சிலா - கல்; ஏரிக்கரைக்கு கருங்கல்லால் படித்துறை போன்றவை செய்திருக்கலாம் என்று ஊகித்திருந்தனர்!), ஆனால், ‘சீலந் தருமரபிற் செய்தமைத்தான்’ என்றால் ‘புகழ் (சீலம்) மிக்க மரபில் வந்தவன் செய்தான்’ என்ற பொருள் வருகிறது.
இப்போது,
தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி
சீலந் தருமரபிற் செய்தமைத்தான் கோல்
நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்
என்று நிற்கிறது. ’சீலம்’ என்பதோடு எதுகை அமைய 2ம் அடியின் ஈற்றுச்சீர் ‘கோல’ என்று இருக்க வேண்டும், (மெய்களுக்குப் புள்ளி காட்டப்பட்டிருக்காதே) எனவே, ‘கோல்’ என்பதைக் ‘கோல’ என்று மாற்றிக்கொண்டேன், நேரிசை வெண்பாவுக்கான அடையாளங்கள் தெரிந்தன:
தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி
சீலந் தருமரபிற் செய்தமைத்தான் - கோல
நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்
முதலடி முற்றிலும் சேராமல் நிற்கிறது, அதில் கொஞ்சம் மண்டையை உருட்டிவிட்டு, அலுத்துப் போய்க் கவனத்தை 3ம் அடியில் கொஞ்சம் செலுத்தினேன்,
‘நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை’ இதில் ஈற்றிரண்டு சீர்களில் மட்டும் கலித்தளை உள்ளது, ஆனால், அடியில் தெளிவான பொருள் அமையவில்லை!
கல்வெட்டுகளில் துணைக்கால்களும் ரகரங்களும் ஒன்று போலவே இருக்கும், அதை மனத்தில் வைத்துக்கொண்டு கொஞ்சம் சொற்களை மாற்றி அமைத்துப் பார்த்தேன்:
வரை - வா, பாத - பாத் / பரத், தொ - தெர் / தேர்...
‘நெடுவாமான் பாத்தேர் மலையன் மலர்மடந்தை’ என்பது கொஞ்சம் பொருத்தமாக இருப்பதாய்த் தோன்றியது, சட்டென ‘வாமா’ என்பது ஈற்றடியின் ‘கோமான்’ என்பதனோடு எதுகை பெற்றிருப்பதை உணர்ந்தேன், ‘வாமா - மலையன்’ ஆகியன மோனைக்கும் பொருந்துகின்றன, எனவே ‘நெடு’ என்பதை முன்னுள்ள தனிச்சொல்லோடு சேர்த்துக்கொண்டு எழுதினேன்:
தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி
சீலந் தருமரபிற் செய்தமைத்தான் - கோலநெடு
வாமான் பாத்தேர் மலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்
ஆனால் தளைதட்டுகிறதே! எனவே ‘வாமான பாத்தேர்’ என்றோ, ‘வாமான்பாத் தேரு’ என்றோ எழுத வேண்டியதாகிறது!
தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி
சீலந் தருமரபிற் செய்தமைத்தான் - கோலநெடு
வாமான பாத்தேர் மலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்
என்று வைத்துக்கொண்டேன். இப்போது மீண்டும் முதலடிக்கு வர வேண்டும்!
’சீலம்’ என்பதனோடு எதுகை அமைவதற்கு ஏற்ப முதற்சீர் ‘தோல்நிகழ்’ என்று இருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால், ‘தொல்நிகழ்’ என்பதில் அமையும் சிறப்பான பொருள் ‘தோல்நிகழ்’ என்பதில் இல்லை! மேலும் தொ/தோ -க்குச் சரியான மோனை முதலடியில் எங்குமே இல்லை! எனவே, இது ‘தொ’-தானா என்ற ஐயம் எழுந்தது! கல்வெட்டுப் படத்தைக் கொஞ்சம் (ரொம்ப நேரம்!) உற்றுப் பார்த்தேன், ஒரு ‘யுரேகா’ கணம் வாய்த்தது!
‘தொ’ என்று படிக்கப்பட்டிருப்பது ‘ஞா’-வாகக் கூட இருக்கலாம் என்று பிடிபட்டது! கல்வெட்டுகளில் ஞகரத்தைக் கொஞ்சம் கழுத்தை நீட்டும் ஒட்டகச்சிவிங்கியைப் போலத்தான் எழுதுவர் (இகரமும் இதனோடு ஒத்தே இருக்கும்!), ’தொ’ அல்ல ’ஞ’ என்றதும் கச்சிதமாகப் பொருந்திக்கொள்ளும் புதிரின் பாகங்களைப் போலப் பாடல் அமைந்தது:
ஞால நிகழு நரசிங்கப் புத்தேரி
சீலந் தருமரபிற் செய்தமைத்தான் - கோலநெடு
வாமான பாத்தேர் மலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்.
’ஞால - நரசிங்க’ மோனை, எனவே ‘நிகழ்’ என்பது இரண்டாம் சீர் என்றாகிறது, ஆனால் அது ஓரசை, எனவே அதை ‘நிகழு(ம்)’ என்று கொண்டேன், ‘நிகழ’ என்றும் கொள்ளலாம்!
அழகான நேரிசை வெண்பாவைக் கண்டதும் உள்ளம் எய்திய உவகையை உரைப்பது இயல்வதல்ல!
அடுத்ததாகப் பாடலுக்குப் பொருள்கொள்ள முனைந்தேன்:
உலகத்தில் (ஞாலம்) புகழொடு விளங்கும் (நிகழும்) நரசிங்கப் புத்தேரி (என்ற இடத்தில் வசிக்கும்), புகழ் மிக்க மரபில் வந்தவன் (சீலம் தருமரபு) (இவ்வேரிக்கரையைச்) செய்தமைத்தான் (அல்லது, ’புத்தேரியைச் செய்தமைத்தான்’ என்றும் கொள்ளலாம்!)...
மலையன் ஆன பழுவையர் அரசன் (கோன்), அவன் பூமகளின் கணவன் (மலர்மடைந்தை கோமான்).
செய்தி தெளிவு, ஆனால், மூன்றாமடிதான் முழுதாகப் பொருள் விளங்கவில்லை (இவ்வாசிப்பை இன்னும்கூட சீர் செய்ய இடமுள்ளது போல!)
‘கோலநெடு வாமான பாத்தேர்’ என்பதை வாமன அவதாரத்தோடு தொடர்புபடுத்திக்கொள்ளலாமோ என்பது எனது ஊகம்! ’பாத்தேர்’ என்பது புலவர்களின் கவிதைகளை விரும்புபவன் என்பதாக இருக்கலாம், அன்றேல் ‘பார்த்தேர்’ என்று கொண்டு, உலகை அடைந்தவன், முன்பு உலகை அளந்து தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட வாமனரிடமிருந்து உலகை அடைந்தவன் என்று கொள்ளலாம்! (ஆனால், ‘மலர்மடந்தை கோமான்’ என்று மீண்டும் வருவதால், ‘பார்த்தேர்’ என்பது அத்தனை பொருத்தமாக இல்லை!)
கவிதையின் முழுப்பொருளை உணர்ந்து சுவைப்பதில் சிறிய தடை இருந்தாலும், கல்வெட்டு வெண்பாதான் என்பதிலும், அது சொல்லும் செய்தியிலும் ஐயமில்லை!
வெண்பாவின் இலக்கணங்களைக் கணிப்பொறியியலில் உள்ள ‘சமன் சரிபார்ப்பை’ (parity check) போலக் கொண்டு ஒரு கல்வெட்டு வாசிப்பைச் சீர்செய்து கொடுத்த இந்தத் துய்ப்பு (அனுபவம்) எனக்கு மிகுந்த சுவாரசியமானதாக இருந்தது! அதை இயன்றவரை உங்களுக்கும் கடத்த முயன்றுள்ளேன், தற்பெருமை வாடை வீசியிருக்கும், பொறுத்துக்கொண்டு படித்ததற்கு நன்றி!
இப்பணியில் என்னை ஈடுபடுத்தி இதற்கும் வேறுபல பணிகளுக்கும் எங்களுக்குத் துணையாக இருந்து கற்பித்தருளும் கல்வெட்டுக் களஞ்சியம் முனைவர் சு. ராசகோபால் ஐயா அவர்களுக்கும், இக்கல்வெட்டையும் அதன் புகைப்படங்களையும் பயன்படுத்த அனுமதி கொடுத்த இவற்றைக் கண்டறிந்த திரு. பாலமுருகன் (திருவண்ணாமலை) அவர்களுக்கும், ஆவணம் இதழின் பதிப்பாளர்களாகிய தொல்லியல் கழகத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
-விசயநரசிம்மன்